பிணி நீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பணி


பிணி நீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பணி
x
தினத்தந்தி 24 May 2021 6:59 PM GMT (Updated: 2021-05-25T00:29:57+05:30)

கொரோனா பரவல் சங்கிலியை துண்டிக்க, ஏற்கனவே முன்பு 10 நாட்கள் தளர்வுகளுடன் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, இப்போது மேலும் ஒரு வாரம் தளர்வுகள் இல்லாமல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கால் முறைசாரா தொழில்களை நடத்திக் கொண்டிருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள், தங்கள் குடும்பங்களுடன் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள்.கடந்த 10 நாட்கள் கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கிலேயே எந்தவித வேலையும் இல்லாமல், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு பிழைப்பு தேடிவந்த தினக்கூலி தொழிலாளர்கள் தங்குவதற்கு இடமுமில்லாமல், வருமானமும் இல்லாமல், பிளாட்பாரத்தில் தங்கிக்கொண்டு, யாராவது கருணை உள்ளம் படைத்தவர்கள் சாப்பாடு தருவார்களா? என்று ஏங்கிக் கொண்டிருக்கும் அவலநிலையில் இருக்கிறார்கள். இங்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதிலும் அன்றாடம் வேலை செய்தால்தான் வயிற்றுக்கு சாப்பாடு என்ற நிலைமையிலுள்ள தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது மேலும் 7 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தினசரி கூலி வேலைக்கு செல்லும் சுமை தூக்கும் தொழிலாளர்கள், கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள், ரோட்டோரம் இஸ்திரிபோடும் தொழிலாளர்கள், சிறிய அளவில் காய்கறி விற்கும் தொழிலாளர்கள், ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுபவர்கள் என்று ஏராளமான தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல், சாப்பாடு இல்லாமல் அவதிப்பட்டுக் 
கொண்டிருக்கிறார்கள். “தினமும் உழைக்கிறோம். கூலி கிடைக்கிறது. அரை வயிற்று கஞ்சியாவது குடிக்கிறோம்” என்று தன்மானத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த பரிதாபத்துக்குக்குரிய தினக்கூலி தொழிலாளர்கள், இப்போது யாராவது உதவி செய்ய மாட்டார்களா?, சாப்பாடு போடமாட்டார்களா? என்று ஏங்கிக் கொண்டிருக்கும் மிக அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழக இந்து சமய அறநிலையத் துறை சார்பில், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திருக்கோவில்கள் மூலமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகளின் உதவியாளர்களுக்கு தினமும் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இதுவொரு உன்னதமான சேவை. இதைப்போல, இப்போது மேலும் ஒருவார காலம் ஊரடங்கு நீட்டிப்பால் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகியுள்ள இந்த தினக்கூலி தொழிலாளர்களின் சாப்பாட்டுக்காக, எல்லோரும் உதவ முன்வரவேண்டும். இந்துக் கோவில்கள் சார்பில் வழங்கப்படுவதுபோல, தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், நல்ல உள்ளம் படைத்தோர் இவ்வாறு ஊரடங்கினால் தொழிலையும் இழந்து, வருமானத்தையும் இழந்து வாடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு 3 
வேளையும் சாப்பாடு போடவும், முடிந்தால் தங்கும்வசதி அளிக்கவும் உதவினால்தான், உண்மையான மனிதாபிமான சேவையாக இருக்கும். “தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில், ஜகத்தினை அழித்திடுவோம்” என்று பாடிய மகாகவி பாரதியார் வாழ்ந்த தமிழ்நாட்டில், இப்போது ஊரடங்கால் யாரும் பசியும், பட்டினியுமாக இருக்கும் நிலைமை ஒருபோதும் வந்துவிடக்கூடாது. தொட்டுக்கோ.. துடைத்துக்கோ.. என்றநிலையில், சொற்ப வருமானம் ஈட்டுபவர்களாலும் இந்த ஊரடங்கை சமாளிக்க முடியவில்லை.

இந்தநிலையில், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், “பிணி நீக்கும் போர்க்களத்தில், பசி போக்கும் பணியில் ஈடுபடுவீர்” என்று தி.மு.க. தொண்டர்களுக்கு ஒரு நல்ல வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில், “முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், ‘ஒன்றிணைவோம் வா’ செயல் திட்டத்தை மேற்கொண்டு வரும் தி.மு.க.வினர் மக்களின் அடிப்படைத் 
தேவையான உணவினை வழங்கிடும் பணியில் ஈடுபடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஏழை-எளிய மக்கள், வீட்டில் சமைக்க முடியாத சூழலில் இருப்பவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட யார் யாருக்கெல்லாம் உணவு தேவைப்படுகிறது என்பதை அறிந்து, உணவை சமைத்து அவர்களுக்கு வழங்கி, பசி போக்கிடும் பெரும்பணியை மேற்கொள்ளவேண்டும். தேவைப்படுவோரின் வசிப்பிடம் அருகே சென்று வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

இது நிச்சயமாக போற்றுதலுக்குரிய செயல். மு.க.ஸ்டாலின் காட்டிய வழியை எல்லோரும் பின்பற்றி, அனைவரும் வேலையிழந்து, தங்க இடமின்றி, சாப்பிடுவதற்கு உணவின்றி, தவிக்கும் மக்களுக்கு வழங்கிடுவதுதான் இன்றைய காலக்கட்டத்தில் மிகத்தேவையான ஒன்றாகும்.

Next Story