கோவில்களுக்கு சொந்தமான சொத்துகள் எவை? எவை?


கோவில்களுக்கு சொந்தமான சொத்துகள் எவை? எவை?
x
தினத்தந்தி 27 May 2021 10:00 PM GMT (Updated: 2021-05-28T00:07:35+05:30)

அமைச்சராக இறைபக்தியுள்ள பி.கே.சேகர்பாபுவும், ஆணையராக திறமைவாய்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெ.குமரகுருபரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

‘பேட்மிண்டன்’ விளையாட்டு என்றாலும் சரி, ‘டென்னிஸ்’ விளையாட்டு என்றாலும் சரி, இரட்டையர் ஆட்டமாக இருந்தால் ஜொலிக்கும். அதிலும், ஒரு அணியில் உள்ள 2 வீரர்களுமே திறமையானவர்களாக இருந்தால், வெற்றி நிச்சயம். அதேபோல, ஒரு அணியை இந்துசமய அறநிலையத்துறையில் இப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இறக்கிவிட்டுள்ளார். அமைச்சராக இறைபக்தியுள்ள பி.கே.சேகர்பாபுவும், ஆணையராக திறமைவாய்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெ.குமரகுருபரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த இருவரும் சேர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையில் இப்போது பெரிய சீர்திருத்தங்களை கொண்டுவந்துள்ளனர்.

தமிழக வரலாற்றில் இந்து கோவில்கள் என்பது முக்கியமான இடத்தை வகிக்கின்றது. “கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்ற நெறிமுறையில், பண்டைய காலம் தொட்டே மக்கள் தங்கள் வாழ்வை அமைத்திருக்கின்றனர். பல மன்னர்களும், இறைபக்தி மிகுந்த மூதாதையர்களும் கோவில்கள் கட்டினார்கள் என்றால், ஏராளமான மக்கள் அந்த கோவிலின் மூலவரை தங்கள் குடும்பத்தில் ஒருவராக கருதி, தங்கள் சொத்துகளை நிலமாகவும், கட்டிடமாகவும், மனையாகவும் கோவிலுக்கு எழுதி வைத்திருந்தனர். ஆனால், பிற்காலங்களில் கோவில் சொத்துகளில் நிறைய முறைகேடுகள் நடந்தன. ஆண்டுகள் உருண்டோடியதால், எது கோவில் சொத்து? என்று தெரியாதவகையில் தற்போதைய நிலைமை இருக்கிறது. குத்தகைக்கு கோவில் சொத்துகளை எடுத்தவர்களும் முறையாக வாடகை கொடுக்கவில்லை. பல கோவில்களுக்கு சொத்துகள் இருந்தாலும், முறையாக பூஜைகளோ, புனரமைப்போ, குடமுழுக்கோ செய்ய முடியாத வகையில் நிதி நெருக்கடி இருக்கிறது.

இந்தநிலையில், அறநிலையத்துறையில் இப்போது, “திருக்கோவில்களின் நிலங்கள் மற்றும் கட்டிடங்களின் விவரங்களை பொதுமக்கள் கம்ப்யூட்டர் வாயிலாக பார்வையிடுவதற்கு வசதி செய்வதற்காக ‘புவிசார் குறியீடு’ செய்து இணையத்தில் வெளியிடவேண்டும். திருக்கோவில்களின் பெயரில் உள்ள அசையும், அசையா சொத்துகளின் உரிமை ஆவணங்களை ‘ஸ்கேன்’ செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்” என்பது போன்ற உத்தரவு மட்டுமல்லாமல், ஆக்கிரமிப்புகளை அகற்றி நியாயமான வாடகை வசூலித்தல் என திருக்கோவில்களின் வருமானத்தை பெருக்கும் வகையில் விரைந்து செயல்படவும் அதிகாரிகளுக்கு ஆணையிடப்பட்டிருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், கோவில் நிர்வாகம் வெளிப்படைத்தன்மையில் இருக்கவேண்டும். அங்கு நடக்கும் வரவு, செலவுகள் எல்லாம் பொதுமக்களுக்கு தெரிந்தாகவேண்டும் என்ற வகையில், ஒவ்வொரு கோவிலின் வரவும், செலவும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. “இது, சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள வரலாற்று நடவடிக்கை. வெளிப்படைத்தன்மைதான் நல்லாட்சிக்கான முதல் படி. நல்வாழ்த்துகள்” என்று ஜக்கி வாசுதேவ் பாராட்டியுள்ளார்.

மேலும், திருக்கோவில்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை பதிவுசெய்திட ஏதுவாக, ‘கோரிக்கைகளை பதிவிடுக’ எனும் புதிய இணையவழி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், மனைகள் மற்றும் கட்டிடங்கள் தொடர்பாக பொதுமக்கள் என்ன கோரிக்கைகள், தகவல்கள் தெரிவிக்கவேண்டும்? என்றாலும் hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள முடியும். அதன் மீது 60 நாட்களில் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

இந்த 3 உத்தரவுகளுமே முத்து, முத்தான 3 நடவடிக்கைகள். முதலில் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்கள் கோவிலுக்கு உரிய சொத்துகள் எவை?, எவை? என்பதை இணையதளத்தில் பார்த்துக்கொள்ள முடியும். இப்போது யாரிடம் உள்ளது?, ஆக்கிரமிப்பில் உள்ளதா?. அதில் உரிய வருமானம் வருகிறதா? முறையான வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? என்பதை அதிகாரிகளும் அறிந்துகொள்ள முடியும். பொதுமக்களும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை துறைக்கு நேரடியாக இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள முடியும். இதை நடைமுறைப்படுத்தும் இந்துசமய அறநிலையத்துறை, ஒவ்வொரு சொத்தையும் யார்?, யார்? கோவில்களுக்கு நன்கொடையாக அளித்தார்கள் என்ற விவரத்தையும், அந்த இணையதளத்தில் தெரிவித்தால், இந்த உன்னதமான பணியை செய்த மூதாதையர்கள் பற்றியும் பக்தர்கள் தெரிந்துகொள்ள முடியும்.

Next Story