எல்லா ஏரி, குளங்களையும் தூர்வார வேண்டும்!


எல்லா ஏரி, குளங்களையும் தூர்வார வேண்டும்!
x
தினத்தந்தி 2 Jun 2021 6:51 PM GMT (Updated: 2021-06-03T00:21:17+05:30)

தமிழ்நாட்டின் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது, காவிரி ஆற்றை நம்பி சாகுபடி செய்யப்படும் விவசாயம்தான்.

தமிழ்நாட்டின் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது, காவிரி ஆற்றை நம்பி சாகுபடி செய்யப்படும் விவசாயம்தான். காவிரி டெல்டா மாவட்டங்களில் 30 லட்சம் ஏக்கருக்கு மேல் உள்ள விளை நிலங்கள், காவிரி தண்ணீரை பயன்படுத்தும் விவசாயத்தை நம்பித்தான் இருக்கிறது. அங்குள்ள மக்களுக்கு விவசாயம்தான் பிரதான தொழிலாகும். ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்துவிடப்படவேண்டும் என்று ஒரு கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. அப்போதுதான், குறித்த காலத்தில் நெல் நடவு பணிகளை விவசாயிகள் தொடங்க முடியும். ஆனால், பெரும்பாலான ஆண்டுகளில் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத சூழ்நிலையில், அவ்வாறு திறக்கப்படுவதில்லை. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடியாகும். நேற்று 97.22 அடி தண்ணீர் இருந்த சூழ்நிலையில், இந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணை கட்டி முடிக்கப்பட்டு 88 ஆண்டுகள் ஆன நிலையில், குறித்த காலமான ஜூன் 12-ந்தேதியில் இந்த ஆண்டும் தண்ணீர் திறந்தால், அது 18-வது முறையாகும்.

அந்த முனைப்புடன், திருச்சி, அரியலூர், கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளில் 650-க்கும் மேற்பட்ட இடங்களில், காவிரி ஆறு, கால்வாய்களை தூர்வார தமிழக அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தூர்வாரும் பணிகளை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அதிகாரிகள் அந்தந்த மாவட்டத்தில் ஒருவார காலமோ, அல்லது தூர்வாரும் பணிகள் முடியும் வரையோ தங்கியிருந்து, பணிகளை பார்வையிட உத்தரவிடப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளில் தொடங்கப்பட இருக்கும் குறுவை சாகுபடிக்கு போதுமான அளவு நீர்பாசன வசதி கிடைக்க, இந்த தூர்வாரும் பணிகள் நிச்சயமாக உதவும். கொரோனா நேரத்தில், கடந்த ஓராண்டுக்கு மேலாக தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்பட்டு, மக்கள் வேலையில்லா திண்டாட்டத்தினால் வாடிக் கொண்டிருக்கும் நிலையில், கிராமப்புற பகுதியில் உள்ள மக்களுக்கு விவசாயம் கை கொடுத்தது. உணவு உற்பத்தி எதிர்பார்த்த அளவு நாடு முழுவதும் இருந்தது. தமிழ்நாட்டிலும் உணவு உற்பத்தி திருப்திகரமாகவே இருந்தது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் தூர்வாரும் பணிகள் சிறப்பாக நடந்ததால், இப்போது கூட பல நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பதை பார்க்க முடிகிறது. வரும் ஆண்டிலும் கிராமப்புற பகுதிகளில் விவசாயம் தழைத்தோங்கவேண்டும் என்றால், காவிரி டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து கண்காணிக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்ததுபோல, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஆறுகள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், குளம், குட்டைகளில் வடகிழக்கு பருவமழை பெய்வதற்கு முன்பாக நன்றாக தூர்வாரி ஆழப்படுத்தினால், எல்லா இடங்களிலும் கொள்ளளவு அதிகரிக்கும். தண்ணீர் தட்டுப்பாடும் நிச்சயம் இருக்காது.

ஏற்கனவே, தமிழ்நாடு சிறு கனிமங்கள் சலுகை விதிகளில், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், வாய்க்கால்கள் மற்றும் இதர நீர்நிலைகளில் உள்ள களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண்ணை, பொதுமக்கள், விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என்று இருக்கிறது. அது தொடர்பான விழிப்புணர்வை கிராமப்புறங்களில் மக்களுக்கு ஏற்படுத்தினால், மக்களே எடுத்துக்கொள்வார்கள். அதற்கு மேல், தேவையான பணிகளை அரசுத்துறைகள் செய்யலாம். இதன்மூலம் அனைத்து நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்க முடியும்.

எனவே, கொரோனா ஒழிப்பு ஒரு பக்கம் வேகமாக நடந்தாலும், அடுத்த பக்கம் விவசாயத்திற்கு கைகொடுத்துவரும் இந்த தூர்வாரும் பணிகளை அரசு வேகப்படுத்தி, வருகிற மாதங்களில் எல்லா இடங்களிலும் விவசாயம் தொய்வின்றி நடந்தால், கிராமப்புறங்களில் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். அதைத்தான் கிராமப்புற மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story