கஷ்டம்தான் ஊரடங்கு ; ஆனால் கட்டாயம் இருக்கிறதே!


கஷ்டம்தான் ஊரடங்கு ; ஆனால் கட்டாயம் இருக்கிறதே!
x
தினத்தந்தி 23 May 2021 7:30 PM GMT (Updated: 23 May 2021 7:30 PM GMT)

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், தமிழ்நாட்டில் காலெடுத்து வைத்த கொரோனாவின் தாக்குதல் இன்னும் குறையவில்லை.

இப்போது தினசரி பாதிப்பு 36 ஆயிரத்தை எட்டிக்கொண்டிருக்கும் நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் வெகு வேகமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. இப்படியே போனால் என்னவாகுமோ? என்ற அச்சம் எல்லோருடைய மனதிலும் ஏற்பட்டிருக்கிறது.இந்தியாவில் இப்போது தாக்கிக்கொண்டிருக்கும் கொரோனாவின் 2-வது அலை, எப்போது குறையும்? என்று அமெரிக்க ஜனாதிபதியின் தலைமை மருத்துவ ஆலோசகரும், அமெரிக்க தேசிய தொற்றுநோய் நிறுவனத்தின் இயக்குனருமான அந்தோணி எஸ்.பவுசியிடம் கேட்டபோது, “எங்கெங்கு கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறதோ, அந்த மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்படவேண்டும். நீங்கள் வெகுகாலத்திற்கு ஊரடங்கை பிறப்பிக்க வேண்டாம். கொரோனா பரவல் சங்கிலியை உடைத்தெறிய போதுமான காலம்வரை ஊரடங்கு கொண்டு வருவது நல்லது” என்று குறிப்பிட்டிருந்தார்.

தமிழகத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்தே, கொரோனாவை கட்டுப்படுத்துவது ஒன்றையே முழு முதல் கடமையாக கொண்டு செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே, தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் இருந்தபோதும் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், ஊரடங்கை தீவிரப்படுத்துவது தொடர்பாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் காலை மருத்துவ நிபுணர் குழுவுடனும், தொடர்ந்து அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் குழுவுடனும் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், மிக வெளிப்படையாகவும், அதே நேரத்தில் வேதனையாகவும் தன் எண்ணங்களை அவர் வெளிப்படுத்தினார்.

“ஏற்கனவே நடைமுறைப்படுத்திய ஊரடங்கால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா? என்று கேட்டால், குறைந்துள்ளதே தவிர கட்டுக்குள் இன்னும் வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும். முழு ஊரடங்கு என்பது பொதுமக்கள் நன்மைக்காகத்தான் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் உயிர்களை காக்கவே, பாதுகாக்கவே போடப்பட்டுள்ளது. அதனை உணராதவர்களாக பொதுமக்களில் சிலர் இருப்பது வேதனை தருகிறது. முழு ஊரடங்கை சிலர் ஏதோ விடுமுறை காலம் என்பதைப்போல் நினைத்து ஊர் சுற்றிவருகிறார்கள். இது விடுமுறை காலம் அல்ல, கொரோனா காலம் என்பதை உணராமல் இன்னமும் சிலர் இருக்கிறார்கள். ‘கொரோனாவை வாங்கிக் கொள்ளவும் மாட்டேன் - கொரோனாவை அடுத்தவர்களுக்கு கொடுக்கவும் மாட்டேன்’ என்று பொதுமக்கள் உறுதி எடுத்துக்கொண்டால் மட்டும்தான், இந்த நோய் தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்” என்று அவர் கூறியதை தமிழக மக்கள் ஒவ்வொருவரும் பின்பற்றினால்தான் கொரோனா நோயை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

அந்த ஒரே நோக்கத்தில்தான் தற்போது, இன்று முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக, எவ்வித தளர்வுகளும் இன்றி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்த அரசு முடிவெடுத்து முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளான மருந்தகங்கள், பால் - குடிநீர், தினசரி பத்திரிகை வினியோகம், ஓட்டல்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பார்சல் சேவை, சரக்கு வாகனங்கள் செல்ல அனுமதி, மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு இ-பதிவுடன் செல்ல அனுமதி, மருத்துவ காரணங்களுக்காக 
மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை என்பது உள்பட சில குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த முழு ஊரடங்கு என்பது நிச்சயமாக பொதுமக்களுக்கு கஷ்டம்தான். ஆனால், மக்களின் உயிர் காப்பாற்றப்படுவதுதான் முக்கியம் என்ற வகையில், இது கட்டாயம்தான். கொரோனாவை கட்டுப்படுத்த நிச்சயமாக வேறு வழியில்லை. எனவே, இந்த ஒரு வார காலமும் பொதுமக்கள் தங்கள் கஷ்டத்தை ஏற்றுக்கொண்டு, ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்கவேண்டும். அரசுத் துறைகளும் இதை செயல்படுத்துவதில் முழு மூச்சாக இருக்கவேண்டும். இந்த ஊரடங்கு வெற்றிகரமாக முடிந்து, கொரோனா பரவல் சங்கிலி துண்டிக்கப்பட்டுவிட்டால், இந்த மாத கடைசியிலோ, அடுத்த மாத தொடக்கத்திலோ கொரோனா உச்சநிலைக்கு சென்றுவிடும் என்ற பயத்துக்கு இடமில்லாமல் போய்விடும்.

Next Story