“ அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே! ”


“ அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே! ”
x
தினத்தந்தி 30 May 2021 10:00 PM GMT (Updated: 2021-05-30T23:48:21+05:30)

பெற்றோரை இழந்து குழந்தைகள் ஆதரவின்றி தவிக்கிறார்களா?, தேடி கண்டுபிடிக்கும் பணியில் தமிழக அரசு தீவிரம்” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

கடந்த 20-ந்தேதி ‘தினத்தந்தி’யில், “அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்; பெற்றோரை இழந்து குழந்தைகள் ஆதரவின்றி தவிக்கிறார்களா?, தேடி கண்டுபிடிக்கும் பணியில் தமிழக அரசு தீவிரம்” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. தினத்தந்தியின் செய்தியாளர்கள் ஆதரவற்றோர் இல்லங்களை தொடர்பு கொண்டு அப்படி குழந்தைகள் யாராவது அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்களா? என்று விசாரித்த போது, குழந்தைகள் நலக்குழுமம் வழியாகத்தான் எங்களிடம் இத்தகைய குழந்தைகள் ஒப்படைக்கப்படும் என்று கூறினர். குழந்தைகள் நலக்குழுமத்தை ஆன்லைன் வழியாக தொடர்பு கொண்டு கேட்ட போது, இப்போதைய சூழ்நிலையில் இதுகுறித்து தகவல்கள் வெளியிட முடியாது என்று பதில் அளித்தனர்.

தொடர்ந்து தமிழக அரசின் ஒரு உயர் அதிகாரியிடம் இதுகுறித்து கேட்டபோது, கொரோனாவால் தாய், தந்தையரை இழந்து, ஏதாவது குழந்தைகள் தவித்து கொண்டிருக்கிறார்களா? என்று தமிழக அரசின் சமூக பாதுகாப்புத்துறை ஆய்வு நடத்திக்கொண்டு இருக்கிறது என்று தெரிவித்தார். அப்படிப்பட்ட குழந்தைகளை தேடி கண்டறியும் பணியில் ஈடுபடுமாறு தொண்டு நிறுவனங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி கூறினார். கொரோனா தொற்றினால் உயிரிழந்த பெற்றோரின் குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்கிட மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் சிறப்பு பணிக்குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான, முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை விடுத்து இருந்தார். அதில், “சில குடும்பங்களில் தாய், தந்தை இருவருமே கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சூழ்நிலையில், அவர்களுடைய குழந்தைகள் கவனிப்பாரற்று இருக்கின்றனர். எனவே பெற்றோரை இழந்து பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு, தேவையானவற்றை செய்து கொடுக்க முதல்-அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என வேண்டுகோள் விடுத்து இருந்தார். இது வரவேற்புக்குரியது.

ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு முன்பே இதுகுறித்து ஆராய சனிக்கிழமை காலையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்துக்கு நேரம் ஒதுக்கீடு செய்திருந்தார். அந்த கூட்டத்துக்கு பிறகு, எல்லோருடைய மனதையும் நெகிழ வைக்கும் வகையில் மிகவும் மனிதாபிமானமிக்க அறிவிப்புகளை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அந்த அறிவிப்பில், “இதுபோல கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் பெயரில் தலா ரூ.5 லட்சம் ‘டெபாசிட்’ செய்யப்படும். அந்த குழந்தை 18 வயதை நிறைவு செய்யும்போது அந்த தொகை குழந்தைக்கு வட்டியோடு வழங்கப்படும். பெற்றோரை இழந்த குழந்தைக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும். அவர்களுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக்கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்பட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும். தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணமாக ரூ.3 லட்சம் வழங்கப்படும். அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாமல் உறவினர் அல்லது பாதுகாவலர் நாங்கள் குழந்தைகளை பார்க்கிறோம் என்று கூறி வளர்த்தால், அவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். ஏற்கனவே வேறு நோய்களில் தாய் அல்லது தந்தை இழந்து, இப்போது கொரோனா தொற்றினால் மற்றொரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் ரூ.5 லட்சம் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, ‘நீங்கள் கவலைப்படாதீர்கள், உங்களை கவனிக்க நான் இருக்கிறேன்’ என்று கருணைக்கரம் நீட்டியுள்ள முதல்-அமைச்சரின் இந்த செயல் எல்லோரையும் உணர்ச்சிவயப்பட வைக்கிறது. மனம் நெகிழ வைக்கிறது. பாராட்ட வைக்கிறது. ‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே, அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே’ என்று மு.க.ஸ்டாலினை நோக்கி கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை நிச்சயம் கூற வைக்கும்.

Next Story