வீடு தேடிவரும் மருத்துவம்!


வீடு தேடிவரும் மருத்துவம்!
x
தினத்தந்தி 3 Aug 2021 7:19 PM GMT (Updated: 3 Aug 2021 7:19 PM GMT)

நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் “வீடு தேடி மருத்துவம்” என்ற திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சாமனப்பள்ளி என்ற குக்கிராமத்திற்கு நேரடியாக சென்று தொடங்கிவைக்கிறார்.

இப்போதெல்லாம் மக்களுக்கு பல சேவைகள் வீட்டின் கதவுகளை தட்டி அளிக்கப்பட்டு வருகின்றன. வங்கி சேவைகள்கூட வாசலிலேயே கிடைக்கிறது. கொரோனா தாக்கம் ஏற்பட்ட 16 மாதங்களாக மாணவர்கள்கூட ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் வீட்டிலேயே இருந்துதான் படிக்கிறார்கள். இந்தநிலையில், நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் “வீடு தேடி மருத்துவம்” என்ற திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சாமனப்பள்ளி என்ற குக்கிராமத்திற்கு நேரடியாக சென்று தொடங்கிவைக்கிறார். இது மிகவும் பாராட்டுக்குரியது, வரவேற்புக்குரியது.

தமிழ்நாட்டில் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் பரவலாக 40 வயதுக்கு மேற்பட்ட பலருக்கு இருக்கிறது. இவர்களெல்லாம் மருந்து, மாத்திரைகளை தினமும் தவறாமல் உட்கொள்ளவேண்டும். தனியார் மருத்துவர்களிடம் சென்று சிகிச்சைபெற்று, அவர்கள் எழுதிக்கொடுக்கும் மருந்து, மாத்திரைகளை பணம் கொடுத்து வாங்கமுடியாத ஏழைகள் ஏராளமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு சென்றால், இலவசமாக டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்வதோடு, தேவையான மருந்துகளையும் கொடுக்கிறார்கள்.

கொரோனா உச்சத்தில் இருந்த நேரத்தில், ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதியில்லாத காரணத்தால், இதுபோன்ற நோய் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு செல்லமுடியாத நிலையில், கடந்த பல மாதங்களாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உடலில் சர்க்கரையின் அளவும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தத்தின் அளவும் அதிகமாகிவிட்டது. கொரோனா பாதிப்பும் இதுபோல இணை நோய்கள் உள்ளவர்களுக்கே அதிகமாக ஏற்படும் சூழ்நிலையில், இவர்கள் மருந்து, மாத்திரைகளை நாள் தவறாமல் உட்கொள்ள வேண்டியது மிகமிக அவசியமாகிறது. கொரோனா உயிரிழப்புகளிலும் 60 சதவீதம் இந்த நோய்கள் உள்ளவர்களுக்கே ஏற்பட்டிருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், காசநோய், சிறுநீரகநோய் உள்ளவர்களுக்கு, அவர்கள் வீடு தேடிபோய் மருந்து, மாத்திரைகளை வழங்குவதுதான் தமிழக அரசின் இந்தத்திட்டம். அதாவது, தற்போது அரசு மருத்துவமனைகளுக்கு வந்து மருந்து, மாத்திரைகள் வாங்குபவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவப் பணியாளர்கள் நேரடியாக வழங்குவார்கள். இதுமட்டுமல்லாமல், சிறுநீரககோளாறுக்கு டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படும் மக்களுக்கு, அவர்கள் வீட்டிற்கே கையில் எடுத்துக்கொண்டு செல்லக்கூடிய “போர்டபிள்” டயாலிசிஸ் கருவியை கொண்டு சென்று சிகிச்சையளிப்பது இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமாகும். இந்த திட்டம் நிச்சயமாக கிராமப்புற, மலைவாழ் மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.

ஆரம்பத்தில் 20 லட்சம் பேருக்கு இவ்வாறு வீடுகளுக்கே சென்று மருந்து, மாத்திரைகள் அளிக்கவும், தொடர்ந்து ஒரு கோடி பேருக்கு இந்த திட்டத்தை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. வயது முதிர்ந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்வது என்பது, நிச்சயமாக பெரும் சிரமம். அவர்களுக்கு இந்தத்திட்டம் பெருமளவில் உதவியாக இருக்கும். மருந்து, மாத்திரைகள் கொடுப்பதோடு, அடுத்தக்கட்டமாக வயது முதிர்ந்தவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாதவர்களுக்கும் வீடு தேடிவந்து சிகிச்சையளிக்கும் திட்டத்தையும் தமிழக அரசு பரிசீலித்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

“வீடு தேடி மருத்துவம்” திட்டம்போல, சில நாட்களுக்கு முன்பு மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பெட்டம் முகிலாளம் என்ற மலைகிராமத்துக்கு உயர் அதிகாரிகளுடன் நடந்தேசென்று, இரவில் அங்குள்ள மக்களை சந்தித்து, பின்னர் அங்கு மின்விசிறி வசதிகூட இல்லாத ஆரம்ப பள்ளிக்கூடத்திலேயே தங்கியிருந்து, காலை எழுந்து 15 கி.மீ. தூரம் நடந்துசென்று 8 மலைகிராம மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டதோடு மட்டுமல்லாமல், தடுப்பூசிபோட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதும் மிகவும் பாராட்டத்தக்கது.

இதுவரை, அமைச்சர்களையே நேரில் பார்க்காத அந்த மக்களுக்கு, அமைச்சர் ஒருவர் தங்களை நேரில்வந்து சந்தித்ததும், தங்களோடு இரவில் தங்கியிருந்ததும் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அமைச்சர் சென்றதுபோல தமிழ்நாட்டில் எல்லா கிராமங்களுக்கும் அதிகாரிகளும் நேரில்சென்று மக்கள் குறைகளை கேட்டால், ஒரு புதிய மறுமலர்ச்சி ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

Next Story