கொள்கை முடிவுகளை அதிகாரிகள் எப்படி எடுக்க முடியும்?


கொள்கை முடிவுகளை அதிகாரிகள் எப்படி எடுக்க முடியும்?
x
தினத்தந்தி 21 May 2021 7:00 PM GMT (Updated: 21 May 2021 7:00 PM GMT)

நாடு முழுவதும் இப்போது பரபரப்பாக பேசப்படுவது, புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய மந்திரி கூட்டிய கூட்டத்தில், தமிழக அரசின் கல்வித்துறை செயலாளர் கலந்து கொள்ளாததுதான்.

இந்தியா முழுவதும் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்துவது,  கொரோனா பாதிப்பு சூழ்நிலை, ஆன்லைன் மூலம் கல்வி ஆகியவை பற்றி விவாதிக்க, மாநில பள்ளிக்கல்வி துறை செயலாளர்கள் கூட்டத்தை, மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் கூட்டி இருந்தார். தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனடியாக இந்த விஷயத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றார். புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அதிகாரிகளை மட்டும் கலந்து கொள்ள அழைப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று முதல்-அமைச்சர் கருத்து தெரிவித்தார். இதையடுத்து, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனடியாக மத்திய கல்வித்துறை மந்திரிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், மாநில கல்வி அமைச்சரும் கலந்து கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கூறி இருந்தார். ஆனால் இந்த கடிதத்துக்கு மத்திய மந்திரி பதில் அளிக்காததால், தமிழக அரசின் சார்பில் பள்ளிக்கல்வித் துறை செயலாளரும் இதில் கலந்து கொள்ளவில்லை.

தமிழக அரசை பொறுத்தமட்டில், இந்த கூட்டத்தை புறக்கணிக்கவில்லை. ஆனால் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்கு பதில் அளிக்காததால் நாங்கள் கலந்து கொள்ளவில்லை என்று அமைச்சர் கூறினார். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், இதுவரை பொறுப்பில் இருந்த அ.தி.மு.க. அரசாக இருந்தாலும் சரி, இப்போது பொறுப்பேற்று இருக்கும் தி.மு.க. அரசாக இருந்தாலும் சரி, தேசிய கல்விக் கொள்கையை ஏற்று கொள்ளவில்லை. அ.தி.மு.க. அரசை பொறுத்தமட்டில், இந்த கல்வி கொள்கை குறித்து ஆராய உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் ஒரு குழுவும், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் ஒரு குழுவும் நியமித்து இருந்தது. அதனைத்தொடர்ந்து புதிய கல்விக்கொள்கையை ஏற்று கொள்கிறோம் என்றோ, ஏற்று கொள்ளவில்லை என்றோ எந்த முடிவையும் அ.தி.மு.க. அரசு தெரிவிக்கவில்லை.

தி.மு.க.வை பொறுத்தமட்டில் 2019-ம் ஆண்டு மத்திய அரசாங்கம் புதிய கல்வி கொள்கைக்கான நகல் வெளியிட்ட உடனேயே, அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து ஒரு விரிவான பதிலை உரிய ஆலோசனைகளோடு வழங்கினார். புதிய கல்வி கொள்கை குறித்து தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும், ‘ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கை தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சமூக நீதி மற்றும் மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு கூறுளை அழித்தொழிப்பதாக அமைத்துள்ளதால் தி.மு.க. அதனை முற்றிலும் நிராகரிக்கிறது. தமிழகத்துக்கு என தனியே மாநில கல்வி கொள்கை உருவாக்கப்படும். இதற்கென கல்வியாளர்களை உள்ளடக்கிய உயர்நிலை குழு அமைக்கப்பட்டு உரிய பரிந்துரைகள் அடிப்படையில் இக்கொள்கை உருவாக்கப்படும்’ என்று தெளிவாக கூறப்பட்டு இருக்கிறது.

எனவே, தி.மு.க.வை பொறுத்தமட்டில் தேசிய புதிய கல்வி கொள்கையை ஏற்று கொள்ளவில்லை. இது அரசின் கொள்கை முடிவு. ஏற்று கொள்ளாத கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலாளர் என்ன கருத்தை கூற முடியும். இல்லாத ஊருக்கு போகாத வழியை பற்றி ஆராய்ந்து என்ன பயன்?. மேலும் கொள்கை முடிவுகளை அரசின் சார்பில் அமைச்சர்தான் எடுக்க முடியுமே தவிர, அதிகாரிகள் நிச்சயமாக எடுக்க முடியாது. இதுபோன்ற கூட்டங்களில் முதலில் அமைச்சர்களை அழைத்து ஒரு பொதுவான கொள்கையை உருவாக்கிய பிறகு, அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிப்பதுதான் சரியான நடைமுறையாக இருக்கும் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது.

Next Story