தொழில் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு!


தொழில் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு!
x
தினத்தந்தி 10 Aug 2021 7:10 PM GMT (Updated: 2021-08-11T00:40:12+05:30)

கடந்த 4-ந்தேதியன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கியமுடிவுகள் எடுக்கப்பட்டன.

கடந்த 4-ந்தேதியன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கியமுடிவுகள் எடுக்கப்பட்டன. சட்டசபை 13-ந்தேதி கூடுகிறது. அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு அடுத்தநாள் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்ற முடிவுகள் அறிவிக்கப்பட்டதோடு, மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியதுபோல, தொழில்படிப்புகளிலும் அவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் மசோதா இந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என அரசுப்பள்ளிக்கூட மாணவர்கள் மனம்மகிழும் வகையில் ஒரு நல்லஅறிவிப்பு வெளியிடப்பட்டது.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் ஒரேதேர்வு என்ற முறையில் தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு என்று அழைக்கப்படும் ‘நீட்’ தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், ‘நீட்’ தேர்வு வேண்டாம், பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப்படிப்பு மாணவர்சேர்க்கை அமையவேண்டும் என்பது தி.மு.க., அ.தி.மு.க. உள்பட அனைத்துகட்சிகளின் வேண்டுகோளாக இன்றளவும் இருக்கிறது. அதுதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நிலைப்பாடு. முதல் 3 ஆண்டுகளில் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களாலும், கிராமப்புற மாணவர்களாலும் ‘நீட்’ தேர்வில் வெற்றிபெற்று மருத்துவக்கல்லூரிகளில் சேர முடியவில்லை. 2017-ம் ஆண்டில் 7 அரசுப்பள்ளி மாணவர்களும், 2018-ம் ஆண்டில் 5 மாணவர்களும், 2019-ம் ஆண்டில் 2 மாணவர்களும்தான் மருத்துவப்படிப்பில் சேரமுடிந்தது. இந்தநிலையை போக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசால், கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வில் வெற்றிபெற்ற அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு, அந்தவகையிலேயே மாணவர் சேர்க்கை நடந்தது.

இதன் காரணமாக அரசுப்பள்ளிக்கூடங்களில் படித்த 435 மாணவ-மாணவிகளுக்கு கடந்தாண்டு மருத்துவம், பல் மருத்துவக்கல்லூரிகளில் படிக்க இடம்கிடைத்தது. மருத்துவக்கல்லூரி மாணவர்களைப்போல என்ஜினீயரிங், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்சேர்க்கை மிக குறைவாகவே இருக்கிறது. அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளிலும் இந்த நிலைதான் இருக்கிறது என்ற வகையில், அங்கும் மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கொள்கைமுடிவை மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு எடுத்தது. இதுகுறித்து ஆராய்ந்து குறைந்தளவு மாணவர்கள் உள்ள நிலையிருந்தால், அதை சரிசெய்யவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைசெய்ய, டெல்லி ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஏ.முருகேசன் தலைமையிலான ஒரு ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

அந்த ஆணையம் தன் அறிக்கையை முதல்-அமைச்சரிடம் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், அரசுப்பள்ளிக்கூட மாணவர்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கீடுவேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. தமிழக அமைச்சரவை இதுகுறித்து ஆய்வுசெய்து இப்போது 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2 தேர்வு மாணவர்களில் 40 சதவீதம் பேர் அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் அதில் 6.4 சதவீதம் பேர்தான் கடந்தாண்டு தொழிற்கல்வி படிப்புகளில் சேர்ந்துள்ளனர் என்று இந்த ஆணையம் கண்டறிந்துள்ளது.

இந்தநிலையில் 37 ஆயிரத்து 579 பள்ளிகளில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, தொழிற்கல்வி கல்லூரிகளில் சேர 7.5 சதவீதம் ஒதுக்கீடு என்பது நிச்சயமாக வரவேற்கக்கூடியது. பாராட்டுக்குரியது. ஏழை-எளிய அரசுப்பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களுக்கு பெரும் பயனளிக்கக்கூடியது. ஆனால் இதுபோல 8 ஆயிரத்து 328 அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், கிராமப்புறங்களில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த ஒதுக்கீட்டின் பயனை அளிக்கவேண்டும் என்பதும் ஒரு கோரிக்கையாக இருக்கிறது. மேலும், மருத்துவப்படிப்புகளிலும் அரசுப்பள்ளிக்கூட மாணவர்களுக்கு அளிக்கப்படும் ஒதுக்கீட்டையும், அரசு உதவிபெறும் பள்ளிக்கூட மாணவர்களுக்கும், கிராமப்புறங்களில் உள்ள தனியார் பள்ளிக்கூட மாணவர்களுக்கும் விரிவுபடுத்துவது பற்றி தமிழக அரசு பரிசீலிக்கவேண்டும்.

Next Story