விலைவாசி உயர்வுக்கு காரணம் பெட்ரோல், டீசல் விலைதான்!


விலைவாசி உயர்வுக்கு காரணம் பெட்ரோல், டீசல் விலைதான்!
x
தினத்தந்தி 6 Aug 2021 8:11 PM GMT (Updated: 2021-08-07T01:41:30+05:30)

விலைவாசி உயர்வு, மக்களின் தேவைகள் அதிகரித்ததாலோ, அவர்கள் கையில் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதாலோ ஏற்பட்டுவிடவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான் இதற்கு முழு காரணம்.

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் சிறந்த பொருளாதார நிபுணர். 1968-ம் ஆண்டிலேயே ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். அவர் தற்போதைய விலைவாசி உயர்வு பற்றி ஆய்வு மேற்கொண்டு கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். தன்னுடைய கருத்துகளுக்கு ஆதாரமாக தேசிய புள்ளியியல் அலுவலகம் கடந்த மாதம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியையும், அப்போதுள்ள ரிசர்வ் வங்கியின் இதழையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

இந்தியாவில், மத்திய அரசாங்கம் நிர்ணயித்த அளவீட்டையும் தாண்டி, இப்போது விலைவாசி உயர்வு இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். உணவுப்பொருட்களின் விலை 5.58 சதவீதமும், பருப்பு வகைகளின் விலை 10.01 சதவீதமும், பழங்கள் விலை 11.82 சதவீதமும், போக்குவரத்து செலவு 11.56 சதவீதமும், எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்பான சாதனங்கள் விலை 12.68 சதவீதமும், எண்ணெய் மற்றும் கொழுப்பு பொருட்களின் விலை 34.78 சதவீதமும் உயர்ந்திருக்கிறது.

இந்த விலைவாசி உயர்வு, மக்களின் தேவைகள் அதிகரித்ததாலோ, அவர்கள் கையில் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதாலோ ஏற்பட்டுவிடவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான் இதற்கு முழு காரணம். நேற்று பெட்ரோல் விலை மிக அதிகமாக, ஒரு லிட்டர் ரூ.102.49-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.39-க்கும் விற்கப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு பணக்காரர்களை மட்டும் பாதிப்பதில்லை. நடுத்தர மக்கள், ஏழை, எளியவர்கள் என்று எல்லாத்தரப்பினரையுமே பாதிக்கிறது. இதில், ஏழை மக்களின் பாதிப்புதான் மிகமிக அதிகம்.

இதுபோல, பொருட்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்களுக்கு ஆகும் செலவு, பஸ், டாக்சி, ஆட்டோ போன்றவற்றில் பயணம் செய்வதற்கான செலவு, டிராக்டர், பம்பு செட்டுகளுக்கு டீசல் பயன்படுத்தும் செலவு, தொழிற்சாலைகளில் மின்சார சாதனங்களுக்கு ஆகும் செலவு, பொருட்களை டெலிவரி செய்யும் சேவைத் துறையில் ஆகும் செலவு, வீடுகளில் ஒளிரும் மின் சாதனங்களுக்கு ஆகும் செலவு என்று, எல்லா பொருட்களின் விலை உயர்வுக்கும் இது வழிவகுக்கிறது.

பெட்ரோல், டீசல் மீதான வரிகள், மேல் வரிகள் (செஸ்), இறக்குமதி வரி, சரக்கு சேவை வரி ஆகிய எல்லாமே மறைமுக வரி என்பதால், இதனால் ஏற்படும் விளைவு, எல்லா பொருட்களின் விலையையும் விண்ணுக்கு கொண்டு சென்றுவிடுகின்றன. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோல், டீசலுக்கான கச்சா எண்ணெய் மீது மத்திய அரசாங்கம், அடிப்படை கலால் வரி, சிறப்பு கூடுதல் கலால் வரி என்று போடுவதோடு நிற்காமல், விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு மேல்வரி, சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேல்வரி என்று பல வரிகளை விதிக்கிறது. மாநில அரசுகளும் தன் பங்குக்கு வரி வசூலிக்கிறது. விவசாய உள்கட்டமைப்பை பெருக்குவதற்கும், சாலை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் மத்திய அரசாங்கம் தன் நிதியில் இருந்துதான் செலவழிக்கவேண்டுமே தவிர, பெட்ரோல், டீசல் மீது மேல்வரியை விதித்து, அதை சாதாரண பாமர மக்கள் தலையில் சுமத்துவது சரியல்ல. மேலும், இந்த மேல்வரியில் மாநில அரசுகளுக்கும் பங்கு இல்லை.

பெட்ரோல் மீது ஒரு லிட்டருக்கு ரூ.33-ம், டீசல் மீது ஒரு லிட்டருக்கு ரூ.32-ம் மேல்வரி விதிக்கப்பட்டு மத்திய அரசாங்கம் ஆண்டுக்கு ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் கோடி வசூலிக்கிறது என்று ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக, சில காலத்திற்கு மட்டுமே மேல்வரி விதிக்கப்படவேண்டும் என்பது இப்போது நடைமுறையில் இல்லை. தொடர்ந்து விதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. எனவே, இப்போதைய சூழ்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான மேல்வரியை ரத்துசெய்து, இறக்குமதி வரிகளை குறைத்து எல்லா பொருட்கள் மீதான சரக்கு சேவை வரியையும் சற்று குறைத்தால் விலைவாசி குறையும். மக்களும் நிம்மதி பெருமூச்சுவிட முடியும். இது குறுகியகால தீர்வுதான். ஆனால், நீண்டகால தீர்வு பெட்ரோல்-டீசலுக்கு பதிலாக மாற்று எரிபொருள் பயன்பாட்டுக்கு வருவதுதான்.

Next Story