தலையங்கம்

முதலீட்டாளர்களின் முதல் முகவரி-தமிழ்நாடு ! + "||" + Investors' First Address - Tamil Nadu!

முதலீட்டாளர்களின் முதல் முகவரி-தமிழ்நாடு !

முதலீட்டாளர்களின் முதல் முகவரி-தமிழ்நாடு !
பொதுவாக எந்தவொரு முயற்சியை ஊக்கப்படுத்தவும், “ஒரு வழி அடைக்கப்பட்டால், 9 வழிகள் திறந்திருக்கும்” என்ற ஒரு பழமொழியை கூறுவது உண்டு.
பொதுவாக எந்தவொரு முயற்சியை ஊக்கப்படுத்தவும், “ஒரு வழி அடைக்கப்பட்டால், 9 வழிகள் திறந்திருக்கும்” என்ற ஒரு பழமொழியை கூறுவது உண்டு. ஆனால், தமிழ்நாட்டில் கிடெக்ஸ் நிறுவன முதலீடு கிடைக்காமல், ஒரு வழி அடைக்கப்பட்டநேரத்தில், உடனடியாக 49 வழிகள் திறக்கப்பட்டிருப்பது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு கிடைத்த பெரிய வெற்றியாகும்.


தமிழக அரசின் தொழில்துறை சார்பில், நேற்று முன்தினம் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு” என்ற ஒரு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அந்தவிழாவில், மு.க.ஸ்டாலின் பேசும்போது, “தமிழ்நாடு என்பது பண்பாட்டின் முகவரியாக இருந்தது. அத்தகைய தமிழ்நாடு முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக மாறவேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்” என்று உறுதிப்பட தெரிவித்தார்.

தமிழ்நாட்டுக்கு பல சிறப்புகள் உண்டு. அமைதிப் பூங்காவின் முகவரி, வளர்ச்சி திட்டங்களின் முகவரி, சமூக நலத்திட்டங்களின் முகவரி தமிழ்நாடுதான் என்பதோடு, நாட்டிலுள்ள பல மாநிலங்கள் செயல்படுத்தும் திட்டங்கள், தமிழ்நாட்டை பார்த்துதான் என்பதற்கு அத்தாட்சியாகத்தான், அந்த திட்டங்களின் முகவரியாக தமிழ்நாடு இருக்கிறது. இனி முதலீட்டாளர்களின் முகவரி என்ற பெயரை பெறும்வகையில், தொழில் முனைவோர்களை, அது தமிழ்நாட்டில் உள்ளவர்களாக இருந்தாலும் சரி, பிற மாநிலங்களில் உள்ளவர்கள் என்றாலும் சரி, பிற நாடுகளை சேர்ந்தவர்கள் என்றாலும் சரி, அவர்கள் தங்கள் முதலீடுகளுக்காக உற்று நோக்கும் மாநிலம் தமிழ்நாடுதான் என்ற நிலையை பெறப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

நேற்று முன்தினம் சென்னையில் நடந்த நிகழ்வில் ரூ.17,141 கோடி முதலீட்டில், 55,054 பேர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கிடும் வகையில், 35 தொழில் முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. ரூ.4,250 கோடி முதலீட்டில் 21,630 பேர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 9 தொழில் திட்டங்களுக்கு மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.7,117 கோடி முதலீட்டில் 6,798 பேர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் 5 திட்டப்பணிகளை அவர் தொடங்கிவைத்தார். ஆக மொத்தம் 49 திட்டங்கள் மூலம் ரூ.28,508 கோடி முதலீட்டில் 83,482 பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகப்போகிறது.

இந்த திட்டங்கள் அனைத்தும் சென்னையில் மட்டுமல்ல, சென்னையை சுற்றிலும் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக தொழில் முன்னேற்றம் ஏற்படப்போகிறது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, கோவை, சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை என்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இந்த திட்டங்கள் பரவலாக அமையப்போகிறது. தமிழக தொழில்துறை இந்த மாவட்டங்கள் போல, இன்னும் எந்தெந்த மாவட்டங்களில் தொழில் முதலீடுகளை ஈர்க்கலாம் என்ற முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

ஒட்டுமொத்த தமிழ்நாடே தொழிற்சாலைகள் மிகுந்த மாநிலமாக அமைவதற்கு முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டமும்தான் என்ற நிலை உருவாகவேண்டும். கொரோனாவால் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்த இந்த நேரத்திலும், தமிழ்நாட்டில் 49 திட்டங்களில் முதலீட்டாளர்கள் தங்கள் முத்திரையை பதிக்கப்போகிறார்கள் என்பது நிச்சயமாக பெருமைக்குரியது, பாராட்டுக்குரியது. இதில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான 35 தொழில் முதலீடுகளுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி, அடுத்த ஓரிரு மாதங்களுக்குள், அந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றுக்கும் முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டும் சூழலை உருவாக்கும் பொறுப்பு தொழில்துறைக்கு மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட ஒவ்வொரு துறைக்கும் இருக்கிறது. தொழில் வளர்ச்சி இருந்தால், மாநிலத்துக்கு மட்டும் பொருளாதார வளர்ச்சி என்பதல்ல, மக்களின் பொருளாதாரமும் வளரும், வாழ்வு சிறக்கும் என்றவகையில், இந்தியாவின் தொழில் வளர்ச்சி மிகுந்த மாநிலம் தமிழ்நாடு என்பதை உருவாக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ள இலக்கை அடையும் வகையில், ஒவ்வொரு அதிகாரியும், ஒவ்வொரு துறையும் முனைப்புடன் செயல்படவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

1. 4 மாவட்டங்களில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு..! 23 மாவட்டங்களில் பஸ்கள் ஓடத் தொடங்கியது-மக்கள் மகிழ்ச்சி
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கோவில்களில் சாமி தரிசனம். பள்ளிவாசல்களில் தொழுகை,, தேவாலயங்களில் பிரார்த்தனையும் தொடங்கியது
2. தடுப்பூசி போட்டுக்கொள்ள தமிழ்நாடே தயாராக உள்ளது, ஆனால் தடுப்பூசிதான் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிழ்நாடே தயாராக உள்ளது. ஆனால் தடுப்பூசிதான் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
3. அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு
அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
4. நீட் உள்பட அனைத்து நுழைவுத் தேர்வுகளிலிருந்தும் விலக்கு: பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
நீட் உள்பட அனைத்து நுழைவுத் தேர்வுகளிலிருந்தும் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.