மீன்பிடி படகுகளுக்கு லைசென்சா? கட்டணமா?


மீன்பிடி படகுகளுக்கு லைசென்சா? கட்டணமா?
x
தினத்தந்தி 15 July 2021 9:24 PM GMT (Updated: 15 July 2021 9:24 PM GMT)

இந்தச்சட்டத்தின்படி, இதுவரை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இருந்த மீன்பிடி படகுகள், இனி லைசென்சு வாங்கவேண்டும்.

காற்றும், மழையும் எப்படி எல்லோருக்கும் சொந்தமோ, அதுபோலத்தான் கடலும், கடலில் மீன்பிடிக்கும் உரிமையும் மீனவர்களுக்கு சொந்தம். “பரந்த கடல்தான் எங்கள் தொழிலுக்கான தளம். அதில், கடும் மழையையும், சுட்டெரிக்கும் வெயிலையும், மிரட்டும் புயலையும் பொருட்படுத்தாமல், மீன்பிடித்து கொண்டுவந்து, அந்த மீனை விற்பதுதான் எங்கள் வாழ்வாதாரம்” என்று மீனவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

உலகின் மொத்த மீன் உற்பத்தியில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில், மீன் மற்றும் மீன் பொருட்களின் பங்கு 20 சதவீதம் இருக்கிறது. மொத்த ஏற்றுமதியில் இது 10 சதவீதம் ஆகும். நாட்டின் மொத்த கடல் மீன் உற்பத்தியில் தமிழ்நாடு 4-வது இடத்தில் இருக்கிறது. 7,516 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்திய கடலோர பகுதியில், தமிழ்நாட்டிலுள்ள 13 கடற்கரை மாவட்டங்களில் 1,076 கிலோ மீட்டர் நீள கடற்கரை இருக்கிறது. இதுவரை, “கடலில் நானே ராஜா” என்று வாழ்ந்து கொண்டிருந்த மீனவர்களை கொக்கிபோட்டு இழுப்பதைப்போல, மத்திய அரசாங்கம் இந்திய கடல்சார் மீன் வளச்சட்டம் என்ற ஒரு புதிய சட்டத்தை 19-ந்தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டுவந்து நிறைவேற்ற உள்ளது.

இந்தச்சட்டத்தின்படி, இதுவரை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இருந்த மீன்பிடி படகுகள், இனி லைசென்சு வாங்கவேண்டும். இந்த லைசென்சு வாங்கியவர்கள்தான், சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் கடலில் மீன்பிடிக்க செல்லமுடியும். லைசென்சு கட்டணம், மீன்பிடி கட்டணம் ஆகியவை அவர்கள் மீன்பிடிக்க செல்லும் இடங்களை பொருத்து ஒவ்வொரு வகை படகுகளுக்கும் தனித்தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்படும். இதில், மோட்டார் பொருத்தப்படாத பாரம்பரிய மீன்பிடி படகுகள், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மீட்புப்பணிக்கு செல்லும் படகுகள் உள்பட மோட்டார் பொருத்தப்பட்ட சிலவகை படகுகளுக்கு மட்டும் மீன்பிடி கட்டணத்தில் அவ்வப்போது விதிவிலக்கு உண்டு. மேலும், மீன்பிடி தடை பகுதிகள், தடைக்காலங்கள் ஆகியவற்றை நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் மத்திய அரசாங்கத்துக்கு இந்த சட்டம் வழங்குகிறது.

இதுமட்டுமல்லாமல், இந்த சட்டத்தை மீறும் படகுகளுக்கு அபராதத்தொகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவும் மீனவர்கள் தாங்கக்கூடிய அளவில் இல்லை. ஒரேவொரு நல்ல அம்சம், இந்தச் சட்டத்தின்படி வெளிநாட்டு படகுகள் இந்திய கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடிக்க முடியாது. புதிதாக இவ்வாறு கடலில் மீன்பிடிக்கச்செல்லும் படகுகளுக்கு லைசென்சும், கட்டணமும் விதிப்பதை நேற்று நடந்த கடலோர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கடுமையாக எதிர்த்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல், அவர் தொகுதிக்குட்பட்ட பல மீன்பிடி கிராமங்களுக்கும் சென்று இந்த சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி கூறிவருகிறார். “இயற்கை பேரிடர்களாலும், டீசல் விலை உயர்வாலும் ஏற்கனவே மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த சட்டம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். மீன்பிடிப்பதற்கு குறிப்பிட்ட பகுதியை வரையறை செய்வது சரியல்ல. காற்று, நீரோட்டம் ஆகியவற்றின் போக்கை தீர்மானிக்க முடியாது. எனவே, சிறப்பு பொருளாதார மண்டலத்துக்குள் மீன்பிடிக்கவேண்டும் என்பது நடைமுறை சாத்தியமல்ல. லைசென்சு வழங்குவது, கண்காணிப்பு அமைப்பை உருவாக்குவது, அதிகாரிகளை நியமிப்பது போன்ற நடவடிக்கை மீனவர்களை குற்றவாளிகளாக்கும்” என்று ரவிக்குமார் எம்.பி. கூறிய கருத்துதான் ஒட்டுமொத்த மீனவர்களின் கருத்துமாக இருக்கிறது.

மேலும், மீன்வளம் என்பது மாநில பட்டியலில் இருக்கும்போது, இதை மத்திய அரசாங்கம் கையில் எடுத்துக்கொள்ளும் வகையில், இந்தச்சட்டத்தை பிறப்பிக்கக்கூடாது. லைசென்சு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது, லைசென்சு கட்டணம், மீன்பிடி கட்டணமெல்லாம் கடல்சார் மீன்வள மேம்பாட்டு நிதியில் சேர்க்கப்பட்டு, மீன்வளத்தை பெருக்குவதற்கும், மீனவர்நலன், பாதுகாப்புக்காக செலவழிக்கப்படும் என்றாலும் மீனவர்களுக்கு இந்த புதிய சட்டம் பாதிப்பை ஏற்படுத்தும், வேண்டாம் என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது.

Next Story