பயங்கரவாதத்தின் புதிய முகம்


பயங்கரவாதத்தின் புதிய முகம்
x
தினத்தந்தி 28 Jun 2021 9:06 PM GMT (Updated: 2021-06-29T02:36:28+05:30)

கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தடுக்கவும், கொரோனாவால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்கவும், மக்களின் வாழ்வாதாரத்தை சீரடையச்செய்வதுமான நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இப்போது நாட்டின் பாதுகாப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய நிலையை, கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஜம்மு விமானப்படை தளத்தில் பயங்கரவாதிகள் ஆளில்லாத குட்டி விமானம் என்று கூறப்படும் டிரோன்களை ஏவி வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்த சம்பவம் உருவாக்கியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ள ஜம்முவில் ஒரு விமானப்படைதளம் இருக்கிறது. அங்கு நேற்று முன்தினம் அதிகாலை 1.37 மணிக்கு ஒரு டிரோன் வந்து, வெடிகுண்டை போட்டது. ஹெலிகாப்டர்கள் நிறுத்தும் இடத்துக்கு அருகில் உள்ள நிர்வாக கட்டிடம் இதனால் சேதம் அடைந்தது. அடுத்த 7 நிமிடங்களில் மற்றொரு டிரோன் வந்து தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 2 விமானப்படை வீரர்கள் காயம் அடைந்தனர். ஒரு குண்டு கட்டுப்பாட்டு அறை அருகே விழுந்திருக்கிறது. விமானப்படை கட்டுப்பாட்டு அறையையும், ஹெலிகாப்டர்களையும் குறிவைத்து இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் 
என்று கருதப்படுகிறது. பாகிஸ்தான் எல்லையில் இருந்து வந்த டிரோன்கள் தாக்குதலை நடத்திவிட்டு, பாகிஸ்தான் எல்லைக்குள் திரும்பவும் சென்றுவிட்டன. இதுமட்டுமல்லாமல் அன்றைய தினம் நள்ளிரவிலும் ஜம்மு புறநகரில் உள்ள ரத்னுசாக்-காலுசாக் ராணுவ பகுதியில் 2 டிரோன்கள் பறந்து வந்து இருக்கிறது. நமது ராணுவ வீரர்கள் சுட்டபின் அங்கு இருந்து பறந்து போய் விட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி நள்ளிரவில் இருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தது. இப்போது இதுபோன்ற தாக்குதலை பார்த்தால் அந்த போர் நிறுத்தம் அர்த்தம் இல்லாததாக ஆகிவிட்டது. வெடிகுண்டுகளை டிரோன் மூலம் வீசும் முதல் சம்பவம் இதுதான். ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள பயங்கரவாதிகளுக்கு டிரோன்கள் மூலம் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் சப்ளை செய்யும் முயற்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சில டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

நம்முடைய விமானப்படையில் ரேடார்கள் இருக்கின்றன. அந்த ரேடார்கள் இந்த 2 டிரோன்களையும் எப்படி கண்டுபிடிக்காமல் இருந்தது? என்பதுதான் வியப்பாக இருக்கிறது. 2020-ம் ஆண்டு டெல்லியில் நடந்த குடியரசுதின விழாவிலும், சுதந்திரதின விழாவிலும் 2 முதல் 3 கி.மீ. தூரத்தில் உள்ள டிரோன்களை கண்டுபிடித்து, அதை செயலிழக்கச்செய்யும் வகையில் ஒரு தொழில்நுட்பத்தை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) கண்டுபிடித்து பயன்படுத்தியது. அதுபோன்ற தொழில் நுட்பங்களை இன்னும் அதிக அளவில் டி.ஆர்.டி.ஓ. நிறுவனம் மேம்படுத்தி உடனடியாக அனைத்து எல்லை பகுதிகளிலும் பயன்படுத்தவேண்டும். உலகில் பல இடங்களில் இப்போது டிரோன்கள் மூலமாக தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் நடந்து வருகிறது. துருக்கி படைகள் டிரோன்களை பயன்படுத்தியே சிரியா நாட்டு ராணுவ டேங்கிகள் மற்றும் பல்வேறு ராணுவ தளவாடங்களை அழித்திருக்கிறது. அஜர்பைஜான் நாடு ஆர்மேனிய நாட்டில் இதுபோன்ற டிரோன்களை பயன்படுத்திதான் தாக்குதலை நடத்தியிருக்கிறது. எனவே இந்தியாவின் முதல் பணி இப்போது, நமது ராணுவ ரேடார்களை இன்னும் நவீனப்படுத்தவேண்டும். இதுபோல சிறிய டிரோன்களையும் கண்டுபிடிக்கும் வகையில் நமது தொழில்நுட்பங்களை மேம்படுத்தவேண்டும். சில ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரிகள் இந்த சம்பவமே டிரோன்களை கண்டுபிடிக்கும் இந்தியாவின் ஆற்றல் எப்படி இருக்கிறது? என்று 
கண்டுபிடிப்பதற்கான சோதனை ஓட்டம்தான் என்று கூறுகிறார்கள். இனி பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்தோ, இங்குள்ள பயங்கரவாதிகளிடம் இருந்தோ ஒரு டிரோனும் பறந்து வரமுடியாத வகையில் தடுத்து நிறுத்தவேண்டும் என்பதுதான் பயங்கரவாதத்தின் புதிய முகமான இந்த டிரோன் தாக்குதல் தந்த பாடமாக இருக்கிறது.

Next Story