விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாண வேண்டிய நேரம் இதுதான்!


விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாண வேண்டிய நேரம் இதுதான்!
x
தினத்தந்தி 14 July 2021 8:32 PM GMT (Updated: 2021-07-15T02:02:41+05:30)

இனியும் இந்தப் போராட்டம் நீடிக்காமல், நாடாளுமன்றத்தில் இதற்கொரு முற்றுப்புள்ளி வைப்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசாங்கமும் முன்வரவேண்டும்.

“சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்பார்கள். அதுபோல, “தான் உண்டு... தன் விவசாயம் உண்டு...” என்று வாழ்ந்துவரும் விவசாயிகள், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி முதல், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து விவசாயிகள் குடும்பத்தோடு 5 இடங்களில் சாலையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அங்கேயே கூடாரம் அமைத்து, தங்கள் டிராக்டர்களின் மேலே கூரைபோட்டு தங்கிக்கொள்கிறார்கள். தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் அவ்வப்போது சென்று போராட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.

ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், மாணவர்கள் என்று எல்லா தரப்பினரும், இந்த 8 மாதங்களில் மழையையும், கடும் குளிரையும், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தவில்லை. அவர்களுடைய கோரிக்கைகள் எல்லாம், மத்திய அரசாங்கம் பிறப்பித்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும். அனைத்து விளை பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலையை உறுதிசெய்யவேண்டும் என்பதுதான். இதுவரை மத்திய அரசாங்கத்துடன் 11 முறை பேச்சு வார்த்தை நடத்தியும் பலன் இல்லை. 10-ம் கட்ட பேச்சு வார்த்தையின்போது வேளாண் சட்டங்களின் அமலை ஒரு ஆண்டு முதல் 1½ ஆண்டுவரை நிறுத்திவைப்பதற்கும், இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதற்காக விவசாய சங்கங்கள் அடங்கிய குழுவை அமைப்பதற்கும் மத்திய அரசாங்கம் தயாராக இருக்கிறது. ஆனால், அந்த குழு தனது பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்யும்வரை தங்கள் போராட்டத்தை கைவிடவேண்டும் என்று மத்திய மந்திரிகள் கூறியதை விவசாயிகள் ஏற்கவில்லை. அந்த 3 சட்டங்களையும் ரத்து செய்யும்வரை போராட்டம் வாபஸ் இல்லை என்பதுதான் அவர்களின் உறுதியான நிலைப்பாடு.

கடந்த மாதம் 26-ந்தேதி, போராட்டம் தொடங்கி 7 மாதங்கள் ஆனதையொட்டி, கவர்னர்கள் மாளிகைகளில் விவசாயிகள் மனு கொடுத்தனர். அதை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொண்டனர். 1975-ம் ஆண்டு ஜூன் 26-ந்தேதி நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போதுபோல, இப்போது அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை இருக்கிறது என்று கூறினர்.

இந்தநிலையில், வருகிற 19-ந்தேதியில் இருந்து ஆகஸ்டு 13-ந்தேதி வரை நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நடக்கிறது. இதையொட்டி, விவசாயிகள் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு கோரிக்கை கொடுத்துள்ளனர். “17-ந்தேதி அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் ஒரு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்போகிறோம். எங்கள் கோரிக்கைகளுக்காக நீங்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்துங்கள். எங்கள் பிரச்சினை தீரும்வரை நாடாளுமன்றத்தை நடத்தவிடாதீர்கள். வெளிநடப்பு செய்துவிடாதீர்கள். அது அரசுக்கு சாதகமாகிவிடும். நீங்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளே இருந்து எங்களுக்காக போராட்டம் நடத்துங்கள். நாங்கள் 21-ந்தேதியில் இருந்து தினமும் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடத்தப்போகிறோம். ஒவ்வொரு நாளும் இப்போது போராட்டம் நடத்தும் 40 சங்கங்கள் சார்பில், தலா 5 விவசாயிகள் சேர்ந்து மொத்தம் 200 பேர் போராட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டிருக்கிறோம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் தொடரும்” என்று கூறியிருக்கிறார்கள்.

மொத்தத்தில் விவசாயிகள் போராட்டம் நாளாக.. நாளாக.. வலுப்பெற்றுக்கொண்டு வருகிறது. வருகிற 26-ந்தேதி வந்தால், 8 மாதங்கள் நிறைவுபெறும் சூழ்நிலை இருக்கிறது. இவ்வளவு நாள் போராட்டம் நடக்கிறது என்றால், எந்த அளவுக்கு அவர்கள் 3 வேளாண் சட்டங்களை வேண்டாம் என்று உறுதிப்பாட்டுடன் இருக்கிறார்கள் என்பது நன்றாக புலனாகிறது.

எனவே, இனியும் இந்தப் போராட்டம் நீடிக்காமல், நாடாளுமன்றத்தில் இதற்கொரு முற்றுப்புள்ளி வைப்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசாங்கமும் முன்வரவேண்டும். எதிர்க்கட்சிகளும் அதற்கான வழிகளை சொல்லவேண்டும். மொத்தத்தில், போதும் விவசாயிகள் போராட்டம். இனிமேலும் நீடிக்க வேண்டாம். அவர்கள் தங்கள் விவசாயப் பணிகளை கவனிக்கச் செல்லட்டும். இந்தப் பிரச்சினையில் சுமுக முடிவை எட்ட, மத்திய அரசாங்கம், எதிர்க்கட்சிகள், விவசாயிகள் என எல்லோரும் முன்வரவேண்டும் என்பதே இப்போதைய கோரிக்கையாக இருக்கிறது.

Next Story