பழைய செல்போன்கள் ஒலிம்பிக் பதக்கங்கள் ஆகின!


பழைய செல்போன்கள் ஒலிம்பிக் பதக்கங்கள் ஆகின!
x
தினத்தந்தி 23 July 2021 9:05 PM GMT (Updated: 23 July 2021 11:35 PM GMT)

கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு நடக்குமா?, நடக்காதா? என்று உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த 32-வது ஒலிம்பிக் போட்டி, ஒரு ஆண்டு தாமதத்திற்கு பிறகு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்திய நேரப்படி நேற்று மாலை 4.30 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது.

இதுவொரு வித்தியாசமான ஒலிம்பிக் போட்டி. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. 68 ஆயிரம் பேர் அமரும் வசதிகொண்ட ஸ்டேடியத்தில் நேற்று 950 பேர் மட்டுமே ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். கண்கவர் கலை நிகழ்ச்சிகளை நேரில் பார்க்க முடியாவிட்டாலும், டெலிவிஷன்களில் பார்த்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த போட்டியில், 205 நாடுகளைச்சேர்ந்த 11,200-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள்,33 விளையாட்டுகளில், 339 தங்கப் பதக்கங்களை குறிவைத்து விளையாடப் போகிறார்கள்.இந்தப்போட்டியில், மிகவும் குறைந்த வயது வீரர் என்றால், டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்ளும் சிரியா நாட்டை சேர்ந்த 11 வயது ஹெண்ட் சாசா. அதிக வயதான வீரர் யார்? என்றால்,6 முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த 66 வயது பெண் வீராங்கனை மேரி ஹன்னா. இவர் ஈகுஸ்டிரியன் என்று கூறப்படும், பாய்ந்து செல்லும் குதிரையில் அமர்ந்தவாரே சாகசம் புரியும் போட்டியில் பங்கேற்கிறார்.

இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் இதுவரை இல்லாத பல முத்திரைகளை பதிக்கப்போகிறது. இந்தியாவிலிருந்து 125 வீரர்கள், வீராங்கனைகள் 18 போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். முதல்முறையாக தமிழகத்திலிருந்து பெண் வீராங்கனைகள், வாள் வீச்சு போட்டியில் பவானி தேவியும், பாய்மர படகுப்போட்டியில் நேத்ரா குமணனும் கலந்துகொண்டு இந்தியாவுக்கு பெருமை சேர்க்கப்போகிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து இதுவரை இல்லாத அளவு 11 வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்கிறார்கள்.

1900-ம் ஆண்டு பாரீசில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 2 வெள்ளிப்பதக்கங்களை பெற்ற இந்தியா, கடந்த 2016-ம் ஆண்டு ரியோடி ஜெனீரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிவரை 28 பதக்கங்களைத்தான் பெற்றிருக்கிறது. பதக்க பட்டியலில் ஒற்றை இலக்கத்தை தாண்டாத இந்தியா, இந்தமுறை கண்டிப்பாக இரட்டை இலக்கத்தில் பதக்கங்கள் பெறும், அதற்கு தமிழ்நாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உறுதுணையாக இருப்பார்கள். மேலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த, தங்கப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.3 கோடி, வெள்ளிப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.2 கோடி, வெண்கலப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.1 கோடி என்ற ஊக்கப்பரிசை நிச்சயம் பெறுவார்கள் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது.

இந்த ஆண்டு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் செய்வதற்கு, பயன்படுத்தாமல் கழித்துப்போட்ட மொபைல் போன்கள், லேப்டாப்கள், டிஜிட்டல் கேமராக்கள், விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்டவைகளை கொண்டு பதக்கங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்காக 62 லட்சத்து 10 ஆயிரம் பழைய செல்போன்களை, அங்குள்ள எலக்ட்ரானிக்ஸ் கடைகள், பள்ளிக்கூடங்கள், பொதுமக்கள் நன்கொடையாக கொடுத்துள்ளனர். இதற்காக, ஜப்பான் அரசாங்கம் கடந்த சில ஆண்டுகளாகவே தபால் அலுவலகங்கள், தெருமுனைகளில் மஞ்சள் நிறத்தில் நன்கொடை பெட்டிகளை வைத்து, பழைய செல்போன் உள்ளிட்ட பொருட்களை சேகரித்தது. ஆக.. வேண்டாம் என்று கழிக்கப்பட்ட எந்தப்பொருட்களும், தூக்கியெறியப்படக்கூடிய பொருட்கள் அல்ல, அதையும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம் என்பதை டோக்கியோ ஒலிம்பிக் காட்டிவிட்டது.

ஜப்பான் நாட்டு மக்களுக்கு இந்தியா என்றால் ரொம்பப்பிடிக்கும். அதிலும் குறிப்பாக, ரஜினிகாந்த் படத்துக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. எனவே, பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தால் நிறையபேர் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்தி ஆரவாரம் செய்திருப்பார்கள். இப்போது, அதற்கு ஆளில்லை என்றாலும், டெலிவிஷன் பார்க்கும்போதே ஜப்பான் நாட்டினரும், தமிழக மக்களும், தமிழ்நாட்டிலிருந்து கலந்துகொள்ளும் 11 வீரர்களையும் மனதார உற்சாகப்படுத்துவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Next Story