100 நாள் சாதனை மலர்கள், 100 ஆண்டுகளாய் மணம் வீசும்!


100 நாள் சாதனை மலர்கள், 100 ஆண்டுகளாய் மணம் வீசும்!
x
தினத்தந்தி 12 Aug 2021 8:58 PM GMT (Updated: 2021-08-13T02:28:57+05:30)

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்து, நாளை 14-ந்தேதியோடு 100 நாட்கள் நிறைவு பெறுகிறது. இந்த 100 நாட்களிலும் ஒரு நாள் பாக்கியில்லாமல், அவர் ஏதாவது புதிய அறிவிப்புகளை வெளியிட்டும், ஆய்வுக்கூட்டங்களை நடத்தியும், சுற்றுப்பயணங்களை மேற்கொண்டும் வந்திருக்கிறார். நாள் தவறினாலும், அவரிடம் இருந்து அறிவிப்புகள், உத்தரவுகள் வெளிவர தவறியதில்லை.

பொதுவாக பெரியவர்கள் மண்ணை விட்டு மறையும்போது, தன் பிள்ளைகளுக்கென வீடு, வாசல், சொத்துகளை வைத்துவிட்டு செல்வார்கள். ஆனால், இயற்கை எய்திய தி.மு.க. தலைவர் கருணாநிதி, தனக்கே உரித்தான “ஓய்வில்லா சூரியன்” என்ற புகழ் மகுடத்தை தன் மகன் மு.க.ஸ்டாலினுக்கு சூட்டிவிட்டு சென்றிருக்கிறார். கருணாநிதி எப்போதுமே மு.க.ஸ்டாலின் உழைப்பில் பெரும் மகிழ்ச்சி கொள்வார். அதனால்தான் அவர், “உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு.., அதன் பெயர்தான் மு.க.ஸ்டாலின்” என்று பிரகடனப்படுத்தியிருந்தார்.

அந்தவகையில், மு.க.ஸ்டாலின் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலான பொது வாழ்க்கையிலும் சரி, கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க. தலைவர் பொறுப்பை ஏற்று, இப்போது முதல்-அமைச்சர் ஆனதில் இருந்தும் சரி, உழைப்பு.. உழைப்பு..உழைப்பு.. என்பதையே தாரக மந்திரமாகக்கொண்டு செயல்படுகிறார். கடந்த ஏப்ரல் 6-ந்தேதி நடந்த தேர்தலுக்கு முன்பு தமிழகம் முழுவதும் ஓய்வில்லாமல் சுற்றி சுற்றிவந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற ஒரு புதிய திட்டத்தின்கீழ், ஒரு பெரிய பெட்டியில் மக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதிப்போடலாம். அந்த பெட்டியை பூட்டி, சாவி தன் கைவசமே இருக்கும்.
தன் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களில் அதற்கு தீர்வுகாணப்படும் என்று அறிவித்திருந்தார்.

அந்தவகையில், 4,57,645 மனுக்கள் பெறப்பட்டன. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு, முதல்-அமைச்சராக மே 7-ந்தேதி பொறுப்பேற்று நாளை 100 நாள் நிறைவடையும் நிலையில், அத்தனை மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு 3,66,040 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்ற அன்றே, தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, “அரிசி கார்டுவைத்திருக்கும் 2 கோடியே 7 லட்சத்து 67 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, அனைத்து மகளிருக்கும் அரசு போக்குவரத்து கழக சாதாரண நகர பஸ்களில் இலவச பயணம், மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கை
மனுக்கள் மீது உடனடி தீர்வுக்காக ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கம், அதற்கு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களுக்கான செலவினத்தை முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தின்கீழ் அரசே ஏற்பு” என்ற 5 அறிவிப்புகளை வெளியிட்டார்.

“கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலநிவாரணங்கள் அறிவிப்பு, கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்புநிதி, கல்வி மற்றும் விடுதி கட்டணங்கள் அரசு ஏற்பு, தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை, அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாமல் உறவினர் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளுக்கு பராமரிப்பு செலவாக மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்” என்ற மனிதாபிமானமிக்க அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த 100 நாட்களில் மொத்தம் 120-க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் பல அறிவிப்புகள் தேர்தலில் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளன. முதல் 100 நாள் சாதனைகள் மகத்தானது. இந்த சாதனை அடுத்த 5 ஆண்டுகளிலும் தினமும் தொடரவேண்டும், 100 ஆண்டுகள் இந்தசாதனை மலர்கள் மணம் வீசும் என்று தமிழக மக்கள் வாழ்த்துகிறார்கள

Next Story