மாநில வளர்ச்சிக்கு துணைநின்ற அதிகாரிகளை நினைவு கூறுவோம் !


மாநில வளர்ச்சிக்கு துணைநின்ற அதிகாரிகளை நினைவு கூறுவோம் !
x
தினத்தந்தி 25 Jun 2021 8:40 PM GMT (Updated: 25 Jun 2021 8:40 PM GMT)

பொதுவாக மத்திய-மாநில அரசுகளை சிறப்பாக வழிநடத்தி, புது திட்டங்களை கொண்டுவந்து மக்களின் வாழ்வில் வளம்சேர்த்த பிரதமர்கள், மத்திய மந்திரிகள், மாநில முதல்-அமைச்சர்கள், அமைச்சர்களை சமுதாயம் ஒருபோதும் மறப்பதில்லை.

பொதுவாக மத்திய-மாநில அரசுகளை சிறப்பாக வழிநடத்தி, புது திட்டங்களை கொண்டுவந்து மக்களின் வாழ்வில் வளம்சேர்த்த பிரதமர்கள், மத்திய மந்திரிகள், மாநில முதல்-அமைச்சர்கள், அமைச்சர்களை சமுதாயம் ஒருபோதும் மறப்பதில்லை. அதேநேரத்தில் இந்த திட்டங்களை எல்லாம் செயல்படுத்திய சீர்மிகு சிறப்புவாய்ந்த அதிகாரிகளின் பெயர்கள் காலப்போக்கில் மங்கிவிடுகின்றன. ஆனால் வனத்துறையில் ஆனைமலை பகுதியில் காடுகளை உருவாக்கிய ஒரு ஆங்கிலேயே அதிகாரியை இன்னும் வனத்துறையினர் மறக்காமல் இருப்பதும், அவருக்கு மரியாதை செலுத்துவதும் மிகவும் போற்றுதலுக்குரியதாக இருக்கிறது.

மலைப்பகுதிகளில் மரங்களை வெட்டுவது இப்போது நேற்று அல்ல, ஆங்கிலேயர் காலத்திலேயே தொடங்கியிருக்கிறது. வெள்ளைக்காரர்கள் நம் நாட்டுக்கு வரும்முன்பு ஆனைமலையிலுள்ள வனப்பகுதிகளில் தேக்குமரங்களும், கருங்காலி மரங்களும் அடர்த்தியாக வளர்ந்து மிகச்செழிப்புடன் இருந்தது. ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டின் கடற்படைக்கு கப்பல் கட்டுவதற்காக இந்த மரங்களையெல்லாம் வெட்டி, பம்பாய்க்கு அனுப்பிவைத்தனர். 1800-ம் ஆண்டிலிருந்து 1900-ம் ஆண்டுகள்வரை ஆனைமலை முழுவதுமே அழிக்கப்பட்டது. டிராம் மூலமாக ஆனைமலை டாப்சிலிப்பிலிருந்து பரம்பிகுளம் வழியாக இந்த மரங்களை வெட்டிக்கொண்டு சென்றனர். இந்தநேரத்தில் 1915-ம் ஆண்டு ஹீயூகோ பிரான்சிஸ் ஆண்ட்ரூ உட் என்ற ஒரு ஆங்கிலேய அதிகாரி, கோவை மாவட்டத்தில் வன அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ‘ஹீயூகோ உட்’ என்று இன்றும் எல்லோராலும் நினைவுகூறப்படும் ஸ்காட்லாந்து நாட்டு பெற்றோருக்கு பிறந்த அந்த அதிகாரி, வனங்கள் சீரழிவதை கண்டு வேதனையுற்றார்.

ஹீயூகோ எப்போதுமே தன் சட்டையிலுள்ள 4 பைகளிலும், கால்சட்டையிலுள்ள 2 பைகளிலும் ஏராளமான தேக்கு விதைகளைப்போட்டு காடு முழுவதும் நடந்து செல்லும்போது தன் கையிலுள்ள ‘வாக்கிங் ஸ்டிக்’கால் ஒருகுழியைத்தோண்டி ஒரு விதையைப்போட்டு மூடிக்கொண்டே செல்வது வழக்கம். ஒருமுறை ஆங்கிலேய அரசாங்கம் முதல் உலகப்போருக்காக கப்பல்கள் கட்ட ஆனைமலையில் மிச்சம் மீதியிருக்கும் மரங்களை வெட்ட உத்தரவிட்டபோது, அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். ஒரு நாள்முழுவதும் இவ்வாறு விதைகளை ஊன்றிக்கொண்டுசெல்வது, நல்ல மழைபெய்யும் அந்த மலைப்பகுதியில் வெகு சீக்கிரத்தில் பலன் கொடுத்தது. எல்லா இடங்களிலும் அவர் நட்டிய மரக்கன்றுகள் மிகச்செழிப்பாக வளரத்தொடங்கியது. அவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றபிறகும், ஆனைமலை டாப்சிலிப்பிலேயே வாழ்ந்தார். அவர் இறந்தபிறகு அந்த மலைப்பகுதிகளிலேயே புதைக்கவேண்டும் என்று கேட்டிருந்தார். அங்கேயே அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த கல்லறையில் ‘நீங்கள் என்னை பார்க்க விரும்பினால் சுற்றிப்பாருங்கள்’ என்று எழுதப்பட்டுள்ளது. அந்த கல்லறையை சுற்றிப்பார்த்தால், அவர் நட்ட மரங்களான அடர்ந்த வனம்தான் தெரிகிறது.

வனத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளும், அலுவலர்களும் தங்கள் பயிற்சியின்போது, அங்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு அவரது 151-வது பிறந்தநாள் வனத்துறை அதிகாரிகளால் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவர் கல்லறையில் வனத்துறை அலுவலர்கள் உணர்ச்சிப் பொங்க ‘சல்யூட்’ அடித்து மரியாதை செலுத்தினார்கள். ஹீயூகோ உட் போல, தங்கள் பணியில் முத்திரை பதித்த அதிகாரிகளை சமுதாயம் மறக்கக்கூடாது. இதுபோல ஒவ்வொரு துறையிலும் பல அதிகாரிகளின் செயல்பாடு முத்திரை பதித்திருக்கிறது.

பெருந்தலைவர் காமராஜர் ஏழை மாணவர்களுக்காக இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தபோதும், கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தியபோதும் அவரது குறிப்பறிந்து திறமையாக பணியாற்றி, வெற்றிகரமாக செயல்படுத்தியவர் பொதுக்கல்வி இயக்குனர் நெ.து.சுந்தரவடிவேலு. இதுபோல தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்தவர்கள் மறைந்த எப்.வி.அருள், ஸ்ரீபால் போன்றவர்கள். இப்படி ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளை ஆண்டுகள் பல கடந்தாலும் மறக்காமல் மரியாதை செய்தால், அடுத்தடுத்த தலைமுறைகளில் பணியாற்ற வருபவர்களுக்கு அவர்கள்போல நாமும் பணியாற்றி பெயர் வாங்கவேண்டும் என்ற உற்சாகமும், உத்வேகமும் பிறக்கும். எல்லா துறைகளிலும் இதுபோன்ற அதிகாரிகள் ஒருவர், இருவர் அல்ல. எல்லோருமே அதுபோன்ற பெயர் பெறவேண்டும் என்பதே சமுதாயத்தின் நோக்கமாக இருக்கிறது.

Next Story