புகழ் உரைகள் இல்லாத ஆக்கபூர்வமான கவர்னர் உரை!


புகழ் உரைகள் இல்லாத ஆக்கபூர்வமான கவர்னர் உரை!
x
தினத்தந்தி 21 Jun 2021 7:57 PM GMT (Updated: 2021-06-22T01:27:50+05:30)

கவர்னர் உரை என்பது பொதுவாக அரசின் கொள்கைகளை கோடிட்டு காட்டும் உரையாகத்தான் இருக்கும். பெரிய அறிவிப்புகள் எதையும் எதிர்பார்க்க முடியாது.

ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கும். கவர்னர் உரை என்பது பொதுவாக அரசின் கொள்கைகளை கோடிட்டு காட்டும் உரையாகத்தான் இருக்கும். பெரிய அறிவிப்புகள் எதையும் எதிர்பார்க்க முடியாது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்றபின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். இந்த உரை மிகவும் வித்தியாசமான, ஆக்கபூர்வமான உரையாக இருந்தது. அரசையோ, முதல்-அமைச்சரையோ தனிப்பட்ட முறையில் புகழ்ந்து கூறும் வாசகங்கள் இடம்பெறவில்லை. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகள் பட்ஜெட்டில்தான் இடம்பெறும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில், கவர்னர் உரையிலேயே பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது ஆச்சரியத்தை கொடுத்தது. உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கொள்கைக்கு ஏற்ப, நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்லும் கூட்டு முயற்சியாளர்களாக ஒன்றிய அரசுடன், தொடர்ந்து நல்லுறவை பேணும் என்ற வரிகள் உரிமையை விட்டுக்கொடுக்காமல், மத்திய அரசுடன் நல்லிணக்கத்தோடு தமிழக அரசு செயல்படும் என்பதை பட்டவர்த்தனமாக காட்டியுள்ளது.

தமிழ் மொழியை இந்திய அலுவல் மொழிகளில் ஒன்றாக அறிவிக்க ஒன்றிய அரசை இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என்று கூறி, தமிழுக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியை அடைவதற்காக, தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்க அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக்கழகத்தின் பேராசிரியரும், நோபல் பரிசு பெற்றவருமான எஸ்தர் டப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பேராசிரியர் ரகுராம்ராஜன், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜான் ட்ரீஸ், முன்னாள் ஒன்றிய நிதிச்செயலாளர் டாக்டர் எஸ்.நாராயண் ஆகிய உலகின் தலைசிறந்த பொருளாதார அறிஞர்கள் கொண்ட முதல்-அமைச்சருக்கான ஆலோசனை குழு அமைக்கப்படும். இந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழக அரசு மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சி பெறச்செய்யும் என்ற அறிவிப்பு வரவேற்புக்குரியதாகும். பொருளாதாரம் தழைத்தால்தான் மக்களின் வாழ்வில் வளம் சேரும்.

இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் நிதிநிலையின் தற்போதைய உண்மையான நிலையை விளக்கும் வெள்ளை அறிக்கை அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று அறிவித்திருப்பதன் மூலம் தமிழ்நாட்டின் நிதிநிலை எப்படி இருக்கிறது? என்பதை சாமானியனும் தெரிந்துகொள்ளமுடியும். வேளாண்மைக்கென தனியாக பட்ஜெட், முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் தொடங்கப்படும், கிராமப்புற சந்தைகள் உருவாக்கப்படும், வாகனங்கள் மூலம் மக்களுக்கு வீட்டிலேயே காய்கறிகளும், பழங்களும் விற்பனை செய்யப்படும் திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படும் என்பதெல்லாம் விவசாயிகளுக்கு பெரும் பயனளிப்பதாக அமையும். ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த அனைவருக்கும் 15 நாட்களுக்குள் ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்படும் என்பது மகிழ்ச்சிகரமான அறிவிப்பாகும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுக்க தொழிலதிபர்கள், வங்கியாளர்கள், நிதித்துறை வல்லுனர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.

தொடக்கத்தில் இருந்தே மு.க.ஸ்டாலின், நிபுணர்களின் ஆலோசனையை பெற்றே அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது போற்றுதலுக்குரியது. தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும், அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற அறிவிப்பு மாணவர்களுக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தும். 48 பக்கங்கள் அடங்கிய இந்த உரை முழுவதுமே முத்து, முத்தான அறிவிப்புகளை கொண்டதாக, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக இருக்கிறது. கவர்னர் உரையிலேயே இவ்வளவு அறிவிப்புகள் இருக்கிறது என்றால், தேர்தல் அறிக்கையில் மு.க.ஸ்டாலின் அறிவித்த வாக்குறுதிகள் பல பட்ஜெட்டில் இடம்பெறும் என்பதை இந்த உரை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

Next Story