தமிழ்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிக்கலாமே!


தமிழ்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிக்கலாமே!
x
தினத்தந்தி 9 Jun 2021 6:56 PM GMT (Updated: 9 Jun 2021 6:56 PM GMT)

கொரோனா 2-வது அலை பரவலை தடுக்கவேண்டும் என்றால், தடுப்பூசி ஒன்றுதான் சரியான ஆயுதம். அதனால்தான் எல்லா நாடுகளும் தங்கள் நாட்டுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கவேண்டும் என்ற வேகத்தில் முயற்சிகளை முடுக்கிவிட்டிருக்கின்றன.

கொரோனா 2-வது அலை பரவலை தடுக்கவேண்டும் என்றால், தடுப்பூசி ஒன்றுதான் சரியான ஆயுதம். அதனால்தான் எல்லா நாடுகளும் தங்கள் நாட்டுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கவேண்டும் என்ற வேகத்தில் முயற்சிகளை முடுக்கிவிட்டிருக்கின்றன. இந்தியாவிலும் இதே குறிக்கோளோடுதான் இப்போது மத்திய-மாநில அரசுகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி, இப்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், மத்திய அரசாங்கம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது. கடந்த மே 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளன. இதைமட்டும் மாநில அரசுகளே விலைக்கு வாங்கி, போட்டுக்கொள்ளவேண்டும் என்று மத்திய அரசாங்கம் கூறியது. மாநிலஅரசுகள் தடுப்பூசி வாங்குவதில் பெரும் சிரமத்தை சந்தித்தன. தமிழக அரசுகூட ரூ.100 கோடி முன்பணமாக கட்டியும் தடுப்பூசிகள் முழுமையாக வந்துசேர்ந்த பாடில்லை.

இந்தநிலையில், மத்திய அரசாங்கமே தடுப்பூசிகளை வாங்கி மாநில அரசுகளுக்கு சப்ளை செய்யவேண்டும் என்ற கோரிக்கை மாநில அரசுகளால் மட்டுமல்ல, சுப்ரீம் கோர்ட்டும் இதே கருத்தைத்தான் கூறியிருந்தது. இப்போது ஜூன் 21-ந்தேதிமுதல் மத்திய அரசாங்கமே மாநில அரசுகளுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக போடுவதற்கு தடுப்பூசிகளை சப்ளை செய்யும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். இப்போதுள்ள சூழ்நிலையில் டிசம்பர் மாதத்துக்குள் நாட்டிலுள்ள அனைவருக்கும் ஒருடோஸ் தடுப்பூசியாவது போட்டுமுடிக்கவேண்டும். அகிலஇந்திய அளவில், 23 கோடியே 90 லட்சம் டோஸ்கள்தான் போடப்பட்டுள்ளன. இதில் ஒருடோஸ் போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கையும், 2 டோஸ் போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் அடங்கும். தமிழ்நாட்டில் நேற்றுமுன்தினம் கணக்குப்படி, 97 லட்சத்து 50 ஆயிரத்து 348 டோஸ்கள் போடப்பட்டுள்ளன. எல்லோருக்கும் 2 டோஸ்கள் போடவேண்டுமென்றால், தமிழ்நாட்டுக்கு 12 கோடியே 57 லட்சத்து 39 ஆயிரத்து 910 டோஸ்களும், அகிலஇந்திய அளவில் ஏறத்தாழ 190 கோடி அளவிலான டோஸ்களும் வேண்டும். ஆனால் இப்போது மத்திய அரசாங்கம் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலிருந்தும் தருவிக்க நினைக்கும் முயற்சிகளெல்லாம் வெற்றி பெற்றால், 127 கோடி டோஸ்கள்தான் கிடைக்கும். ஆக இன்னும் நமக்கு தடுப்பூசிமருந்துகள் வேண்டும். வெளிநாடுகளிலும் இப்போது தடுப்பூசிகளின் தேவை அதிகமாக இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் உள்நாட்டில் உற்பத்தியை பெருக்குவதுதான் சாலச்சிறந்ததாகும்.

‘இருக்கும் இடத்தைவிட்டு, இல்லாத இடம்தேடி, எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே’ என்ற பழையகால திரைப்படப்பாடலுக்கு ஏற்ப தமிழ்நாட்டிலேயே தடுப்பூசி மருந்துகளை உற்பத்திசெய்ய செங்கல்பட்டு, குன்னூர், சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட் ஆகிய இடங்களில் வசதிகள் இருக்கிறது. செங்கல்பட்டிலுள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் எல்லா வசதிகளும் உள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வந்தபிறகு, பிரதமருக்கு கடிதம் எழுதினார். ஆண்டுக்கு 58 கோடியே 50 லட்சம் தடுப்பூசி மருந்துகள் இங்கு உற்பத்திசெய்யும் திறன் இருக்கிறது. ஏற்கனவே மத்திய அரசாங்கம் இதுகுறித்து ஒருவாரகாலத்தில் தன் முடிவை அறிவிக்கும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் இன்னும் தெரிவிக்கவில்லை.

இதுபோல குன்னூரில் 1907-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாஸ்டியர் தடுப்பூசி நிறுவனத்தில் ஒரு மாதத்துக்கு ஒரு கோடி தடுப்பூசி குப்பிகளை அடைக்கும்திறன் இருக்கிறது. இதுமட்டுமில்லாமல், சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டிலும் இதற்கான வசதிகள் உள்ளன. எனவே மத்திய அரசாங்கம் தடுப்பூசிகளுக்காக இங்கும், அங்கும் அலைவதை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் இந்த 3 இடங்களிலும் உடனடியாக தடுப்பூசி மருந்துகளை தயாரிக்கும் முயற்சிகளை தொடங்கவேண்டும். இப்போதுள்ள உற்பத்தித்திறனை இன்னும் அதிகரித்தால், தடுப்பூசி மருந்துகளை வெளிநாடுகள் சப்ளை செய்யாதா? என்று ஏங்கிக்கொண்டிருக்கும் எந்த அவசியமும் இல்லாத நிலை ஏற்படும். வசதிகள், வாய்ப்புகள் இருக்கும்போது அதை பயன்படுத்துவதில் ஏன் தயக்கம்? என்றுதான் தமிழகமக்கள் மத்திய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

Next Story