ஆட்சிகள் மாறலாம்; நலத்திட்டங்கள் தொடர வேண்டும்!


ஆட்சிகள் மாறலாம்; நலத்திட்டங்கள் தொடர வேண்டும்!
x
தினத்தந்தி 30 July 2021 7:11 PM GMT (Updated: 2021-07-31T00:41:35+05:30)

நிறைவேற்றிய நலத்திட்டங்கள், நல்ல திட்டங்கள் தொடரவேண்டும்” என்பதற்கு கூறப்படும் அறிவுரையாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இந்த நூற்றாண்டு மட்டுமல்ல, இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், இங்கிலாந்து நாட்டில் 1850 முதல் 1892 வரை, விக்டோரியா மகாராணி அரசவையில், கவிஞராக இருந்த ஆல்பிரட் டென்னிசன் என்ற புகழ்பெற்ற கவிஞர் எழுதிய, “மென் மே கம் அண்டு மென் மே கோ, பட் ஐ கோ ஆன் பார் எவர்” என்ற ஆங்கில கவிதை, அதாவது “மனிதர்கள் வருவார்கள், மனிதர்கள் போவார்கள், ஆனால் நான் சென்று கொண்டே இருப்பேன்” என்று எழுதிய கவிதை ஒருபோதும் மறக்கப்படாது. இதை பூமிக்காக மேற்கோள்காட்டி சிலர் கூறினாலும், இப்போதும் பல நேரங்களில், வித்தியாசமான பல விஷயங்களுக்கு மேற்கோள் காட்டப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இப்போது அதை, “அரசுகள் மாறினாலும், அவர்கள் நிறைவேற்றிய நலத்திட்டங்கள், நல்ல திட்டங்கள் தொடரவேண்டும்” என்பதற்கு கூறப்படும் அறிவுரையாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. கடலூர் நகரசபையிலுள்ள செம்மண்டலம் என்ற இடத்தில் 2010-ம் ஆண்டு முதல், 11 ஆண்டுகளாக ஒரு சமூக நலக்கூடம் பூட்டியே கிடக்கிறது. 2009-ம் ஆண்டு இந்த சமூக நலக்கூடம், அந்தப்பகுதி மக்களின் நீண்டநாள் தேவையை கருத்தில்கொண்டு, புத்தம் புதிதாக கட்டப்பட்டது. ஒருசில திருமணங்கள் மட்டுமே நடந்த சூழ்நிலையில், கருணாநிதி ஆட்சி காலத்தில், 2006-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறிய, அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் இலவச கலர் டெலிவிஷன்கள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அந்தப்பகுதி மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 7,238 கலர் டெலிவிஷன் பெட்டிகளை அந்த சமூக நலக்கூடத்தில்வைத்து அதிகாரிகள் பூட்டிவிட்டார்கள். “தினத்தந்தி”யில் இதுகுறித்த செய்தி படத்துடன் வந்ததும், மாவட்ட கலெக்டர் இது பழுதடைந்த டெலிவிஷன்கள் என்பதாலும், சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாதிரி நடத்தை விதிகள் 1-3-2011 முதல் அமலுக்கு வந்ததாலும் விநியோகம் நிறுத்தப்பட்டது என்று கூறியுள்ளார்.

ஆக, 11 ஆண்டுகள் அந்த கலர் டெலிவிஷன்கள் யாருக்கும் கொடுக்கப்படாமல், பயன்பாடு இல்லாமல் இருப்பது உறுதியாகிவிட்டது. இது ஒருபக்கம் இருந்தாலும், அந்த சமூக நலக்கூடம் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு திருமண மண்டபம் போன்று இருந்தநிலையில், ஏழை மக்கள் அதையும் பயன்படுத்த முடியவில்லை. இவ்வாறு கலர் டெலிவிஷன்கள் பழுதடைந்து இருந்தால், அப்போதே பழுதுபார்த்தோ அல்லது அதைவிற்ற நிறுவனத்திடம் திரும்ப கொடுத்தோ புது டெலிவிஷன்களை வாங்கி விநியோகம் செய்து இருக்கலாமே! அதைச்செய்ய தவறியது யார்?. 11 ஆண்டுகளாக அந்த சமூக நலக்கூடத்தை பூட்டிவைக்க உத்தரவிட்டது யார்? என்பதை விசாரித்து, அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் திறக்காத நிலையில், ஸ்மார்ட் போன் வாங்க வசதியில்லாத, கம்ப்யூட்டர் வாங்க வசதி இல்லாத, ஏழை குடும்ப மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியை பார்க்க கருணாநிதி வழங்கிய இலவச கலர் டெலிவிஷன்கள்தான் பெரிய அளவில் உதவியாக இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. கடலூரில் மட்டுமல்ல, எந்தெந்த ஊர்களில், இதுபோல கலர் டெலிவிஷன்கள் விநியோகிக்கப்படாமல் இருக்கிறது என்பதை தொடர்புடைய துறையினர் கணக்கெடுத்து, எந்தெந்த குடும்பங்களுக்கு வழங்கப்படவில்லையோ, அவர்களுக்கு உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆட்சிகள் மாறினாலும், அரசு எந்திரம் சுழன்று கொண்டேதான் இருக்கும், இருக்கவேண்டும். எப்படி கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு புறப்படும் ஒரு ரெயிலை ஓட்டும் டிரைவர், மதுரையில் மாறுவார், பின்னர் திருச்சியில் மாறுவார், தொடர்ந்து விழுப்புரத்திலும் மாறுவார். டிரைவர்கள் மாறிக்கொண்டே இருந்தாலும் ரெயில் சென்னையை நோக்கி சென்று கொண்டே இருக்கும். அதுபோல, ஆட்சிகள் மாறினாலும், அவர்கள் செய்த நல்ல திட்டங்கள், சமூக நல உதவிகள் தடைபடாமல் சென்றுகொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கை மட்டுமல்ல, தேவையாகவும் இருக்கிறது.

Next Story