3-வது அலையை கொண்டுவந்துவிடுமா ‘டெல்டா பிளஸ்’ ?


3-வது அலையை கொண்டுவந்துவிடுமா ‘டெல்டா பிளஸ்’ ?
x
தினத்தந்தி 24 Jun 2021 8:59 PM GMT (Updated: 24 Jun 2021 8:59 PM GMT)

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மக்களின் அன்றாட வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டது கொரோனா. வாழ்க்கையில் வேறு எந்த குறிக்கோளும் இல்லாமல், கொரோனா வந்துவிடக்கூடாது என்ற கவலையிலேயே பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மக்களின் அன்றாட வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டது கொரோனா. வாழ்க்கையில் வேறு எந்த குறிக்கோளும் இல்லாமல், கொரோனா வந்துவிடக்கூடாது என்ற கவலையிலேயே பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். கொரோனாத்தொற்று அலை, அலையாய் வருகிறது. முதல் அலை பாதிப்பு அதிகமாகி, பிறகு குறைந்த நிலையில், கொரோனா இதோடு முடிந்துவிடும் என்ற மகிழ்ச்சியில் மக்கள் திளைத்தனர். இந்தாண்டு பிப்ரவரி மாதம் 20-ந்தேதி 438 பேர் மட்டும் தமிழகத்தில் பாதிக்கப்பட்டநிலையில், இப்படியே குறைந்து பூஜ்யமாகிவிடும் என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், ‘விட்டேனா பார்’ என்று கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகமாகத்தொடங்கியது.

கடந்த மே மாதம் 23-ந்தேதி 35 ஆயிரத்து 483 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில், மு.க.ஸ்டாலின் அரசு, ஊரடங்கு நடவடிக்கைகளை எடுத்ததன் காரணமாக இப்போது பாதிப்பு குறைந்துகொண்டே வருகிறது. நேற்று பாதிப்பு 6 ஆயிரத்து 162 ஆக இருந்தது. இனி இப்படியே குறைந்துவிடும் என்று எதிர்பார்த்திருக்கும் சூழலில் 3-வது அலையும் வந்துவிடுமோ? என்ற அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது. காரணம் ‘டெல்டா பிளஸ்’ என்ற உருமாறிய கொரோனாதான். கொரோனா வைரஸ் கிருமி எப்போதும் தன்னை உயிர்ப்புடன் வைத்துக்கொண்டிருக்க உருமாறிக்கொண்டே இருக்கும்.

இந்தியாவில் 2-வது அலை பேரழிவுக்கு காரணமான ‘டெல்டா’ என்ற உருமாறிய கொரோனா முதலில் மராட்டிய மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, தொடர்ந்து நாடுமுழுவதும் தன் கோரத்தாக்குதலை தொடங்கியது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேருக்கு இந்த புதியவகை ‘டெல்டா’ கொரோனா தொற்று தாக்குதல்தான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘டெல்டா’ வகையான கொரோனா தொற்று மிகவும் வீரியமிக்க ஒன்று. அதனால்தான் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கும் இதனால் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் ‘டெல்டா’ வகையாக இருந்தாலும் சரி, அதிலிருந்து இப்போது உருமாறிய ‘டெல்டா பிளஸ்’ என்ற கொரோனாவாக இருந்தாலும் சரி தடுப்பூசி போட்டுக்கொண்டால் 90 சதவீதம் நம்மை தற்காத்துக்கொள்ளமுடியும் என்கிறார் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம்.

இத்தகைய சூழ்நிலையில், ‘டெல்டா’ மட்டுமல்ல, அதிலிருந்து உருமாறிய ‘டெல்டா பிளஸ்’ என்ற ஆபத்தான தொற்றும் இப்போது புதிதாக பல மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டநிலையில், சென்னையிலும் 32 வயது நர்சு ஒருவர் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளார். மேலும் பலருடைய சளி மாதிரிகள் பரிசோதனைக்கு பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. உடனடியாக ‘டெல்டா பிளஸ்’ தொற்றை கட்டுப்படுத்தவில்லை என்றால், 3-வது அலை இன்னும் 6 முதல் 8 வாரங்களில் தாக்கக்கூடும் என்று டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.

மக்கள் அதிகமாக கூட்டம் கூடுதல், சமூக இடைவெளி இல்லாமல் இருத்தல் போன்றவற்றை தடுத்து, பரிசோதனைகளை அதிகப்படுத்தி, தடுப்பூசி போடுவதை இன்னும் அதிகமாக்கவேண்டும் என்பதையே பாதுகாப்பு நடவடிக்கையாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். டெல்டா பிளஸ் தொற்று வராமல் இருக்க ஏற்கனவே உள்ள முககவசம் அணிதல், சமூகஇடைவெளி, தடுப்பூசிகளே போதும் என்கிறார், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன். 3-வது அலை வந்தால் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்ற நிலையில், தடுப்பூசிகள் போடும் வேகத்தை இன்னும் அதிகரிப்பது மத்திய அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒேர நாளில் 4 லட்சத்து 32 ஆயிரத்து 44 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. எனவே மக்கள் தயாராக இருக்கிறார்கள். தடுப்பூசி போடுவதற்கான வசதிகளும் தமிழகத்தில் இருக்கிறது. அதை கருத்தில்கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மாதத்துக்கு 2 கோடி டோஸ்கள் வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், 3-வது அலை பாதிப்பில் இருந்து தமிழகம் தப்பித்துக்கொள்ளமுடியும்.

Next Story