கருணாநிதிக்கு ஜனாதிபதி சூட்டிய புகழாரம்!


கருணாநிதிக்கு ஜனாதிபதி சூட்டிய புகழாரம்!
x
தினத்தந்தி 4 Aug 2021 7:36 PM GMT (Updated: 2021-08-05T01:06:53+05:30)

“வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார். மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்” என்ற பாடல் வரிகள் மறைந்த முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு முற்றிலும் பொருந்தும்.

மறைந்த கவிஞர் கண்ணதாசன், சினிமாவுக்கு எழுதிய பாடல்கள் ஏதோ, அந்தக்காட்சிக்கான பாடல்களாக மட்டுமல்லாமல், காலாகாலத்துக்கும் பின்பற்றத்தக்க தத்துவங்களாகவும் உள்ளன. அந்தவகையில், 50 ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய, “வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார். மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்” என்ற பாடல் வரிகள் மறைந்த முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு முற்றிலும் பொருந்தும்.

‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்பதுபோல, தன்னுடைய 14 வயதில், திருவாரூர் வீதியில், தோளில் கொடியை ஏந்திக்கொண்டு, “ஓடிவந்த இந்திப்பெண்ணே கேள். நீ தேடிவந்த கோழை உள்ள நாடு இதுவல்லவே” என்று முழங்கி, தன் தமிழ்ப்பற்றை பறைசாற்றினார். 1957-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு அவர் மறையும்வரை, 62 ஆண்டுகாலம் தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 5 முறை முதல்-அமைச்சராகவும் இருந்து மக்கள் பணியாற்றினார். அவர் சட்டமன்றம் குறித்துகூறிய கருத்துகள் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் நெஞ்சில் பதியவைத்துக் கொள்ளவேண்டிய அறிவுரையாகும். “சட்டமன்றம்-நெஞ்சம் இடித்துரைக்கும் நீதியினை மறந்துவிட்டுச் சொல்லம்புகளைத் தொடுத்துக் களித்திடும் வில் பயிற்சிக்கூடமல்ல, விளையாட்டரங்கமல்ல, எரிந்த கட்சி-எரியாத கட்சி பேசிடும் வேடிக்கை மேடையல்ல. ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ-எதனைச் சார்ந்திட்ட போதிலும், பொதுமக்கள் நலனைக் காத்திடும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டவர்களால், பொறுப்புள்ள கருத்துகளை-பொருத்தமான சொற்களை-பொறுப்போடு பேசவேண்டிய-பொறுப்புமிகுந்த இடமே-சட்டமன்றம்” என்றார்.

அப்படிப்பட்ட பெருமைமிகு சட்டமன்றத்தில் இந்திய நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவரின் திருவுருவப் படத்தை திறந்துவைத்து புகழாரம் சூட்டியுள்ளார். “இந்திய மண்ணில் மிகச்சிறந்த தலைமைகளை சட்டமன்றத்தில் கவுரவிக்கும் பாரம்பரியம் தமிழ்நாட்டில் உள்ளதை நான் அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். திருவள்ளுவர், மகாத்மாகாந்தி, ராஜாஜி, அண்ணா, காமராஜர், ஈ.வெ.ரா.பெரியார், டாக்டர் அம்பேத்கர், முத்துராமலிங்க தேவர், காயிதேமில்லத், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார், வ.உ.சி., பி.சுப்பராயன் மற்றும் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் போன்ற தலைவர்களின் படங்கள் இந்தப்பேரவையில் ஏற்கனவே உள்ளன. இப்போது, தன் வாழ்நாள் முழுவதையும் மாநிலத்தின் மக்கள் நலனுக்காக அர்ப்பணித்த கருணாநிதியின் உருவப்படமும் இருக்கும். அவர் தனது இறுதி மூச்சின்போது, இந்த மண்ணும், மக்களும் அனைத்து துறைகளிலும் வியக்கத்தக்க முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் அடைந்துள்ளதாக திருப்தியடைந்திருப்பார். தனது நீண்டகால ஆக்கப்பூர்வமான வாழ்க்கையில், தான் விழித்திருக்கும் ஒவ்வொரு கணத்தையும் தமிழக மக்களுக்கான சேவைக்காகவும், தேசத்தின் சேவைக்காகவும் செலவிட்டோம் என்பது அவருக்கு திருப்தியளித்திருக்கும். மொழி மீது ஆர்வம்கொண்ட அரசியல் தலைவர்கள் வெகுகுறைவு. கலைஞரை பொறுத்தவரை அவரது தாய்மொழி வழிபாட்டுக்குரியது. தமிழ் நிச்சயமாக மனிதகுலத்தின் மிகச்சிறந்த, மிகப்பழமையான மொழிகளில் ஒன்றாகும். ஆனால், தமிழ்மொழியை செம்மொழியாக அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெறுவதை உறுதிசெய்தவர் கருணாநிதி. கலைஞர் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு தலைவராக திகழ்ந்தார். நமது தேசிய இயக்கத்தின் தலைவர்களுடன் நமக்கு இருந்த கடைசி இணைப்புகளுள் அவரும் ஒருவர்” என்று புகழாரம் சூட்டினார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், கருணாநிதியின் புலமைகளை மிகப்பாங்குடன் எடுத்துக் கூறினார். “அவருடைய அரசியல் மதி நுட்பத்திற்காகவும், சீரிய சிந்தனைத்திறனுக்காகவும் இந்தியாவிலுள்ள அனைத்து அரசியல் தலைவர்களாலும் போற்றப்படுகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக கருணாநிதி தமிழகத்தின் லட்சக்கணக்கான மக்களின், குறிப்பாக ஏழை, எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் இதயங்களை வென்றார். அவர் மக்களின் முதல்வர் என்று அன்புடன் அழைக்கப்பட்டார்” என்று புகழ்மாலை சூட்டினார். சட்டமன்றம் நூற்றாண்டு விழா கொண்டாடும் நாளில், நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதியும், தமிழ்நாட்டின் முதல் குடிமகனான கவர்னரும் புகழாரம் சூட்டியதும், ஏற்கனவே ஒளிவிட்டு திகழும் கருணாநிதியின் புகழ் கிரீடத்தில் மேலும் ஜொலிக்கும் ஒரு வைரக்கல்லாகும்.

Next Story