தலையங்கம்

தொழில் முதலீடுகளை ஈர்க்க மாநிலங்களுக்கு இடையே போட்டா போட்டி! + "||" + Pota competition between states to attract business investment!

தொழில் முதலீடுகளை ஈர்க்க மாநிலங்களுக்கு இடையே போட்டா போட்டி!

தொழில் முதலீடுகளை ஈர்க்க மாநிலங்களுக்கு இடையே போட்டா போட்டி!
ஒரு மாநிலத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படவேண்டும் என்றால், தனியார் முதலீடுகள் பெருமளவில் ஊக்குவிக்கப்படவேண்டும்.
ஒரு மாநிலத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படவேண்டும் என்றால், தனியார் முதலீடுகள் பெருமளவில் ஊக்குவிக்கப்படவேண்டும். எல்லா தொழில்களையும் மாநில அரசே தொடங்கிவிடமுடியாது. தனியார் பங்களிப்பு மிகமிக அவசியம். அந்தந்த மாநிலத்திலுள்ள தொழில் முனைவோர் மட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களிலுள்ள தொழில் முனைவோர், ஏன்.. வெளிநாடுகளிலுள்ள தொழில் முனைவோரையும் ஈர்க்கும் முயற்சியில் வெற்றி பெற்றால்தான் தொழில் வளம் பெருகும்.


அந்தவகையில், கேரளாவில் புகழ்பெற்ற கிடெக்ஸ் குரூப் நிறுவனம், விரைவில் தொடங்க இருக்கும் தொழில்களுக்கான முதலீட்டை ஈர்க்க தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்கள் போட்டாபோட்டி போட்டன. கேரளாவில் 1968-ம் ஆண்டு 10 தொழிலாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று ஆல்போல் தழைத்து, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்குகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் உள்நாட்டு விற்பனைக்கு மட்டுமல்லாமல், மேற்காசிய, ஐரோப்பிய நாடுகளுக்கும் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பிரஷர் குக்கர்கள் உள்பட அலுமினிய பொருட்கள், மசாலா பொடிகள், பள்ளிக்கூட பைகள் என்று இந்த நிறுவனத்தின் ஒரு பிரிவும், கிடெக்ஸ் கார்மென்ட்ஸ் என்ற பிரிவு குழந்தைகளுக்கான ஆடைகள் உற்பத்தியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கேரளாவில் மேலும் ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் இந்த நிறுவனம் ஆயத்த ஆடைகள் பூங்கா மற்றும் திருவனந்தபுரம், கொச்சி, பாலக்காடு ஆகிய இடங்களில் தொழிற்பூங்காக்களை அமைக்க திட்டமிட்டிருந்தது. ஏறத்தாழ 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் திட்டம் இது. கேரள அரசுடன் ஏற்பட்ட கருத்து மோதலில், இந்த நிறுவனம் தன் முதலீட்டை வேறு மாநிலங்களுக்கு எடுத்துச்செல்ல தீர்மானித்தவுடன், தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்கள் எப்படியாவது தங்கள் மாநிலத்துக்கு இந்த முதலீட்டை கொண்டுவந்துவிடவேண்டும் என்ற முனைப்பில் பல சலுகைகளை அறிவித்தன.

தமிழக அரசு முதலீட்டில் 40 சதவீத மானியம், இதற்கான நிலத்தை சந்தை மதிப்பில் பாதி விலையில் தருவது, முத்திரைத்தாள் கட்டணத்திலிருந்து விலக்கு, 5 ஆண்டுகளுக்கு மின்சார கட்டணத்தில் சலுகை, மாசு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் 25 சதவீத மானியம், தொழிலாளர்களின் 6 மாத பயிற்சி காலத்தில், ஒவ்வொருவருக்கும் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை உதவித்தொகை, மூலதன முதலீட்டில் மாநில சரக்கு சேவை வரி விலக்கு என்பதுபோன்ற பல சலுகைகளை அறிவித்தது.

ஆனால், இந்தப்போட்டியில் தெலுங்கானா முந்திக்கொண்டது. ஏராளமான சலுகைகளை அறிவித்ததோடு மட்டுமல்லாமல், ஒரு ஜெட் விமானத்தை, ஒரு சிறப்பு பிரதிநிதியோடு கொச்சிக்கு அனுப்பி, கிடெக்ஸ் நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் உள்பட அந்த நிறுவன இயக்குனர்கள், துணைத்தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளை ஐதராபாத் அழைத்துவந்து, தொழில்துறை மந்திரி மற்றும் உயர் அதிகாரிகளோடு பேசவைத்து, என்னென்ன சலுகைகளை வழங்குவோம்? என்பதை பட்டியலிட்டு, இந்த முதலீட்டை ஈர்ப்பதை தெலுங்கானா உறுதிசெய்துவிட்டது. முதல் கட்டமாக, உடனடியாக வாரங்கல்லில் ஆயத்த ஆடை உற்பத்திக்காக ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதாக கிடெக்ஸ் நிறுவனம் உறுதியளித்துவிட்டது.

தனியார் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில், இப்போது மாநிலங்களுக்கு இடையே கடும்போட்டி ஏற்பட்டிருக்கிறது. எந்தவொரு தொழில் தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு இடத்தில் தொடங்கப்பட்டாலும், அந்த இடத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படும், வர்த்தகம் தழைக்கும், மாநிலத்தில் உற்பத்தி பெருகும், வரிவருவாய் அதிகரிக்கும் என்று பல வளர்ச்சிகளுக்கு அந்த முதலீடுகள் வித்திட்டுவிடும்.

எனவே, தமிழக தொழில்துறை கடலில் வலைவீசி மீன்பிடிக்கும் மீனவர்போல, தொழில் முதலீடுகள் செய்வதற்கு தயாராக இருக்கும் தொழில் முனைவோரை வலைவீசி பிடித்து, மற்ற மாநிலங்கள் வழங்கும் சலுகைகளைவிட, அதிக சலுகைகளை வழங்கி நிறைய தொழில்களை கொண்டுவரவேண்டும் என்பதே இன்றைய காலக்கட்டத்தின் தேவையாக இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டி
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
2. 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிப்பு சர்ப்ராஸ் அகமது இடம்பெறவில்லை
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுக்கு இடம் கிடைக்கவில்லை.
3. உள்ளாட்சி தேர்தலில் எல்லா இடங்களிலும் போட்டியிடுவோம்: சீமான்
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை சின்ன போரூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வ.உ.சிதம்பரனார் உருவப்படத்துக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
4. மும்பை மேயர் பதவிக்கு சோனு சூட் போட்டி?
தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் சோனுசூட் கொரோனா காலத்தில் நடை பயணமாக சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாகன வசதிகள் செய்து கொடுத்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.
5. அகில இந்திய காவல்துறை போட்டி: வெற்றி பெற்ற தமிழக போலீஸ் வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசு
அகில இந்திய காவல்துறை போட்டி: வெற்றி பெற்ற தமிழக போலீஸ் வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசு கூடுதல் டி.ஜி.பி. வழங்கினார்.