தடுப்பூசி போட தமிழக மக்கள் தயார்; மத்திய அரசாங்கம் தர வேண்டும்!


தடுப்பூசி போட தமிழக மக்கள் தயார்; மத்திய அரசாங்கம் தர வேண்டும்!
x
தினத்தந்தி 6 July 2021 10:46 PM GMT (Updated: 6 July 2021 10:46 PM GMT)

தமிழ்நாட்டில் தடம்பதித்த கொரோனா, 15 மாதங்களாகியும் இன்னும் ஓடி மறையவில்லை. இந்தநிலையில், ஸ்டேட் வங்கியின் ஆராய்ச்சி பிரிவு, “கொரோனா; எல்லைக் கோட்டை நோக்கி ஓடும் பந்தயம்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை ஆகஸ்டு மத்தியில் தன் தாக்குதலை தொடங்கி, செப்டம்பரில் உச்சத்திற்கு போகும் வாய்ப்பு இருக்கிறது.

தடுப்பூசி ஒன்றுதான் உயிர்காக்கும் மாமருந்தாகும்” என்று கூறியிருக்கிறது. தடுப்பூசியில் 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டால், கொரோனா தொற்றின் மூலம் ஏற்படும் உயிரிழப்பில் இருந்து 98 சதவீதம் நம்மை தற்காத்துக்கொள்ள முடியும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆரம்பத்தில் தடுப்பூசி போட பெரிய தயக்கம் இருந்தது. ஆனால், தமிழக மக்கள் அறிவாற்றல் மிக்கவர்கள் என்ற வகையில், இப்போது தடுப்பூசி போட மிகுந்த ஆர்வத்துடன் வருகிறார்கள். பல இடங்களில், குறிப்பாக ஈரோட்டில், முந்தையநாள் இரவே மடக்கு கட்டிலை கொண்டுவந்து உட்கார்ந்து வரிசையில் காத்திருக்கிறார்கள். கடந்த 3-ந்தேதி ஒரே நாளில் 4 லட்சத்து 73 ஆயிரத்து 654 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற வகையில், தமிழ்நாட்டில் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 பேருக்கு தடுப்பூசி போடவேண்டும். ஆனால், இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் கணக்கை எடுத்துக்கொண்டால், ஒரு கோடியே 58 லட்சத்து 78 ஆயிரத்து 600 ஆகும். இதில், ஒரு டோஸ் மட்டும் போட்டவர்கள் ஒரு கோடியே 31 லட்சத்து 5 ஆயிரத்து 686 பேரும், 2 டோஸ் போட்டவர்கள் 27 லட்சத்து 72 ஆயிரத்து 914 பேரும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் அறிவித்துள்ளார். தடுப்பூசி மருந்துகள் 5 மில்லி குப்பிகளில், 10 டோஸ்கள் போடும் அளவுக்கு அனுப்பப்படுகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியை எடுத்துக்கொண்டால், இதுவரை ஒரு கோடியே 32 லட்சத்து 40 ஆயிரத்து 750 டோஸ்கள் வந்தநிலையில், ஒரு கோடியே 34 லட்சத்து 46 ஆயிரத்து 339 பேருக்கு போடப்பட்டுள்ளது. மருந்தை விரயமாக்காததால், 102 சதவீதம் பேருக்கு போடப்பட்டுள்ளது. தமிழக அரசு ரூ.99 கோடியே 84 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கிய 29 லட்சத்து 92 ஆயிரம் டோஸ்களையும் சேர்த்து, மத்திய அரசாங்கம் இதுவரை ஒரு கோடியே 57 லட்சத்து 76 ஆயிரத்து 50 டோஸ்கள்தான் சப்ளை செய்திருக்கிறது. நேற்று முதல் தமிழ்நாட்டில் மக்களுக்கு தடுப்பூசிபோட கையிருப்பு இல்லை. மக்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லவேண்டிய நிலை இருக்கிறது. இந்த மாதம் 71 லட்சம் டோஸ்கள் தருகிறேன் என்ற மத்திய அரசாங்கம், கடந்த 2-ந்தேதி 6 லட்சம் கோவிஷீல்டு மருந்துகளைத்தான் தந்தது. இனி அடுத்த தவணையாக, 11-ந்தேதி 8 லட்சத்து 21 ஆயிரத்து 170 டோஸ்கள் கோவிஷீல்டு மருந்தையும், 12-ந்தேதி 1 லட்சம் டோஸ்கள் கோவேக்சின் மருந்தையும் தருவதாக கூறியிருக்கிறது. ஆக, 11-ந்தேதிதான் இனி தமிழ்நாட்டில் தடுப்பூசி போட முடியும்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மத்திய அரசுக்கு அவசர செய்தி அனுப்பியிருக்கிறார். தினமும் 8 லட்சம் டோஸ்களை போடும் கட்டமைப்புள்ள தமிழ்நாட்டிற்கு, தேவைக்கு ஏற்ப தடுப்பூசி டோஸ்கள் சப்ளை செய்ய வேண்டும். மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, அதற்கு ஏற்ற வகையில், இப்போதைய சப்ளையைவிட 3 அல்லது 4 மடங்கு அதிகமாக தடுப்பூசி மருந்துகளை தந்தால், அடுத்த சில மாதங்களில் தமிழ்நாட்டிலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒருநாள் கூட நிறுத்தாமல் தடுப்பூசி போட்டு மக்களை கொரோனா பிடியில் இருந்து காப்பாற்றி விட முடியும்.

Next Story