2-வது அலைதான் வட்டமிடுகிறதா ?, அல்லது 3-வது அலையின் அறிகுறியா ?


2-வது அலைதான் வட்டமிடுகிறதா ?, அல்லது 3-வது அலையின் அறிகுறியா ?
x
தினத்தந்தி 11 July 2021 7:22 PM GMT (Updated: 2021-07-12T00:52:37+05:30)

கொரோனா இல்லாத தமிழ்நாடு உருவாகிவிடும் என்று நினைத்த நேரத்தில், அடுத்தநாள் முதல் பரவல் அதிகமாகியது.

கொரோனாவின் கொடூர முக பார்வை இன்னும் நம்மைவிட்டு அகலவில்லை. 15 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. அவ்வப்போது, பதுங்குவதும், பிறகு பாய்வதுமாக இருக்கிறது. பிப்ரவரி 20-ந்தேதி மொத்த பாதிப்பு தமிழ்நாட்டில் 438 என்று இருந்த நிலையில், எல்லோரும் இனி மளமளவென சரிந்து, கொரோனா இல்லாத தமிழ்நாடு உருவாகிவிடும் என்று நினைத்த நேரத்தில், அடுத்தநாள் முதல் பரவல் அதிகமாகியது. இதைத்தான் 2-வது அலை என்று கூறுகிறோம். மே மாதம் 21-ந்தேதி மொத்த பாதிப்பு 36,184 என்று உச்சத்தை அடைந்து, அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, நேற்று பாதிப்பு எண்ணிக்கை 2,775 ஆக இருந்தது.

புதிய தொற்று எண்ணிக்கை அதிகமாக இல்லை என்றாலும், கடந்த சில நாட்களாக சரிவு என்பது வேகமாக இல்லை. உயிரிழப்பும் கூடுவதும், குறைவதுமாக இருக்கிறது. எனவே, 3-வது அலை உருவாகிவிடுமோ? என்ற அச்சம் இருக்கிறது. மருத்துவ நிபுணர்களும், ஆகஸ்டு மாதம் மத்தியில் 3-வது அலை உருவாகி செப்டம்பர் மாதத்தில் உச்சத்திற்கு சென்றுவிடும் என்று எச்சரித்திருக்கிறார்கள்.

பிரதமர் நரேந்திரமோடி புதிய மந்திரி சபையை உருவாக்கி, முதலாவது மந்திரி சபை கூட்டத்தை காணொலி மூலம் நடத்தியபோது, மந்திரிகளிடம், “அரசாங்கத்தின் முன்னுரிமை கொரோனாவின் 3-வது அலையை தடுப்பதுதான்” என்பதை கோடிட்டு காட்டியிருக்கிறார். “கொரோனா எண்ணிக்கை குறைகிறது என்று யாரும் மனநிறைவு கொள்ளக்கூடாது. கொரோனா ஒழிப்பு விஷயத்தில் சிறு தவறு நடந்தாலும், அது கொரோனாவுக்கு எதிரான போரை பலவீனப்படுத்திவிடும்” என்று கூறிய பிரதமர், “கடந்த சில நாட்களாக நாம் பார்க்கும் படங்கள், வீடியோக்கள் மிகுந்த கவலையளிக்கிறது. கூட்டம் கூடும் இடங்களில் மக்கள் முககவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இது மகிழ்ச்சியளிக்கும் காட்சியாக இல்லை. இதுபோன்ற காட்சிகள் நம் மனதில் அச்சத்தை உருவாக்கவேண்டும். சுற்றுலா தலங்களில், தெருக்களில் அதிக கூட்டங்கள் இருப்பதை பார்க்கிறோம். கணிசமான அளவு நமது மக்களுக்கு தடுப்பூசிபோடும் பணிகள் நடந்துவருகிறது. பரிசோதனைகளும் அதிகளவில் நடத்தப்படுகிறது. என்றாலும், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கும்நிலை, நமக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறது” என்று அரசாங்கத்தின் முன்னுரிமையை, முதல் கடமையை தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல், இந்த மந்திரி சபை கூட்டத்தில் கொரோனா தடுப்புக்காக, “கொரோனா அவசரகால நிவாரணம் மற்றும் சுகாதார கட்டமைப்பு தயார்நிலை நிதித் தொகுப்பு - 2-ம் கட்டம்” என்ற திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.23,123 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில், ரூ.1,500 கோடியை மத்திய அரசாங்கமும், மீதமுள்ள தொகையை மாநில அரசுகளும் பகிர்ந்துகொள்ளும். இதன் மூலம் 736 மாவட்டங்களிலும் குழந்தைகளுக்காக மருத்துவ பிரிவுகள் தொடங்கப்படும். 20 ஆயிரம் ஐ.சி.யு. படுக்கைகள் உருவாக்கப்படும் என்று பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதெல்லாம் 3-வது அலையை எதிர்கொள்ள தயார்நிலையில் இருப்பதற்காகத்தானே தவிர, வராமல் தடுக்கவேண்டும் என்றால் பிரதமர் மட்டுமல்ல, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், சசிகலா உள்பட அனைத்து தலைவர்களும் அடிக்கடி மக்களிடம், “முககவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை பின்பற்றுங்கள். அடிக்கடி சோப்புபோட்டு கை கழுவுங்கள். இவைதான் கொரோனா வராமல் நம்மை காப்பாற்றும்” என்று விடுக்கும் ஆலோசனையை அனைவரும் கடைபிடிக்கவேண்டும். மக்களிடம் இப்போது ஒரு அலட்சியம் தெரிகிறது. அது மிகவும் ஆபத்தானது. எனவே, அரசும் உடனடியாக 3-வது அலை வரும் அபாயத்தையும், முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளை கடைபிடிக்க, போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த இன்னும் அதிகளவில் விளம்பரப்படுத்தவேண்டும்.

Next Story