தேர்வு அல்ல; மாணவர்களின் உயிர்தான் முக்கியம்!


தேர்வு அல்ல; மாணவர்களின் உயிர்தான் முக்கியம்!
x
தினத்தந்தி 28 May 2021 7:53 PM GMT (Updated: 28 May 2021 7:53 PM GMT)

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் இருந்தே, தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் இயங்கவில்லை.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் இருந்தே, தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் இயங்கவில்லை. அதுவும் இந்த கல்வியாண்டில், மாணவர்கள் அனைவரும் ஆன்லைன், வாட்ஸ்-அப், யூ-டியூப் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடம் கற்றுவந்தார்கள். இதில், பெரும்பாலான மாணவர்களிடம் “ஸ்மார்ட் போன்” வசதியில்லாத நிலையில், அவர்கள் எல்லாம் முழுமையாக ஆன்லைன் மூலம் பாடங்களை கற்றிருப்பார்களா? என்பதும் சந்தேகத்திற்குரியதே ஆகும்.

இத்தகைய சூழ்நிலையில், ஏற்கனவே தமிழக அரசு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு உள்பட பல இறுதித்தேர்வுகளை ரத்து செய்துள்ளது. தற்போது, இந்தியா முழுவதும் மத்திய கல்வி திட்டத்தின்கீழ் பிளஸ்-2 படிக்கும் 14 லட்சத்து 30 ஆயிரத்து 247 மாணவர்கள் தேர்வு எழுத வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இதில், தமிழ்நாட்டில் இருந்துமட்டும், ஏறக்குறைய 40 ஆயிரம் மாணவர்கள் இருக்கிறார்கள். மேலும் தமிழ்நாட்டில், ஏறத்தாழ 9 லட்சம் மாணவர்கள் மாநில கல்வித் திட்டத்தின்கீழ், பிளஸ்-2 இறுதித்தேர்வை எழுத வேண்டியிருக்கிறது. ஆனால், இப்போதுள்ள கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில், இந்த தேர்வை நடத்தித்தான் ஆகவேண்டுமா? என்று ஒரு கருத்தும், இல்லை.. இல்லை.. மாணவர்களின் தகுதி அடிப்படையில் உயர் கல்விக்கு செல்வதற்கும், மேல்படிப்புக்கு வாய்ப்பு இல்லாமல் வேலைக்கு போக வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களுக்கும் வழிகளைத் திறக்கும் தேர்வு என்பதால், இதை நடத்தித்தான் ஆகவேண்டும் என்று மற்றொரு கருத்தும் நிலவுகிறது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு குறித்து, நாடு முழுவதும் ஒருமித்த முடிவை எடுப்பதற்காக, மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் சமீபத்தில் மாநில கல்வி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் கலந்துகொண்டார். தமிழக பள்ளிக்கூட கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதல்-அமைச்சரின் செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்தக்கூட்டத்தில், மத்திய அரசாங்கம் பிளஸ்-2 தேர்வு தொடர்பாக, இரு கருத்துகளை வெளியிட்டது. முதல் கருத்தாக, “ஆகஸ்டு 1-ந்தேதி முதல் குறிப்பிட்ட சில பிரதான பாடங்களுக்கு மட்டும் தேர்வு வைக்கலாம். மற்ற பாடங்களுக்கு அவர்களின் செயல்திறன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கலாம்” என்றும், மற்றொரு கருத்தாக, “ஜூலை 15-ந்தேதி முதல் ஆகஸ்டு 1-ந்தேதி வரை ஒரு கட்டமாகவும், ஆகஸ்டு 5-ந்தேதி முதல் ஆகஸ்டு 26-ந்தேதி வரை மற்றொரு கட்டமாகவும் தேர்வுகளை நடத்தலாம். தேர்வு முடிவுகளை செப்டம்பரில் வெளியிடலாம். தேர்வு நேரத்தை 3 மணி நேரம் என்பதில் இருந்து 90 நிமிடங்களாக குறைத்துக்கொள்ளலாம். தேர்வு முறைகளிலும் மாற்றங்கள் செய்யலாம். மாணவர்களை அவர்கள் பள்ளிக்கூடங்களிலேயே தேர்வு எழுதச்செய்யலாம்” என்றெல்லாம் கருத்துகளைக்கூறி, இதுகுறித்து மாநில அரசுகள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கவேண்டும் என்று கூறிவிட்டது.

தமிழக பள்ளிக்கூட கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தமிழகத்தை பொறுத்தமட்டில், பிளஸ்-2 தேர்வுகளை கண்டிப்பாக நடத்தித்தான் ஆகவேண்டும். அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். தேர்வு நடத்தவில்லை என்றால், மேற்படிப்புக்காக மத்திய கல்வி நிறுவனங்களுக்கோ, வெளிமாநிலங்களுக்கோ செல்ல விரும்பும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். ஆனால், கொரோனா பரவல் நன்றாக குறைந்த பிறகுதான் பிளஸ்-2 தேர்வு நடத்துவது பற்றி முடிவெடுக்கவேண்டும்” என்று தெளிவாகக் கூறிவிட்டார். இதுதான் பல மாநில அரசுகளின் கருத்தாக இருக்கிறது.

தேர்வா?, மாணவர்களின் உயிரா?, என்று பார்த்தால், நிச்சயமாக மாணவர்களின் விலைமதிப்பற்ற உயிர்தான் முக்கியம். “தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு, கொரோனா பரவல் முடிந்தபிறகுத்தான் நிச்சயம் நடக்கும்” என்ற உறுதிப்பாட்டில் தமிழக அரசு இருப்பது நிச்சயம் வரவேற்கத்தக்கது. மாணவர்களுக்கும் கால அவகாசம் அதிகமாக இருக்கும்போது, தங்கள் பாடத்தை முழுமையாக, சிறப்பாக கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாகவும் அமையும்.

Next Story