‘ஏடிஎம்' கட்டணத்தை உயர்த்துவதா?- வேண்டாம்... வேண்டாம்...


‘ஏடிஎம் கட்டணத்தை உயர்த்துவதா?- வேண்டாம்... வேண்டாம்...
x
தினத்தந்தி 13 Jun 2021 9:07 PM GMT (Updated: 2021-06-14T02:37:28+05:30)

நாடுமுழுவதும் வங்கிகள் மூலமே அனைத்து பணபரிமாற்றங்களும் நடத்தவேண்டும் என்பது மத்திய அரசாங்கத்தின் கொள்கையாகும்.

அதன்காரணமாகத்தான் அரசு ஊழியர்களுக்கும், தனியார் ஊழியர்களுக்கும் சம்பளம், போனஸ் உள்ளிட்ட எந்த வருமானமும் வங்கிகளிலேயே போடப்படவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகள்கூட வங்கிகள் மூலமாகத்தான் பயனாளிகளுக்கு கிடைக்கிறது. ஒவ்வொருநேரமும் வங்கிகளுக்கு போய் மக்கள் பணம் எடுக்கவும், போடவும் செல்வது சிரமம் என்றவகையில் நாடுமுழுவதும் ‘ஏடிஎம்’ எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் தற்போது 2 லட்சத்து 13 ஆயிரத்து 575 ஏடிஎம் மையங்கள் இருக்கின்றன. முதலிடத்தில் உள்ள மராட்டியத்துக்கு அடுத்தாற்போல், தமிழ்நாட்டில் 24 ஆயிரத்து 315 ஏடிஎம்கள் உள்ளன.

வங்கி வாடிக்கையாளர், தான் பணம் போட்டிருக்கும் வங்கி ஏடிஎம் எந்திரங்களில் 5 முறை பணபரிவர்த்தனைகளும், மற்ற வங்கி ஏடிஎம் எந்திரங்களில் 3 முறை பணபரிவர்த்தனைகளும் கட்டணமில்லாமல் மேற்கொள்ளலாம். அதற்குமேல் பயன்படுத்தும்போதுதான், ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தநிலையில் திடீரென ஏடிஎம் மூலம் பணபரிவர்த்தனை செய்பவர்களுக்கு இப்போதுள்ள கட்டணமான ரூ.20-ல் இருந்து ரூ.21 ஆக உயர்த்த வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இதனுடன் சரக்குசேவை வரியையும் சேர்த்தால் ஒருமுறை பணம் எடுக்கும்போது, 24 ரூபாய் 78 காசு கட்டணமாக வசூலிக்கப்படும். அடுத்தாண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. 
இது நிச்சயமாக நியாயமற்றது. ஒருநபர் அவசரத்துக்கு ஏடிஎம்மில் ரூ.100 எடுக்கும்போது, அதற்கு ரூ.24.78 பரிவர்த்தனைக்கான வாடிக்கையாளர் கட்டணமாக வசூலிப்பது மீட்டர் வட்டியைவிட மோசமானது. இதுபோல ஒருவங்கியின் ஏடிஎம் கார்டை வைத்துக்கொண்டு மற்றொரு வங்கி ஏடிஎம் எந்திரத்தில் பணமெடுத்தால் அந்த வங்கிக்கு, கார்டு வழங்கியிருக்கும் வங்கி ஒரு பரிவர்த்தனைக்கு இப்போதுள்ள கட்டணமான ரூ.15-ல் இருந்து ரூ.17 ஆக உயர்த்த இருக்கிறது. இந்த நடைமுறை ஆகஸ்டு 1-ந்தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.

இங்கிலாந்து நாட்டில் ஏடிஎம்கள் மூலம் பணம் எடுப்பது 96 சதவீதம் எந்தவித கட்டணமுமில்லாமல் இலவசமாகவே நடக்கிறது. கேளிக்கைவிடுதி போன்ற சிலகுறிப்பிட்ட இடங்களிலுள்ள ஏடிஎம்களில் மட்டும் 2 பவுண்டு கட்டணம் 
வசூலிக்கப்படுகிறது. அதுவும் ஒருமுறைக்கு, இருமுறை கேட்டபிறகுதான், கட்டணம் பெறப்படுகிறது. அமெரிக்காவிலும் பெரும்பான்மையான வங்கிகள் இதற்கு கட்டணம் வசூலிப்பதில்லை. வங்கிகளில் கூட்டம் சேருவதை தவிர்க்கவும், பணிச்சுமையை குறைப்பதற்கும் கொண்டுவந்த மாற்று ஏற்பாடுதான் ஏடிஎம். இது நிச்சயமாக வங்கிகள் ஆற்றவேண்டிய சேவைகள்தான். அந்த சேவைக்கு கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல.

மேலும் ஏடிஎம்களில் எடுக்கும் பணம், வங்கிகள் ஏதும் கடனாக கொடுக்கும் பணமல்ல. மக்கள் வங்கிகளில் போட்டு வைத்திருக்கும் பணத்தை எடுப்பதற்குதான் ஏடிஎம்களை பயன்படுத்தும் நிலையில், அதற்கே கட்டணம் வசூலிப்பது என்பது நிச்சயமாக நியாயமானது அல்ல.

மக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்திருக்கும் பணத்தைத்தான் வங்கிகள் கடனாக வழங்கி வருமானம் ஈட்டுகிறது. வருமானம்தரும் மக்களின் பணத்துக்கே அவர்கள் பணம் எடுக்கும்போது கட்டணமாக வசூலிப்பது எப்படி சரியான நடைமுறையாகும்?. ஏற்கனவே வங்கிகள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் லாபத்தை ஈட்டிக்கொண்டிருக்கும்போது, இப்படி ஏடிஎம் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு கட்டணத்தை உயர்த்தி, மேலும் வருமானத்தை அதிகரிக்க நினைப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. ஏடிஎம் சேவைக்கு உடனடியாக இந்த கட்டணஉயர்வை ரத்துசெய்வதோடு மட்டுமல்லாமல், கட்டணமே வசூலிக்கக்கூடாது என்பதுதான் மக்களின் கோரிக்கை. இப்போதே பொதுமக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணத்துக்கு குறைந்தளவு வட்டிதான் கிடைக்கிறது. அப்படி இருக்கும்போது, ஏடிஎம் கட்டணத்தை உயர்த்தினால், அவர்களுக்கு வங்கிசேவை மீது நம்பிக்கை குறைந்துவிடும். வங்கிகளில் பணம் 
போடுவதற்கு தயக்கமும் வந்துவிடும். எனவே ரிசர்வ் வங்கி உடனடியாக வங்கி வாடிக்கையாளர்களை கசக்கிப்பிழியும் இந்த முடிவை கைவிடவேண்டும்.

Next Story