இஸ்ரேல் தொழில் நுட்பம் மூலம் செல்போன்கள் ஒட்டுக்கேட்பா?


இஸ்ரேல் தொழில் நுட்பம் மூலம் செல்போன்கள் ஒட்டுக்கேட்பா?
x
தினத்தந்தி 20 July 2021 8:19 PM GMT (Updated: 20 July 2021 8:19 PM GMT)

உலகில் பல ஊழல்கள், முறைகேடுகள், டெலிபோன் ஒட்டுக்கேட்புகள் எல்லாமே பத்திரிகைகளில் வெளிவந்த பிறகுதான் வெளிச்சத்துக்கு வருகின்றன.

உலகில் பல ஊழல்கள், முறைகேடுகள், டெலிபோன் ஒட்டுக்கேட்புகள் எல்லாமே பத்திரிகைகளில் வெளிவந்த பிறகுதான் வெளிச்சத்துக்கு வருகின்றன. அந்தவகையில், தற்போது நாடாளுமன்றத்தில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிவருவது, செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்தான். இஸ்ரேல் நாட்டு நிறுவனமான என்எஸ்ஓ அமைப்பு, அதிநவீனமான பெகாசஸ் என்று கூறப்படும் உளவு மென்பொருள் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களை எளிதில் ஒட்டுக்கேட்க முடியும். வெறும் பேச்சுக்களை மட்டுமல்லாமல், செல்போன்களிலுள்ள அத்தனை தகவல்களையும், புகைப்படங்களையும், இ-மெயில் விவரங்களையும் எளிதாக தெரிந்துகொள்ள முடியும். வாட்ஸ்-அப் அழைப்பில் ஒரு ‘மிஸ்டுகால்’ கொடுத்தால்போதும், அந்த செல்போனிலுள்ள அனைத்து விவரங்களும், அந்த மென்பொருளை பயன்படுத்தும் நிறுவனத்துக்கு சென்று, அவர்கள் கம்ப்யூட்டரில் பதிவாகிவிடும்.

என்எஸ்ஓ நிறுவனம், பயங்கரவாதிகள் நடமாட்டம் மற்றும் சமூகவிரோதிகளை கண்காணிக்க அரசாங்கங்களுக்குத்தான் இந்த மென்பொருளை விற்போம் என்று கூறுகிறது. இந்தியாவில், பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் பலருடைய செல்போன்கள் கடந்த 4 ஆண்டுகளாக ஒட்டுக்கேட்கப்பட்டதாக உலகம் முழுவதிலுமுள்ள 17 ஊடகங்கள், பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ‘கார்டியன்’, ‘வாஷிங்டன் போஸ்ட்’ உள்ளிட்ட பத்திரிகை கூட்டமைப்புகள் அடங்கிய இந்தக்குழுவில், இந்தியாவிலுள்ள ‘தி வயர்’ என்ற இணையதள பத்திரிகையும் உண்டு. இதிலிருந்துதான் பெகாசஸ் மென்பொருள் மூலம் ராகுல்காந்தி, நீதிபதிகள், தற்போது மத்திய மந்திரிகளாக இருக்கும் அஸ்வினி வைஷ்ணவ், பிரகலாத் பட்டேல், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரியிலுள்ள தொற்றுநோய் சிகிச்சை பெண் மருத்துவ நிபுணர் ககன்தீப் காங், அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் கூறிய பெண் என்று ஒரு நீண்ட பட்டியல் மட்டுமல்லாமல், 38 பத்திரிகையாளர்களின் செல்போன்களும் உளவு பார்க்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் இவ்வாறு 50 ஆயிரம் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் வந்துள்ளது.

ஏற்கனவே, கடந்த 2019-ம் ஆண்டு வாட்ஸ்-அப் நிறுவனம், இந்தியாவில் வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்தும் 121 பேரின் செல்போன்கள் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தெரிவித்திருந்தது. இப்போது, இந்தத்தகவலை அம்னெஸ்டி இன்டர்நேஷனல், பாரீசில் உள்ள பர்பிடன் ஸ்டோரிஸ் ஆகிய நிறுவனங்கள்தான் இந்த பத்திரிகைகளுக்கு கொடுத்துள்ளது. அம்னெஸ்டி நிறுவனம், இதில் சில செல்போன்களை தடய அறிவியல் செய்ததில், அவை ஊடுருவப்பட்டு, உளவுபார்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ‘தி வயர்’ இணையதள பத்திரிகையும் 10 செல்போன்களை தடய அறிவியல் செய்ததில், அவை உளவுபார்க்கப்பட்டது அல்லது உளவுபார்க்க முயற்சிக்கப்பட்டது என்று கண்டுபிடித்தது.

ஆனால், மத்திய அரசாங்கம் இதை மறுத்துள்ளது. இந்தியாவில் சட்டவிரோதமாக உளவுபார்ப்பது என்பதற்கு சாத்தியமே இல்லை என்று கூறியிருக்கிறது. இந்த மென்பொருளை விற்ற என்எஸ்ஓ நிறுவனமும் இதற்கென்ன அத்தாட்சி? என்று பொத்தாம் போக்கில்தான் சொல்லியிருக்கிறதே தவிர, நாங்கள் இந்த மென்பொருளை விற்கவில்லை என்று உறுதிப்பட தெரிவிக்கவில்லை. இப்போது, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இப்பிரச்சினையை பெரிதும் கிளப்புகின்றன. இந்த குற்றச்சாட்டு சாதாரணமானது அல்ல. ‘பிரைவசி’ என்று கூறப்படும் தனிவெளி அல்லது தனிமனித அந்தரங்கத்தை பெரிதும் பாதிப்பதாகும். இப்போதே அரசல் புரசலாக பலர் எங்கே தங்கள் செல்போன்கள் ‘டேப்’ செய்யப்படுகிறதோ? என்ற அச்சத்தில், வாட்ஸ்-அப் கால் மற்றும் பேஸ் டைமில் பேசுகிறார்கள். ஆனால், வாட்ஸ்-அப் காலே உளவு பார்க்கப்பட்டது என்ற தகவல் மக்களை அச்சமடைய செய்துள்ளது. எனவே, தாங்கள் உளவு பார்க்கவில்லை என்று அரசாங்கம் மறுப்பதற்கு பதிலாக, ஒரு சுயேச்சையான நீதி விசாரணையோ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டுக்குழு விசாரணையோ நடத்தி, எது உண்மை? என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும். ஏனெனில், இது தனிமனித உரிமைகளின் அடிப்படை சம்பந்தப்பட்டது.

Next Story