தாங்காதய்யா, தாங்காது; இந்த விலை உயர்வு தாங்காது


தாங்காதய்யா, தாங்காது; இந்த விலை உயர்வு தாங்காது
x
தினத்தந்தி 2 July 2021 8:56 PM GMT (Updated: 2021-07-03T05:26:34+05:30)

ஜூலை மாதம் தொடங்கிய உடனேயே பொதுமக்களுக்கு குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி, தலையில் இடி விழுந்ததுபோல ஏற்பட்டுவிட்டது. பெட்ரோல்-டீசல் விலை மட்டுமல்லாமல், சமையல் கியாஸ் விலையும் தாறுமாறாக உயர்ந்து எல்லோருமே, ‘தாங்காதய்யா தாங்காது, இந்த விலை உயர்வை எங்களால் தாங்கமுடியாது’ என்று தடுமாறுகிறார்கள்.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்குரூ.100.13 ஆகிவிட்டது. டீசல் பார்த்தது, ‘உனக்கு நான் இளைத்தவன் இல்லை, உன்னை நான் சீக்கிரம் தொட்டுவிடுவேன்’ என்ற வகையில் லிட்டருக்குரூ.93.72 ஆகிவிட்டது. தமிழகத்தின் மற்ற இடங்களில் இதைவிடவும் அதிகமாக இருக்கிறது. கச்சா எண்ணெய் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவில்லை என்றாலும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும்போது இதைவிட அதிகமாக இருந்த நேரத்தில், அதாவது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 112 அமெரிக்க டாலராக இருந்தபோது கூட, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.69 ஆகத்தான் இருந்தது. அப்படியானால் இப்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 75.76 டாலர்தான் என்ற நிலையில் ஏன் இந்த விலை என்று நினைத்தால், அதற்கு முழு முதற்காரணம் மத்திய அரசாங்கத்தின் கலால் வரி தான். பெட்ரோலின் அடிப்படை விலையில் 58 சதவீதம் மத்திய கலால் வரியும், மாநில வரிகளும் சேர்ந்துவிடுகிறது. இதேபோல் டீசல் மீது 52 சதவீதம் விலை ஏறிவிடுகிறது.

இன்றைய சூழ்நிலையில், மத்திய அரசாங்கம் பெட்ரோல் மீது ஒரு லிட்டருக்கு, அடிப்படை கலால் வரி, சிறப்பு கூடுதல் கலால் வரி, சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேல் வரி, வேளாண்மை உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு மேல் வரி என்ற வகையில் ரூ.32.90 வசூலிக்கிறது. டீசலுக்கு ரூ.31.80 வசூலிக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் முதல் மே மாதங்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.13-ம், டீசலுக்கு ரூ.16-ம் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2, 3 மாதங்களாக பொதுமக்கள் பெட்ரோல்-டீசல் வாங்குவது பெருமளவில் குறைந்திருக்கிறது, என்றாலும் அரசின் வரிவசூல் பெருமளவில் உயர்ந்திருக்கிறது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் சாதாரண ஏழை-எளிய மக்கள் விவசாயிகள் மட்டும் பாதிக்கப்படுவதோடு இல்லாமல், போக்குவரத்து கட்டணமும் உயரும் என்ற வகையில் அனைத்து பொருட்களின் விலையும் இனி உயர்ந்துவிடும் அபாயம் இருக்கிறது.

உலகில் 114 நாடுகளில் இந்தியாவை விட மிக குறைந்த அளவில் தான் பெட்ரோல் விலை இருக்கிறது. சரி பெட்ரோல்-டீசல் தான் இப்படி விலை உயர்ந்திருக்கிறது என்றால், சென்னையில் இல்லத்தரசிகள் சமையலுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டரின் விலையும் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.25.50 உயர்ந்திருக்கிறது. ஓட்டல்கள், டீக்கடைகள் போன்ற வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் சிலிண்டர்கள் விலை ரூ.84 உயர்ந்திருக்கிறது. நிச்சயம் ஓட்டல்களில் உணவுபண்டங்கள் விலை உயரும் அபாயம் இருக்கிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.610.50 ஆக இருந்தநிலையில், ஒரே ஆண்டில் ரூ.240 உயர்ந்து இப்போது ரூ.850.50 ஆகிவிட்டது. இப்படி ஒரே நாளில் பல முனை தாக்குதலால் ஒட்டுமொத்த தமிழ்நாடே, ஏன் இந்தியாவே அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே கொரோனாவால் பெரும்பாடுபட்டுக்கொண்டிருக்கும் மக்களால் பெட்ரோல்-டீசல் விலை உயர்வையும், சமையல் கியாஸ் விலை உயர்வையும் நிச்சயமாக தாங்கமுடியாது. எனவே பெட்ரோல்-டீசல் விலையையும், சமையல் கியாஸ் விலையையும் குறைப்பதற்குரிய வகையில் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். வரியை குறைக்கவேண்டும். ‘நீங்கள் முதலில் குறையுங்கள்’ என்று மத்திய அரசாங்கம் மாநில அரசுகளை கேட்பதையும், மாநில அரசுகள் மத்திய அரசாங்கத்தை கேட்பதையும் விட்டுவிட்டு, 2 பேரும் ஒன்றாக கைகோர்த்து ‘2 பேருமே குறைப்போம், மக்களை இந்த படுபாதாளத்தில் இருந்து கைதூக்கிவிடுவோம்’ என்ற முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

Next Story