சுப்ரீம் கோர்ட்டின் கருணை உத்தரவு!


சுப்ரீம் கோர்ட்டின் கருணை உத்தரவு!
x
தினத்தந்தி 1 July 2021 9:24 PM GMT (Updated: 2021-07-02T02:54:12+05:30)

கொடிய கொரோனா தன் கோர கரங்களால் எண்ணற்ற உயிர்களை பறித்துவிட்டது. நாட்டில் முதல் உயிரிழப்பு கர்நாடகா மாநிலத்தில் என்றால், தமிழகத்தில் முதல் உயிரிழப்பு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ந்தேதி மதுரையில் ஏற்பட்டது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் சிகிச்சை பெற்றுவந்த 54 வயதுடைய ஒருவர் உயிரிழந்து, உயிரிழப்பு பட்டியலின் கணக்கை தொடங்கிவைத்தார். இதுவரை நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 4 லட்சமாக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் நேற்றுமுன்தினம் கணக்குப்படி 32 ஆயிரத்து 619 ஆக இருக்கிறது. பல குடும்பங்கள் வருமானம் ஈட்டிவந்த குடும்ப தலைவரையும், வீட்டு நிர்வாகத்தை கவனித்து கொண்டிருந்த பெண்களையும், துள்ளித்திரிந்து கொண்டிருந்த குழந்தைகளையும் இழந்து துயரக்கடலில் மூழ்கியுள்ளது.

பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் தவிக்கும் குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டிடும் வகையில், பிரதமர் நரேந்திரமோடியும், தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பல்வேறு உதவிகள் வழங்கும் திட்டங்களை குறிப்பாக அந்த குழந்தைகள் பெயரில் பணம் டெபாசிட் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருக்கின்றனர். அந்தவகையில் தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவால் தாய், தகப்பன் இருவரையும் இழந்த 93 குழந்தைகளும், தாய் அல்லது தந்தையை மட்டும் இழந்த குழந்தைகள் என்ற வகையில் 3 ஆயிரத்து 499 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்து இருக்கிறார். ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனைவரது குடும்பங்களிலும் மக்கள் பெருந்துயரால் 
வாடுவதோடு மட்டுமில்லாமல், ஏற்கனவே அவர்கள் குடும்பத்தினர் மருத்துவ செலவுக்காக நிறைய செலவழித்த நிலையில், கடன்வலையிலும் சிக்கித்தவித்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் எல்லோருக்குமே பணஉதவி என்பது நிச்சயம் தேவை. இதை புரிந்துகொண்ட சுப்ரீம்கோர்ட்டு ஒரு நல்ல உத்தரவை தற்போது வழங்கியிருக்கிறது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கருணைத்தொகை வழங்க பரிசீலிக்கவேண்டிய தன் கடமையிலிருந்து தவறியதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்மீது சுப்ரீம்கோர்ட்டு குறைகூறியிருக்கிறது. இவர்களுக்கு கருணைத்தொகை வழங்கும் பணத்தின் அளவை கோர்ட்டு தீர்மானிக்கமுடியாது. மத்திய அரசாங்கமும், தேசிய பேரிடர் மேலாண்மை 
ஆணையமும் இதுபற்றி முடிவுசெய்து 6 வாரங்களுக்குள் அதுதொடர்பான வழிகாட்டுதல்களை தெரிவிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மற்ற பேரிடர் மற்றும் இயற்கை சீற்றங்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகையான ரூ.4 லட்சம் போல் கொரோனாவுக்கும் வழங்குவது என்பது சரியாக இருக்காது. இது ஒரு பெருந்தொற்று. மற்ற பேரிடரைவிட இதை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும் என்றும் கூறியிருக்கிறது.

இதுமட்டுமில்லாமல் இப்போதெல்லாம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் கொரோனா சரியானபிறகு, அதனால் ஏற்பட்ட விளைவுகளான நுரையீரல் பாதிப்பு, நிமோனியா, மாரடைப்பு  போன்றவற்றால் இறந்தால், இறப்பு சான்றிதழில் அவர் மரணத்துக்கு காரணம் கொரோனா என்று குறிப்பிடுவதில்லை. இப்போது சுப்ரீம்கோர்ட்டு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு, 2 அல்லது3 மாதங்களுக்குள் மருத்துவமனையிலோ அல்லது வீட்டிலோ மரணமடைந்தால், அந்த உயிரிழப்புக்கு காரணம் கொரோனா என்று குறிப்பிடப்படவேண்டும். ஏற்கனவே இதுபோல உயிரிழப்பு சான்றிதழ்களில் வேறுகாரணங்கள் குறிப்பிட்டிருந்தால், அதில் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கும் குடும்பத்தினருக்கு சரியானதீர்வு அளிக்கப்படவேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.

சுப்ரீம்கோர்ட்டு அளித்த இந்த உத்தரவு, ஒரு கருணை உத்தரவு. பல குடும்பங்களை வாழவைக்கும் உத்தரவு. எனவே இதற்கான வழிமுறைகளை வகுக்கப்போகும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும், மத்திய அரசாங்கமும் சுப்ரீம்கோர்ட்டு காட்டிய கருணைப்பார்வை அடிப்படையில், இந்த கருணைத்தொகையை பெறுவதற்கான வழிமுறைகளில் கடும் 
நிபந்தனைகளை விதிக்காமல் இருக்கவேண்டும். ஏனெனில் வழக்கமாக வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் என்று சொல்லி ஏராளமானவர்களை விட்டுவிடும் வாய்ப்புள்ளது. இந்த இழப்பு என்பது வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு என்பது மட்டுமல்லாமல் நடுத்தர மக்களையும் பெரிதும் பாதிக்கும் இழப்பு. அந்தவகையில் அரசின் வழக்கமான அளவுகோலை இதற்கு 
பயன்படுத்தாமல் இருக்கவேண்டும்.

Next Story