இயல்பு வாழ்க்கை நெருங்குகிறது!


இயல்பு வாழ்க்கை நெருங்குகிறது!
x
தினத்தந்தி 27 Jun 2021 9:02 PM GMT (Updated: 2021-06-28T02:32:40+05:30)

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிட்டது. இதுவரையில் இல்லாத அளவு மக்கள் எப்போதும் முககவசம் அணியவேண்டும் என்ற கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

யாருடைய முகத்தையும் முழுமையாக பார்க்கமுடியவில்லை. ஆனால் கொரோனாவையும் கட்டுப்படுத்தவேண்டும். அதேநேரத்தில் மாநிலத்தின் பொருளாதார வீழ்ச்சி, மக்களின் வாழ்வாதாரம், தொழில் வளர்ச்சியை மீட்டெடுக்கவேண்டும் என்ற சீரிய நோக்கத்தில் வாரா வாரம் ஊரடங்குகள் சற்று கூடுதல் தளர்வுகளோடு நீட்டிக்கப்பட்டுக்கொண்டேவருகிறது. இந்தநிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை முதல் 5-7-21 காலை 6 மணி வரை ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் மேலும் பல தளர்வுகளை அறிவித்து, ஊரடங்கை நீட்டித்துள்ளார். கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா 
தொற்று அதிகம் இருந்த காரணத்தால், பல கடைகள் அடைக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், இப்போது காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்கப்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய கொரோனா தொற்று குறைந்து வரும் 3-வது வகை மாவட்டங்களை தவிர, மீதம் 2-ம் வகையில் உள்ள 23 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட கடைகள் செயல்பாடுகளுக்கு மாலை 7 மணி வரை நேரத்தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இதுவரை பஸ் வசதி இல்லாத நிலையில், இப்போது மாவட்டங்களுக்குள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் குளிர்சாதன வசதி இல்லாமலும், 50 சதவீத இருக்கைகளோடு மட்டும் பஸ்களில் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. 3-வது வகையில் உள்ள 4 மாவட்டங்களிலும், மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த 4 மாவட்டங்களில், இப்போது கூடுதலாக அனைத்து துணிக்கடைகள், நகைக்கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், தர்காக்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுதலங்களையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அனைத்து கடற்கரைகளிலும் காலை 5 மணி முதல் 9 மணி வரை நடைபயிற்சி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுவது மாநிலம் முழுவதிலும் அந்த தொழிலை நம்பி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் மக்களுக்கு வருமானம் ஈட்ட பெரும் பயனளிக்கும். 2-ம் வகை மற்றும் 3-ம் வகை மாவட்டங்களுக்கிடையே திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ் பதிவு இல்லாமல் பயணிக்கலாம். ஆனால் முதல்வகை மாவட்டங்களில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு பயணிக்க இ-பாஸ் பெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் எல்லாம் மிகவும் வரவேற்கத்தக்கவை. சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜவுளிக்கடை, நகைக்கடை போல 2-ம் வகையில் உள்ள 23 மாவட்டங்களிலும் இன்று முதல் திறக்க அனுமதிக்கப்படும் என்று நேற்று இரவு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு மக்களுக்கு இந்த 2 கடைகளும் திறந்திருப்பது மிகவும் வசதியாக இருக்கும். அரசு மேலும் தளர்வுகளை அறிவிக்கவேண்டும் என்றால் இன்னும் கொரோனா தொற்று வேகமாக குறையவேண்டும். டெல்டா பிளஸ் தலையெடுத்துள்ள இந்த நேரத்தில் மக்கள் மிக, மிக எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். கவிஞர் வைரமுத்து இந்த தளர்வு குறித்து டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “தமிழ்ப் பெருமக்களே! ஊரடங்கில் தளர்வு என்பது சர்வ விடுதலையன்று, தாய் தன் குழந்தையைத் தாங்கியிருக்கும் தளர்வு போன்றது. பிடி தளர்ந்தாலும் பிள்ளையைத் தாய் நழுவ விடாள். தளர்வு இருந்தாலும் பிடி வழுவாதீர். 
தமிழர் எண்ணிக்கை குறைவதைத் தாங்காது வரலாறு. கட்டுப்பாடு-நம் கடப்பாடு” என்று கூறியிருப்பது போல இயல்பு வாழ்க்கையை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், முழு இயல்புவாழ்க்கை திரும்பவேண்டும் என்றால் அது மக்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அரசும் அதையே தன் இலக்காககொண்டு அந்தவகையில் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

Next Story