சிறு துறைமுகங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் !


சிறு துறைமுகங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் !
x
தினத்தந்தி 12 July 2021 7:22 PM GMT (Updated: 12 July 2021 7:22 PM GMT)

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கூட்டாட்சி தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதில் நல்ல முன்மாதிரியாக திகழ்கிறார்.

மத்திய அரசாங்கத்திடம் சில முக்கியப் பிரச்சினைகளுக்காக கோரிக்கை விடுக்கும்போது, தான் மட்டும் அல்லாமல், மற்ற மாநில முதல்-மந்திரிகளையும் சேர்த்துக் கொள்கிறார். இதைத்தான் பண்டைய காலங்களில், “ஊர்கூடி தேர் இழுத்தால்தான் நகரும்” என்பார்கள். அந்தவகையில், ஏற்கனவே கடந்த மாதம், 12 மாநில முதல்-மந்திரிகளுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், “கொரோனா ஊரடங்கை கருத்தில்கொண்டு, ரூ.5 கோடி வரையில் கடன் நிலுவை வைத்திருக்கும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை சார்ந்தவர்களுக்கும், சிறு கடனாளர்களுக்கும், கடன்களை திருப்பிச்செலுத்த இரு காலாண்டுகளுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கவேண்டும் என்று மத்திய நிதி மந்திரி மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னரை வலியுறுத்தவேண்டும்” என்று கூறியிருந்தார்.

அதுபோல, தொடர்ந்து குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம், புதுச்சேரி ஆகிய 9 மாநில முதல்-மந்திரிகளுக்கு, “மத்திய அரசாங்கம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ள திருத்திய வரைவு இந்திய துறைமுகச் சட்டத்திற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும்” என்று கூறியுள்ளார். நாட்டிலுள்ள பெரிய துறைமுகங்களை மத்திய அரசாங்கம் நிர்வகிக்கிறது. 1908-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய துறைமுகங்கள் சட்டப்படி, சிறு துறைமுகங்களின் அதிகாரங்கள் மாநில அரசுகளிடம் இருக்கிறது. இந்த புதிய மசோதாப்படி, இதில் சில அதிகாரங்கள் எல்லாம் மத்திய அரசாங்கத்தின் கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சிலுக்கு மாற்ற வகைசெய்யப்படுகிறது.

இதுவரையில், இந்த கவுன்சில் ஒரு ஆலோசனை அமைப்பாகத்தான் இருக்கிறது. இப்போது மாநில அரசுகளிடம் உள்ள அதிகாரங்கள் எல்லாம் இந்த கவுன்சிலுக்கு போய்விட்டால், அந்தந்த மாநில அரசின் அதிகாரங்கள் நீர்த்துப்போய்விடும். எனவே, எல்லோரும் சேர்ந்து இதை எதிர்க்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் கோரியிருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு மத்திய துறைமுகங்கள் துறை இணை மந்திரி தலைமையில், காணொலிக்காட்சி வழியாக நடந்த கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சிலின் 18-வது கூட்டத்தில் தமிழக அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு, தமிழக அரசின் கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த புதிய சட்டம் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும். 7,516 கி.மீ. நீளம் கொண்ட இந்திய கடலோர பகுதியில், தமிழ்நாட்டில் 1,076 கி.மீ. நீள கடற்கரை இருக்கிறது. இதில், சென்னை, எண்ணூர் காமராஜர், தூத்துக்குடி வ.உ.சி. ஆகிய 3 பெருந்துறைமுகங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், ராமேசுவரம், கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய இடங்களிலுள்ள சிறு துறைமுகங்கள் இருக்கின்றன. தனியார் முதலீட்டு துறைமுகங்களாக, காட்டுப்பள்ளி, எண்ணூர் சிறு துறைமுகம், பனையூர், திருச்சோபுரம், சிலம்பிமங்கலம், பரங்கிப்பேட்டை, ‘பி.ஒய்.-03’ எண்ணெய் வளப்பகுதி, திருக்கடையூர், திருக்குவளை, உடன்குடி, கூடங்குளம் ஆகிய இடங்களிலுள்ள சிறு துறைமுகங்களும் இருக்கிறது.

சிறு துறைமுகங்கள் மூலம் பெருந்துறைமுகங்களின் போக்குவரத்து நெரிசலும், சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து நெருக்கடியும் குறைக்கப்படுகிறது. இந்த துறைமுகங்களை அடிப்படையாகக்கொண்ட அனல் மின்நிலையம், உரத் தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் போன்ற தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு தேவையான சரக்குகளை கையாள்கிறது. தமிழ்நாட்டில் மத்திய மற்றும் மேற்கு பகுதி மாவட்டங்களிலுள்ள தொழிற்சாலைகளுக்கு துறைமுக இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழக அரசுக்கும் வருவாய் ஈட்டப்படுகிறது.

ஏற்கனவே, மாநில பட்டியலில் இருந்த கல்வியை, பொதுப்பட்டியலுக்கு மாற்றியதையே பலர் எதிர்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், சிறு துறைமுகங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிடக்கூடாது. மாநிலங்களுக்கு அதிகாரங்கள், பொறுப்புகளை கூடுதலாக கொடுக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கும் இப்போதைய சூழ்நிலையில் இருப்பதையும் பறிக்க வேண்டுமா?, வேண்டாம்.. வேண்டாம்.. என்பதே தமிழகத்தின் கோரிக்கையாக இருக்கிறது.


Next Story