100 வயதான சங்கரய்யாவுக்கு “தகைசால் தமிழர்” விருது!


100 வயதான சங்கரய்யாவுக்கு “தகைசால் தமிழர்” விருது!
x
தினத்தந்தி 29 July 2021 7:58 PM GMT (Updated: 2021-07-30T01:28:04+05:30)

சுதந்திர தின விழாவில் அதாவது, ஆகஸ்டு 15-ந்தேதி கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சரால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்காகவும் பாடுபட்ட தீரர்கள் பலருக்கு உரிய அங்கீகாரம் சமுதாயத்தில் கிடைக்கவில்லை, அரசாலும் கிடைக்கவில்லை என்ற மனக்குறை மக்கள் மனதில் நீண்ட நெடுங்காலம் இருந்தது. அதைப்போக்கும் வகையில் தமிழ்நாட்டுக்காக தொண்டாற்றியவர்களுக்கு உரிய கவுரவம் வழங்கப்பட வேண்டும் என்ற வகையில் தமிழ்நாட்டுக்கும், தமிழ் இனத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும்விதமாக ‘தகைசால் தமிழர்’ என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ந்தேதி ஆணையிட்டார்.

இந்த விருதுக்கான விருதாளர்களை தேர்வு செய்யும் பொருட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆகியோரை உள்ளடக்கிய ஒரு குழுவையும் நியமித்திருந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் தகைசால் தமிழர் விருதாளருக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டுச்சான்றிதழும் சுதந்திர தின விழாவில் அதாவது, ஆகஸ்டு 15-ந்தேதி கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சரால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 24 மணி நேரம் கூட ஆகவில்லை, ‘எக்ஸ்பிரஸ்’ வேகத்தில் உடனடியாக இந்த குழு கூடி முதல் தகைசால் தமிழர் விருதை பெறுபவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

கடந்த 15-ந்தேதி 100-வது பிறந்தநாளை கொண்டாடிய சங்கரய்யாவுக்கு ஒரே மாதத்தில், அதாவது வருகிற ஆகஸ்டு 15-ந்தேதி தகைசால் தமிழர் விருது வழங்கப்படுவது மிகவும் பெருமைக்குரியது ஆகும். இந்த விருதை பெறுவதில் சங்கரய்யாவுக்கு பெருமை இருப்பதுபோல, அந்த விருதும் நிச்சயம் பெருமை பெறும். ஏனெனில் இந்த விருதுக்கு மிகப்பொருத்தமான தலைவர் அவர். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் பிறந்த அவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது பரிமேலழகர் தமிழ் மன்றத்தின் செயலாளராக இருந்து, தமிழ் வளர்ச்சிக்காக பணியாற்றியவர். இந்தி திணிப்பை எதிர்த்து ராஜாஜிக்கு கருப்பு கொடிக்காட்டும் போராட்டத்தில் சிறை சென்றவர். நாட்டின் சுதந்திரத்துக்காகவும், சுதந்திரமடைந்த பின்னர் மக்கள் நல்வாழ்வுக்காகவும், சமூக மாற்றத்துக்காகவும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் தலைவர் அவர்.

சங்கரய்யா 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967-ம் ஆண்டு தி.மு.க. வெற்றி பெற்று அண்ணா முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற நேரத்தில்தான் தமிழ் ஆட்சி மொழி என்ற தீர்மானம் சட்டசபையில் முன்மொழியப்பட்டது. அப்போது பேசிய சங்கரய்யா, ‘தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது. அடுத்த சில ஆண்டுகளுக்குள் நிர்வாக மொழியாக, பாட மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழை ஆக்கிவிட வேண்டும்’ என்ற திருத்தத்தை கொடுத்தார். இதனை அண்ணா ஏற்கவே, அது தமிழ்நாட்டின் மொழி கொள்கையானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகிறார்.

சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. சுதந்திரப்போராட்ட காலத்தில் 4 ஆண்டுகள் சிறைவாசம் கண்ட சங்கரய்யா அந்த ஓய்வூதியத்தை இன்று வரை வாங்கவில்லை. ஏன் வாங்கவில்லை என்று கேட்டால், சுதந்திரத்துக்காக சிறைக்கு சென்றதே பெரிய பரிசுதான் என்று பெருமிதத்துடன் கூறுகிறார். தனக்கு இந்த விருதை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ள சங்கரய்யா, விருது தொகையான ரூ.10 லட்சத்தை முதல்-அமைச்சரின் கொரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குவதாக அறிவித்து எல்லோருடைய மனதிலும் பெரிய இடத்தை பெற்றுவிட்டார்.

80 ஆண்டு கால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரரான சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்‘ என்ற விருது வழங்கப்படுவது கண்டு தமிழ்நாடு பூரிக்கிறது. இதை அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிக்கிறது.

Next Story