நடுத்தர மக்களை கை தூக்கிவிடவேண்டும்!


நடுத்தர மக்களை கை தூக்கிவிடவேண்டும்!
x
தினத்தந்தி 10 Jun 2021 8:22 PM GMT (Updated: 2021-06-11T01:52:42+05:30)

அடித்தட்டு மக்கள், நடுத்தர மக்கள், மேல்தட்டு மக்கள் என்று யாரையும் கொரோனா பாதிப்பு விட்டுவைக்கவில்லை. இதில், நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், இந்த பெருந்தொற்று குறைந்த வருவாய் பெறும் நடுத்தர மக்களை எப்படி பாதித்திருக்கிறது? என்பதை கணக்கிட ஒரு அறிவுப்பூர்வமான ஆய்வை, ஒரு வல்லுனரின் துணையோடு நடத்தியிருக்கிறார். ஜவகர் என்ற அந்த வல்லுனர், தனக்கு துணையாக பல ஆய்வாளர்களுடன் பொருளாதார ரீதியாக மாதம் ரூ.30 ஆயிரம் வருமானத்துக்கு குறைவாக வருவாய் பெறும் 1,004 பேர்களிடம் ஆய்வைநடத்தினார். ஒவ்வொருவரிடமும் 9 கேள்விகள் வைக்கப்பட்டன. இதில், 880 பேர் கடந்த 14 மாதங்களில் தங்களுடைய மாத வருமானம், ஊதியம் குறைந்திருப்பதாக பதில் அளித்தார்கள்.

758 பேர் இந்த காலக்கட்டங்களில் தங்கள் மாதச்செலவு, குடும்பச்செலவு கூடியிருப்பதாக தெரிவித்தனர். 725 பேர் தங்கள் சேமிப்பில் இருந்து பணம் எடுத்து செலவழித்திருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். 329 பேர் தங்கள் உடைமைகளை விற்றிருக்கிறார்கள் அல்லது அடமானம் வைத்திருக்கிறார்கள். 702 பேர் வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும், சுய உதவிக்குழுக்கள் மூலமாகவும், சீட்டு கம்பெனிகளிடமும், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களிடமும் கடன் வாங்கியிருக்கிறார்கள். சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கடன் வாங்கியிருக்கிறார்கள். பெரும்பான்மையானோர் வட்டிக்கு கடன் வாங்கியிருக்கிறார்கள். பலருக்கு தங்கள் கடனுக்கான வட்டியை குறிப்பிட்ட காலத்தில் கட்டமுடியுமா? என்ற சந்தேகமும்இருக்கிறது. குறைந்த வருவாய் உள்ள இந்த நடுத்தரமக்கள் எல்லாம், ஏழைகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. விண்ணில் இருந்து பார்த்தாலும், மண்ணில் இருந்து பார்த்தாலும் இந்த ஒரே உண்மைதான் புலப்படுகிறது என்கிறார் ப.சிதம்பரம்.

ஏற்கனவே 23 கோடி மக்கள் வறுமை கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டுள்ள நிலையில், புதிதாக நடுத்தர மக்களும் அந்த பட்டியலில் சேரப்போகிறார்கள் என்பது மிகுந்த கவலையை அளிக்கிறது. நேற்று வரை நடுத்தர மக்கள் பட்டியலில் இருந்த அவர்கள் இன்று தங்கள் வாழ்க்கையை நடத்த முடியாமல் விலைவாசி உயர்வு, வருமானம் இழப்பு அல்லது வருமானம் குறைவு, குடும்பத்தில் யாருக்காவது ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதனால் ஏற்பட்ட மருத்துவ செலவு என்ற பலமுனை தாக்குதல்களை சமாளிக்கமுடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். இந்தநிலையில், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனாவால் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. முதல் அலையை விட, 2-வது அலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்குகளை நீட்டித்துக்கொண்டே போவதால் பல நடுத்தர மக்கள் தங்கள் வேலையை இழந்தோ, சம்பள குறைப்பினாலேயோ அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ‘பியூ’ ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ஆய்வில், கடந்த ஆண்டு பெருந்தொற்றின் காரணமாக, 3 கோடியே 20 லட்சம் மக்கள் ஏழ்மைக்குள் தள்ளப்பட்டுவிட்டார்கள்.

ஏராளமான நடுத்தர மக்கள் வாங்கியுள்ள கடன்கள் மற்றும் வீட்டு வசதி கடன்கள் போன்றவற்றை கட்டுவதற்கான கால தவணையை தள்ளிவைக்கவேண்டும் என்று அந்த வழக்கில் கோரப்பட்டுள்ளது. வக்கீல்கள் போன்ற தொழில் நடத்துபவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிவிட்டார்கள். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிப்படைந்துவிட்டன என்றும் அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை எல்லாம் பார்க்கும்போது நடுத்தர மக்களின் பாதிப்பை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. எனவே அடித்தட்டு மக்கள் மீது கண் வைத்து, நல்ல பல உதவிகளை செய்து வரும் மத்திய-மாநில அரசுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்கள் மீதும் இரக்கம் காட்டி, கடன் தவணை தள்ளுபடி, வரிச்சலுகை, அரசின் நலத்திட்ட உதவிகளில் நடுத்தர மக்களையும் இணைத்தல் போன்ற உதவிக்கரங்களை நீட்டவேண்டும் என்பது இப்போதைய கோரிக்கையாக இருக்கிறது.

Next Story