கூட்டி கழித்து பார்த்து அமைக்கப்பட்ட புதிய மந்திரி சபை !


கூட்டி கழித்து பார்த்து அமைக்கப்பட்ட புதிய மந்திரி சபை !
x
தினத்தந்தி 8 July 2021 10:35 PM GMT (Updated: 2021-07-09T04:05:36+05:30)

பிரதமர் நரேந்திரமோடி எப்போதுமே, “என் வழி.. தனி வழி..” என்று செயல்படுவார். அந்தவகையில், இப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், பல கூட்டல், கழித்தல் கணக்குகளை போட்டு, தன் மந்திரி சபையை மாற்றியமைத்திருக்கிறார்.

பிரதமர் நரேந்திரமோடி எப்போதுமே, “என் வழி.. தனி வழி..” என்று செயல்படுவார். அந்தவகையில், இப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், பல கூட்டல், கழித்தல் கணக்குகளை போட்டு, தன் மந்திரி சபையை மாற்றியமைத்திருக்கிறார். பழைய மந்திரி சபையில் இருந்த மந்திரிகளின் செயல்பாடு, புது மந்திரிகளின் திறமை, கல்வி, அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம், பெண்களுக்கு இடம், கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு, கட்சிப்பணிகளில் முத்திரை பதித்த தலைவர்கள், அடுத்து தேர்தல் களம் காணப்போகும் மாநிலங்கள் என்ற பல மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த மாற்றத்தை உருவாக்கியிருக்கிறார்.

1963-ம் ஆண்டு காமராஜர் திட்டம், அதாவது ‘கே-பிளான்’ என்று அழைக்கப்படும் திட்டத்தின்கீழ் பல மந்திரிகள் பதவி இழந்தபிறகு, இப்போது 6 மூத்த கேபினட் மந்திரிகள் உள்பட 12 மந்திரிகளை நரேந்திரமோடி நீக்கியிருக்கிறார். இதுவரை, அவரது மந்திரி சபையில் 21 கேபினட் மந்திரிகள், 32 ராஜாங்க மந்திரிகள் என 53 மந்திரிகள் இருந்தார்கள். இப்போது 30 கேபினட் மந்திரிகள், 2 தனிப் பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகள், 45 ராஜாங்க மந்திரிகள் என 77 பேர்களுடன் மந்திரி சபை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

80 பேர் கொண்ட மந்திரி சபையை வாஜ்பாய் அமைத்திருந்தார். அடுத்த பெரிய மந்திரி சபையை மன்மோகன்சிங் அமைத்தார். இப்போது, நரேந்திரமோடி 3-வது பெரிய மந்திரி சபையை அமைத்திருக்கிறார். 36 புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ள நரேந்திரமோடி, 7 ஜூனியர் மந்திரிகளுக்கு, தனிப்பட்ட ராஜாங்க மந்திரி, கேபினட் மந்திரி பொறுப்பை கொடுத்துள்ளார்.

மந்திரிகளின் சராசரி வயது 61 என்றநிலையில், இப்போது 58 ஆக குறைந்துவிட்டது. வயதானவராக சோம் பிரகாஷ் (வயது 72), குறைந்த வயதுடையவராக நிசித் பிரமாணிக் (35) ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். பீகாரில் கூட்டணி வைத்திருக்கும் ஐக்கிய ஜனதா மற்றும் அப்னாதள், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடமும், 15 மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 27 பேருக்கும், 8 மாநிலங்களில் மலைவாழ் மக்கள் இனத்தை சேர்ந்த 8 பேருக்கும், 8 மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 12 பேருக்கும் மந்திரி சபையில் இடமளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சிறுபான்மையினரான முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர் மதத்தை சேர்ந்த தலா ஒருவருக்கும், புத்த மதத்தை சேர்ந்த இருவருக்கும் மந்திரி சபையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் தனி உதவியாளராக இருந்த, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அஷ்வினி வைஷ்ணவ், ரெயில்வே, தொலைதொடர்பு, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப கேபினட் மந்திரியாக பொறுப்பேற்றிருக்கிறார். 13 வக்கீல்கள், 6 டாக்டர்கள், 5 என்ஜினீயர்கள், 7 முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், 3 எம்.பி.ஏ. பட்டதாரிகள், 7 பி.எச்.டி. படித்தவர்கள், பல பட்டதாரிகள் என்றவகையில், கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, இதுவரை நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகிய இருதமிழர்கள் மந்திரி சபையில் இடம்பெற்றிருந்த நிலையில், இப்போது தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனுக்கு ராஜாங்க மந்திரி பொறுப்பு கொடுத்து, முக்கிய துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது, தமிழர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் நாடாளுமன்றத்தில் மக்களவையிலோ, மாநிலங்களவையிலோ உறுப்பினராக இல்லாதநிலையில், 6 மாதங்களுக்குள் தமிழ்நாட்டிலிருந்தோ, வேறு மாநிலத்திலிருந்தோ தேர்ந்தெடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில், பிரதமர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்பது கூடுதல் பெருமை. தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்க்க எல்.முருகன் நடத்திய வேல் யாத்திரை, சட்டமன்ற தேர்தலில் 4 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் வெற்றிக்காக பணியாற்றியதற்கு கிடைத்த பரிசாகத்தான் இது கருதப்படுகிறது. மொத்தத்தில், கொரோனாவை விரைவில் ஒழிப்பதையும், நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டுசெல்வதையும் இருகண்களாகக்கொண்டு, மாற்றியமைக்கப்பட்ட மந்திரி சபையாகத்தான் இது தெரிகிறது.

Next Story