பள்ளிக்கூடங்களை திறக்க வேண்டுமா ? வேண்டாமா ?


பள்ளிக்கூடங்களை திறக்க வேண்டுமா ? வேண்டாமா ?
x
தினத்தந்தி 4 July 2021 10:02 PM GMT (Updated: 2021-07-05T06:44:17+05:30)

கடந்த 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் இப்போது ஊரடங்கை பெருமளவு தளர்வுகளுடன் இன்று முதல் வருகிற 12-ந்தேதி காலை 6 மணிவரை நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்தமுறை அநேகமாக இயல்புவாழ்க்கை திரும்பிவிட்டது. இதுவரை 3 வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வகைக்கும், தனித்தனியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் இப்போது அவ்வாறு பிரிக்கப்படாமல் அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுவான தளர்வுகள் வெளியிடப்பட்டுள்ளன. இரவு 7 மணிவரை திறந்துவைக்க அனுமதிக்கப்பட்ட கடைகள் இனி 8 மணிவரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஓட்டல்கள், டீக்கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடலாம். இதுபோல் தங்கும் ஓட்டல்கள், விருந்தினர் இல்லங்களும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. எல்லா மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத்தலங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள் இனி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல்  திறந்திருக்கும். 
மாவட்டங்களுக்கிடையே பயணிக்க இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுவது, மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால் மாநிலங்களுக்கிடையேயான பஸ்போக்குவரத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத்தவிர சர்வதேச விமானப்போக்குவரத்து, சினிமா தியேட்டர்கள், பார்கள், சமுதாயம், அரசியல் சார்ந்தகூட்டங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள், உயிரியல்பூங்காக்கள் மட்டும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப்போது எல்லாமே திறந்திருக்கும் சூழ்நிலையில் சினிமா தியேட்டர்களையும் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் இருந்துபார்க்க அனுமதிக்கலாம் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. மிகமுக்கியமாக பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளை திறக்கவேண்டும் என்பது ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையாக இருக்கிறது. ஏற்கனவே கடந்த 15 மாதங்களுக்கு மேலாக மாணவர்களுக்கு கற்பித்தல், மாணவர்கள் கற்றல் என்பது அப்படியே நின்றுபோய்விட்டது. என்னதான் ஆன்லைன் வகுப்புகளில் பாடம் நடத்தப்பட்டாலும், கல்வித்தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தினாலும் எல்லோருக்கும் அது புரிதலுடன் கூடிய கல்வியை வழங்குமா? என்பது நிச்சயமாக சந்தேகம்தான். கிராமப்புறங்களில் பெரும்பாலான வீடுகளில் ஸ்மார்ட்போனோ, லேப்டாப்போ கிடையாது. 
எல்லாவற்றுக்கும் மேலாக அங்கு இணையதளவசதி என்பது கேள்விக்குறி. எனவே மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு சென்றால்தான் ஆசிரியர்கள் கல்வி கற்றுக்கொடுப்பதை புரிந்துகொள்ளவும் முடியும். அவர்கள் புரிந்து கொண்டார்களா? என்பதை ஆசிரியர்களும் தெரிந்துகொள்ளமுடியும். மற்ற சமூகதிறன்களும் மேம்பாடு அடையமுடியும். மேலும் கல்விசார்ந்த உபகரணங்களை பயன்படுத்துவது, செய்முறை பயிற்சிகளை பெறுவது என்பதெல்லாம், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு சென்றால் மட்டுமே கிடைக்கும்.

அதேபோல், ஏழை குடும்பங்களிலிருந்து வரும் பெரும்பாலான மாணவர்களுக்கு சத்துணவு பெரிய ஊட்டச்சத்தாக இருந்தது. இப்போது அது இல்லை. கடந்த ஓராண்டு பாடங்களை சரியாக கற்காமல் மாணவர்களின் கற்றல் இழப்பு, பேரிழப்பாக உள்ளது. தொடர்ந்து அது நீடிக்குமானால், மாணவர்களுக்கு2 ஆண்டுகள் பள்ளிக்கூடம், கல்லூரி தொடர்பே இல்லாமல் போய்விடும். எனவே பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளை திறக்கவேண்டும் என்ற கோரிக்கை ஒரு பக்கம் இருந்தாலும், அடுத்த பக்கத்தில் கொரோனா தொற்றின் வேகம் இன்னும் குறையவில்லை. பள்ளிக்கூட குழந்தைகளுக்கு, அதாவது 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு இன்னும் தடுப்பூசி போட தொடங்கப்பட வில்லை.  டெல்டாபிளஸ் அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது. 3-வது அலை உருவாகி விடுமோ? என்றநிலையும் உள்ளது. தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் நேற்று முன்தினம் கணக்குப்படி 27 லட்சத்து 35 ஆயிரத்து 838 பேர் தான், 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள். மேலும் பள்ளிக்கூடத்தில் ஒரு ஆசிரியருக்கோ, மாணவருக்கோ கொரோனா பாதித்தால் கொத்து, கொத்தாய் மற்றவர்களுக்கும் பரவும், அவர்கள் வீட்டுக்கு செல்லும் நேரத்தில் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. எனவே கொரோனா ஆபத்து இன்னும் நீங்காத சூழ்நிலையில், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் திறப்பது பற்றி அரசு முடிவெடுக்கும்போது, இரண்டையும் சீர்தூக்கி பார்த்து, மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோரை கலந்து ஆலோசித்து அறிவிக்க வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.

Next Story