31 நாட்களிலும் முத்திரை பதித்த மு.க.ஸ்டாலின்


31 நாட்களிலும் முத்திரை பதித்த மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 8 Jun 2021 7:57 PM GMT (Updated: 2021-06-09T01:27:06+05:30)

‘ஓய்வில்லா சூரியன்’ என்று எல்லோரும் போற்றி புகழ்ந்து கொண்டிருக்கும் பெருமைக்குரியவர், மறைந்த முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி. அவர் தன் மறைவுக்கு பிறகு ‘ஓய்வில்லா சூரியன்’ என்ற புகழ் மகுடத்தை தன் மகன் மு.க.ஸ்டாலினுக்கு சூட்டி சென்றிருக்கிறார்.

‘ஓய்வில்லா சூரியன்’ என்று எல்லோரும் போற்றி புகழ்ந்து கொண்டிருக்கும் பெருமைக்குரியவர், மறைந்த முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி. அவர் தன் மறைவுக்கு பிறகு ‘ஓய்வில்லா சூரியன்’ என்ற புகழ் மகுடத்தை தன் மகன் மு.க.ஸ்டாலினுக்கு சூட்டி சென்றிருக்கிறார். கருணாநிதிக்கு பிறகு ‘ஓய்வில்லா சூரியன்’ என்று மு.க.ஸ்டாலினைத்தான் கூறவேண்டும். அந்தவகையில் அவருடைய அயராத உழைப்பை 9.1.2015-ல் நடந்த பொதுக்குழு கூட்டத்திலேயே கருணாநிதி கூறியிருக்கிறார். தி.மு.க.வை வழிநடத்திச் செல்லக்கூடிய பக்குவத்தை பெற்றுள்ள தம்பி மு.க.ஸ்டாலின் என்று குறிப்பிட்டுவிட்டு, ‘உழைப்பு, உழைப்பு, உழைப்பு- அதற்கு பெயர்தான் மு.க.ஸ்டாலின்’ என்று பிரகடனப்படுத்தினார். அந்த உழைப்பின் தன்மையை, அந்த உழைப்பின் மேன்மையை, அந்த உழைப்பின் வலிமையை நீங்கள் இன்று உணர்ந்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று பொதுக்குழு உறுப்பினர்களை பார்த்து கூறினார். அன்று அவர் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கூறிய அதே உழைப்பின் தன்மையை, அதே உழைப்பின் மேன்மையை, அதே உழைப்பின் வலிமையை இன்று தமிழகம் உணர்ந்து கொள்ளும் வகையில் கடந்த ஒரு மாதத்தில் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் என்ற முறையில் ஆற்றிய பணிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

மே மாதம் 7-ந்தேதி தமிழ்நாட்டின் 23-வது முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால் அவரது பணி, அதற்கு பிறகு மட்டும் தொடங்கவில்லை. 3-ந்தேதி அவர்தான் ஆட்சி அமைக்கப்போகிறார். அவர்தான் முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்கப்போகிறார் என்று எல்லோருக்கும் தெரிந்த நிலையில் மூத்த அதிகாரிகள் அன்றே அவரை மரியாதை நிமித்தமாக பார்க்க சென்றனர். ஆனால் அப்போதே அவர் பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம்? என்று ஆலோசனையை தொடங்கிவிட்டார். கடந்த 7-ந்தேதியோடு அவர் பதவியேற்று 31 நாட்கள் ஆகின்றன. ஆனால் இந்த 31 நாட்களிலும் ஒருநாள்கூட அவருடைய பணியின் ஒளி குறையவில்லை. பதவியேற்ற முதல்நாளிலேயே கருணாநிதி பயன்படுத்திய மை பேனாவால் முதல் 5 முத்தான திட்டங்களுக்கு கையெழுத்திட்டு, அறிவிப்புகளை வெளியிட்டார்.

கொரோனாவால் பணப்புழக்கம் இல்லாத நிலையில், மக்கள் அவதிப்பட்டு கொண்டிருந்த நேரத்தில், அவர் தேர்தல் அறிக்கையில் கருணாநிதி பிறந்ததினமான ஜூன் 3-ந்தேதி கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தாலும், மக்கள் படும் கஷ்டங்களை அறிந்து யாரும் எதிர்பார்க்காத விதமாக, அதற்கு முன்பே முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தார். அடுத்த கையெழுத்தாக ஆவின்பால் லிட்டருக்கு ரூ.3 குறைத்து, இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 3-வது கையெழுத்தாக அனைத்து மகளிரும் சாதாரண நகர்ப்புற பஸ்களில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்று கையெழுத்திட்டு, தாய்க்குலத்தை பூரிப்படையச்செய்தார். 4-வது கையெழுத்தாக மக்களின் குறைகளை தீர்க்கும் ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ என்ற தனித்துறையை உருவாக்கினார். 5-வது கையெழுத்தாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது அவர்களின் மருத்துவக்கட்டணத்தை முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஏற்றுக்கொள்ளும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

முதல் நாளில்தான் 5 அருமையான திட்டங்களை வெளியிட்டார் என்றால், அடுத்து ஒவ்வொருநாளும் ஏதேனும் சில அறிவிப்புகள், ஏதாவது ஒரு வகையில் ஆய்வுக்கூட்டங்கள், ஏதாவது ஒரு வகையில் மத்திய அரசை வலியுறுத்துதல், ஏதாவது ஒரு வகையில் நேரடி ஆய்வு, மாவட்டங்களில் சுற்றுப்பயணம் என்று ஒருநாள்கூட சூரியன் ஓய்வு எடுப்பதில்லை என்பதுபோல ஓய்வில்லாமல் 31 நாட்களையும் மக்கள் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளும் முத்தான சாதனைகளை படைத்துள்ளார். முதல் 31 நாட்களில் முத்திரை பதித்த மு.க.ஸ்டாலின், தொடர்ந்து வரப்போகும் அனைத்து நாட்களிலும் முத்திரை பதிக்கவேண்டும். கொரோனாவை மிக விரைவில் விரட்டி அடிக்கவேண்டும். தமிழகத்தின் வளர்ச்சியை உன்னத நிலைக்கு கொண்டுவரவேண்டும் என்று தமிழ் சமுதாயம் வாழ்த்துகிறது.

Next Story