வெளிநாட்டு தடுப்பூசிகள் கிடைப்பதில் சிக்கலா?


வெளிநாட்டு தடுப்பூசிகள் கிடைப்பதில் சிக்கலா?
x
தினத்தந்தி 25 May 2021 8:32 PM GMT (Updated: 25 May 2021 8:32 PM GMT)

இந்தியாவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி, கொரோனா பரவலின் வேகம் மிகவும் அச்சமூட்டும் வகையில் இருக்கிறது.

சர்வதேச அளவில் எடுத்துக்கொண்டால், அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தாற்போல் 3 லட்சம் உயிரிழப்புகளை தாண்டியது இந்தியாதான். உயிரிழப்புகளில், உலகளவில் இந்தியா 3-வது இடமென்றால், இந்தியாவில் தமிழ்நாடு 3-வது இடத்தில் இருக்கிறது.கொரோனா பாதிக்காமல் இருக்க வேண்டும் என்றால், தடுப்பூசி ஒன்றுதான் சிறந்த ஆயுதமாக, உலகம் முழுவதிலும் கருதப்படுகிறது. பல நாடுகளில் தடுப்பூசிகள் மிகவேகமாக போடப்பட்டு வரும்நிலையில், இந்தியாவில் தடுப்பூசி போடும் வேகம் மிகவும் மெதுவாக இருக்கிறது. ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்சின்’ தடுப்பூசி மருந்துகளை வாங்கித்தான், மாநிலங்களுக்கு மத்திய அரசாங்கம் ஒதுக்கீடு செய்துவருகிறது. “45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசு வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும். 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு மாநிலங்களே வாங்கிக்கொள்ளவேண்டும்” என்று கூறிவிட்டது.

‘கோவிஷீல்டு’ தடுப்பூசி மருந்துகள், மாதம் 6 கோடி டோஸ்களும், ‘கோவேக்சின்’ தடுப்பூசி மருந்துகள், மாதம் 2 கோடி டோஸ்களும் உற்பத்தி செய்ய திட்டமிட்டிருந்தாலும், இந்தமாதம் உற்பத்தி வெகுவாக குறைந்து, மொத்தம் 5 கோடி அளவுக்குத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷிய நாட்டு தடுப்பூசியான ‘ஸ்புட்னிக்’ மருந்து உற்பத்தி, இந்தியாவில் டாக்டர் ரெட்டிஸ் லேபாரெட்டரியால் ஜூலை மாதம்தான் தொடங்க இருக்கிறது. அதற்கிடையில், ரஷியாவில் தயாரிக்கப்பட்டு, குறைந்த அளவில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இப்போதைய சூழ்நிலையில், ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்சின்’ உற்பத்தி வெகுவாக குறைந்ததால், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிபோடும் பணிகளுக்காக, மத்திய அரசாங்கத்தின் ஒதுக்கீடும் குறைந்துவிட்டது.

தமிழ்நாட்டில், 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 பேருக்கு தடுப்பூசி போடப்படவேண்டும். இதில், 18-ல் இருந்து 45 வயதுவரை உள்ளவர்களை கணக்கிட்டால், 3 கோடியே 65 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டாகவேண்டும். ஆனால், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக 80 லட்சம் ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்சின்’ தடுப்பூசி மருந்துகளைத்தான் மத்திய அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால், தமிழ்நாட்டில் தடுப்பூசிபோடும் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவருகிறது.

இந்தநிலையில், 18-ல் இருந்து 45 வயதுவரை உள்ளவர்களுக்கு போடுவதற்காக, தமிழக அரசு தனது சொந்த நிதியில் இருந்து, இதுவரை 12.85 லட்சம் தடுப்பூசி மருந்துகளை வாங்கி இருக்கிறது. மேலும், 3½ கோடி தடுப்பூசி மருந்துகளை உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் மூலமாக இறக்குமதி செய்து, அவர்களுக்கு போடுவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவிலுள்ள ‘பைசர்’, ‘மாடர்னா’ தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள், “நாங்கள் மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசி சப்ளை செய்யமாட்டோம். மத்திய அரசாங்கத்தோடுதான் ஒப்பந்தம் செய்துகொள்வோம்” என்று கூறிவிட்டது. இதேபோன்ற முடிவை மற்ற நிறுவனங்களும் எடுத்தால், தமிழ்நாட்டுக்கு வெளிநாட்டு தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுவிடும். எனவே, மத்திய அரசாங்கமே உடனடியாக தலையிட்டு வெளிநாட்டு தடுப்பூசி மருந்து நிறுவனங்களோடு தொடர்புகொண்டு, தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசி மருந்துகளை அந்த நிறுவனங்களே நேரடியாக சப்ளை செய்யும் 
முயற்சிகளில் ஈடுபடவேண்டும். வெளிநாட்டு தடுப்பூசி மருந்துகளை மட்டும் நம்பியிருக்காமல், உள்நாட்டு தடுப்பூசி மருந்துகளை அதிகம் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளில் முழு வீச்சில் இறங்கவேண்டும். 

தமிழ்நாட்டிலேயே இப்போது மூடிக்கிடக்கும் 3 பொதுத்துறை நிறுவனங்களில் தடுப்பூசி தயாரிக்கும் வசதிகள் இருக்கிறது. இதுபோல, நாடு முழுவதிலும் எங்கெங்கு தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கும் வசதிகள் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இருக்கிறது? என்பதை ஆராய்ந்து, வெகுவிரைவில் இந்தியாவிலேயே அதிகளவில் தடுப்பூசி தயாரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். “வெளிநாட்டில் இருந்தும் இறக்குமதி செய்வோம். உள்நாட்டிலும் உற்பத்தியை பெருக்குவோம்” என்பதையே மத்திய அரசாங்கம் சூளுரையாக எடுத்துக்கொண்டு, அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கவேண்டும்.

Next Story