கோவில்களுக்கு சொந்தமான 47 ஆயிரம் ஏக்கர் நிலம் எங்கே போனது?


கோவில்களுக்கு சொந்தமான 47 ஆயிரம் ஏக்கர் நிலம் எங்கே போனது?
x
தினத்தந்தி 15 Jun 2021 10:35 PM GMT (Updated: 15 Jun 2021 10:35 PM GMT)

சரித்திரகாலம் தொட்டே தமிழக மக்கள் இறைபக்தி உள்ளவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.

அம்மன் என்றாலும் சரி, சிவன் என்றாலும் சரி, விநாயகர் என்றாலும் சரி, முருகன் என்றாலும் சரி, பெருமாள் என்றாலும் சரி மற்றும் உள்ள கடவுள்கள் யாரென்றாலும் சரி அவர்களை தங்கள் குடும்ப தலைவராகவே கருதி வழிபட்டு 
வந்தனர். அதனால்தான் முன்னோர்கள் கோவில்களுக்கென்று, நிலங்கள், மனைகள் என்று ஏராளமான தங்கள் சொத்துகளை எழுதிவைத்துவிட்டு மறைந்திருக்கிறார்கள். அவர்களின் ஒரே நோக்கம், அந்த சொத்துகளிலிருந்து கிடைக்கும் வருமானம் கோவில்களின் வழிபாட்டுக்கும் மற்றும் நிர்வாகத்துக்கும் மட்டுமே செலவழிக்கப்படவேண்டும் என்பதுதான். கோவில் சொத்துகளை யாரும் தொடக்கூடாது என்பதற்காக ‘சிவன்சொத்து குலநாசம்’ என்றுகூட சொல்லுவார்கள். ஆனால், பிற்காலங்களில் கோவில்சொத்துகள் நிறைய கபளீகரம் செய்யப்பட்டன. குத்தகைக்கு எடுத்தவர்களும் ஒழுங்காக குத்தகை கொடுப்பதில்லை. கோவில்சொத்துதானே என்ற ஒருஅலட்சியம் ஏற்படத்தொடங்கியது.

எவ்வளவோ நிலங்கள் கோவிலுக்கு சொந்தமானதாக இருந்தாலும், சில கோவில்களில் பூஜைகள் நடத்துவதற்கும், புனரமைப்பதற்கும், குடமுழுக்கு செய்வதற்கும் பணமில்லாத நிலையிருந்தது. இவ்வளவு சொத்துகள் இருந்ததே, இப்போது அதெல்லாம் எங்கே போனது? என்று எல்லோருடைய மனதிலும் ஏக்கம் இருந்தது. தமிழ்நாட்டில் தற்போது இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்து 861 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு சொந்தமான 4 லட்சத்து 78 ஆயிரத்து 272 ஏக்கர் நிலங்கள் உள்ளதாக குறிப்பேடுகளில் இருக்கிறது. இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராக பி.கே.சேகர்பாபுவும், ஆணையராக ஜெ.குமரகுருபரனும் பொறுப்பேற்றபிறகு, பல நிர்வாகச்சீர்த்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. அதில் ஒருபகுதியாக இப்போது அனைத்து கோவில்களுக்கும் சொந்தமான நிலம், கட்டிடங்கள் தொடர்பான ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. எந்தகோவிலுக்கு சொந்தமான நிலவிவரங்களையும் எப்போது வேண்டுமானாலும் பொதுமக்கள் hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று அமைச்சர் அறிவித்தார்.

“கோவில்நிலங்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுவிட்டதால் இனிமேல் யாரும் கோவில்நிலங்களை விற்கமுடியாது. அதேபோல இந்த நிலங்களை யார் பெயருக்கும் மாற்றமுடியாது. பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கும் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுவிட்டது. இனிமேல் யாரும் கோவில் நிலங்களை யார் பெயருக்கும் பத்திரப்பதிவு செய்யமுடியாது” என்று அறநிலையத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் வந்த வழக்கில் 1985-87-ம் ஆண்டுகளில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கைவிளக்கக்குறிப்பில், தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்துகோவில்களுக்கு 5.25 லட்சம் ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 2018-19, 2019-21-ம் ஆண்டுகளில் தமிழகம் முழுவதிலும் உள்ள கோவில்களுக்கு 4.78 லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே சொந்தமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே, 47 ஆயிரம் ஏக்கர் நிலம் மாயமாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்துசமய அறநிலையத்துறை விசாரணை நடத்தி கோர்ட்டுக்கு பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கின்றனர். இதுமட்டும் உண்மையாக இருந்தால், இது மிகப்பெரிய அதிர்ச்சியான தகவல் என்று நீதிபதிகள் குறிப்பிட்டுவிட்டு, அந்த 47 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் அடையாளம்கண்டு உடனடியாக இந்துசமய அறநிலையத்துறை மீட்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த 1985-87-ம் ஆண்டுகளுக்கு பிறகே, 47 ஆயிரம் ஏக்கர் நிலம் மாயமாகிவிட்டது என்றால், அதற்கு முன்பு உள்ள விவரங்களையும், ஆவணங்களையும் இந்து சமய அறநிலையத்துறை ஆராயவேண்டும். “இப்போது கோர்ட்டு உத்தரவின்பேரில், இதுகுறித்து தீவிரமாக ஆய்வுநடத்தப்பட்டு வருகிறது. விரிவான தகவல்களை கோர்ட்டுக்கு தாக்கல்செய்வோம், 47 ஆயிரம் ஏக்கர் நிலம் மாயமாகியிருந்தால் அதை மீட்டேத்தீருவோம்” என்று ஆணையர் குமரகுருபரன் உறுதியளித்துள்ளார். இந்த 47 ஆயிரம் ஏக்கர் நிலம் மட்டுமல்ல, இதற்கு முன்பு உள்ள வரலாற்றையும் இந்துசமய அறநிலையத்துறை ஆய்வு செய்து கோவில்களுக்கு சொந்தமான ஒரு அங்குலம் நிலம்கூட யாரிடமும் இருக்கக்கூடாது. உடனடியாக மீட்கப்படவேண்டும் என்பதே பக்தர்களின் 
கோரிக்கையாகும்.

Next Story