நிர்மலா சீதாராமனின் நிவாரண உதவி திட்டங்கள்


நிர்மலா சீதாராமனின் நிவாரண உதவி திட்டங்கள்
x
தினத்தந்தி 30 Jun 2021 11:12 PM GMT (Updated: 30 Jun 2021 11:12 PM GMT)

இந்திய பொருளாதாரத்தை கைதூக்கிவிடும் வகையில் ரூ.6 லட்சத்து 28 ஆயிரத்து 993 கோடி மதிப்பிலான நிவாரண தொகுப்பு உதவிகளை மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

கொரோனா 2-வது அலையால் பல்வேறு துறைகள் பெருமளவில் முடங்கி போய்விட்டன. பொருளாதாரமே சீர்குலைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்திய பொருளாதாரத்தை கைதூக்கிவிடும் வகையில் ரூ.6 லட்சத்து 28 ஆயிரத்து 993 கோடி மதிப்பிலான நிவாரண தொகுப்பு உதவிகளை மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 8 துறைகளை மீட்டெடுக்கும் வகையிலான திட்டம் இது என்றாலும், மிக முக்கியமாக மருத்துவம், விவசாயம், சுற்றுலா மற்றும் குறு நிதி நிறுவனங்களுக்கு உதவி ஆகியவற்றை முக்கியமான அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கடன் உத்தரவாத திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி கடனில், ரூ.50 ஆயிரம் கோடி சுகாதாரத்துறைக்கும், ரூ.60 ஆயிரம் கோடி சுற்றுலா உள்பட இதர துறைகளுக்கும் வழங்கப்படும். குழந்தைகள் நலன், பொதுசுகாதாரத்துறைக்கு ரூ.23 ஆயிரத்து 220 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மருத்துவத்துறையில் ஐ.சி.யூ. படுக்கை வசதி, ஆக்சிஜன் உற்பத்தி, ஆம்புலன்ஸ் வசதி போன்ற பல உள்கட்டமைப்புவசதிகள் மேம்படுத்தப்படும்.

மேலும் அவசரகால கடன்உத்தரவாத திட்டத்துக்கு ஏற்கனவே கடந்த ஆண்டு மே மாதம், ‘தற்சார்பு இந்தியா’ தொகுப்பின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டு அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் மூலம் ரூ.2 லட்சத்து 73 கோடி ஒதுக்கப்பட்டு, இதுவரை ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு மேலும் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்பட்டு வரும் இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 1 கோடியே 10 லட்சம் தொழில் நிறுவனங்களுக்கு கடன்உதவி வழங்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக குறு நிதி நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத திட்டத்தையும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன்படி, சிறிய அளவில் கடன் வாங்குபவர்கள் ரூ.1.25 லட்சம் வரை கடன் வாங்கமுடியும். 25 லட்சம் பேர் இந்த கடனை பெற்றுக்கொள்ளமுடியும்.

கொரோனாவால் பெருமளவில் பாதிக்கப்பட்ட சுற்றுலா துறையை மீட்டெடுக்க 10 ஆயிரத்து 700 சுற்றுலா வழிகாட்டிகளுக்கும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா நிறுவனங்களுக்கும் கடன் உதவி வழங்க முடிவெடுத்துள்ளது. இதன்மூலம் சுற்றுலா வழிகாட்டிகள் ரூ.1 லட்சமும், சுற்றுலா நிறுவனங்கள் ரூ.10 லட்சமும் கடன்உதவி பெறமுடியும். 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு இலவச ஒரு மாத விசா வழங்கப்படும். கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் 1 கோடியே 9 லட்சத்து 30 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார்கள். இவர்கள் மூலம் பல்வேறுவகைகளில் வர்த்தகம் தழைத்திருக்கிறது. மருத்துவத்துறைக்கு ஒதுக்கிய திட்டங்கள், கொரோனா அலையை எதிர்கொள்ள கையில் பெரிய ஆயுதத்தை வழங்கியதுபோல இருக்கிறது. தொழில்களுக்கு உதவியதுபோல, விவசாயத்துக்கு உதவும் வகையில் சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏழை மக்களுக்கு உணவு அளிக்கும் திட்டம் நவம்பர் வரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தொழில்துறையினர் குறிப்பாக ஏற்றுமதியாளர்கள் எல்லாம் தங்களுக்கு பலன் அளிக்கும் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான அறிவிப்புகள் கடன் உத்தரவாதமே தவிர, நேரடியாக ஊக்குவிப்புகள் இல்லை. இதுபோல வரி குறைப்புகள், பெரிய நிறுவனங்களுக்கு உதவும் அறிவிப்புகளும் வேண்டும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. மேலும் அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் வெற்றி வங்கிகள் கடன் கொடுப்பதில்தான் இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் பொதுமக்களை பொறுத்தமட்டில் தங்கள் கையில் பணமாக கிடைத்தால்தான் அவசர செலவுகளை சரிகட்டமுடியும் என்று நினைக்கிறார்கள். பல திட்டங்கள் 5 ஆண்டு காலத்தில் நிறைவேற்றும் திட்டங்களாக இருக்கிறது. என்றாலும் பிரதமர் நரேந்திர மோடி கூறியதுபோல, இந்த அறிவிப்புகள் எல்லாம் உற்பத்தி, ஏற்றுமதியை பெருக்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்ற வகையில், நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள், நிவாரண அறிவிப்புகள் மட்டுமல்ல, நிம்மதியை தரும் அறிவிப்புகள் என்றே கூறலாம்.

Next Story