வரி இல்லாமல், பெட்ரோல் விலையை குறைத்த பட்ஜெட் !


வரி இல்லாமல், பெட்ரோல் விலையை குறைத்த பட்ஜெட் !
x
தினத்தந்தி 13 Aug 2021 7:56 PM GMT (Updated: 13 Aug 2021 7:56 PM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பதவியேற்றபின் முதல் முறையாக நேற்று சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பதவியேற்றபின் முதல் முறையாக நேற்று சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே அ.தி.மு.க. அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், இந்த பட்ஜெட்டை முழு பட்ஜெட்டாக கருதமுடியாது. ஏனெனில் இது அடுத்த 6 மாதங்களுக்கான பட்ஜெட்தான் என்றவகையில், திருத்தப்பட்ட பட்ஜெட்தான். ஆனால் மிகவும் வித்தியாசமாக காகிதம் இல்லாத ‘இ-பட்ஜெட்’. அதாவது மின் நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது.

எதிர்காலம் தகவல் தொழில்நுட்ப காலம் என்ற வகையில் நமது சட்டமன்றத்தில் அதன் தொடக்கம் நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த 9-ந்தேதி 126 பக்கங்கள் கொண்ட தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எவ்வாறு தமிழக அரசு நிதி பற்றாக்குறையில் தடுமாறிக்கொண்டு இருக்கிறது என்று தெரிவித்த கருத்தை வைத்து, மக்கள், இந்த நிதி பற்றாக்குறையில் எப்படி தேர்தல் அறிக்கையில் கூறியதை அரசு நிறைவேற்றப்போகிறது? தமிழக அரசு, வருமானத்தை பெருக்க என்னென்ன வரிகளை, கட்டணங்களை உயர்த்துமோ? என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் இந்த நிதி நெருக்கடியிலும் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்பது மகிழ்ச்சிக்குரியது.

தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் என்பது 5 ஆண்டு ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றவேண்டியது. அதை முழுமையாக முதல் பட்ஜெட்டிலேயே எதிர்பார்க்கமுடியாது என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் எந்த வரிகளையும் உயர்த்தாமல் இன்ப அதிர்ச்சியாக தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பதற்கான அறிவிப்பை நிதி அமைச்சர் வெளியிட்டார்.

பெட்ரோல் மீதான வரியை மத்திய அரசாங்கம் அதிகரித்து, மாநில அரசுக்கு பகிர்ந்தளிக்காமல் பெருமளவில் பயன் அடைகிறது. பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசாங்கம்தான் பங்கெடுக்கவேண்டும். ஆனால் இந்த விலை உயர்வால் ஏழை-எளிய, நடுத்தர மக்களின் வலியை உணர்ந்து மாநில அரசின் வரியை 3 ரூபாய் அளவுக்கு குறைப்பதாகவும், இதனால் தமிழக அரசுக்கு ரூ.1,160 கோடி நிதிச்சுமை ஏற்படும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். பெட்ரோல் விலையை குறைத்த தமிழக அரசு விரைவில் டீசலுக்கும் வரியை குறைக்கும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. தேர்தல் அறிக்கையில் கூறியபடி ரூ.2,756 கோடி மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி மற்றும் 2-க்கும் குறைவாக குழந்தைகள் உள்ள மகளிர் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறையாக இப்போது அளிக்கப்படும் 9 மாத கால விடுமுறை, 12 மாதங்களாக உயர்த்தப்படுவதும் பெண்களுக்கு பெரும்பயன் அளிக்கும். கருணாநிதி தொடங்கிய ‘நமக்கு நாமே திட்டம்’, ‘அண்ணா மறுமலர்ச்சி திட்டம்’ ஆகியவற்றுக்கு புத்துயிர் அளித்திருப்பதன் மூலம் கிராமங்கள் இனி எல்லா வசதியையும் பெறுவதற்கு வாசல்கள் திறக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பை பெருக்கவும், தொழில்வளர்ச்சிக்கும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 1,100 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,000 கோடி செலவில் அறைகலன்களுக்கான (பர்னிச்சர்) சர்வதேச பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம் ரூ.4,500 கோடி முதலீடு ஈர்க்கப்படும். 3½ லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். விழுப்புரம், வேலூர், தூத்துக்குடி, திருப்பூர் மாவட்டங்களில் சென்னையில் இருப்பதுபோல தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களை கொண்ட ‘டைடல் பார்க்’குகள் அமைக்கப்படும். கோயம்புத்தூரில் பாதுகாப்பு கருவிகளுக்கான உற்பத்தி பூங்கா அமைக்கப்படும். திருவண்ணாமலை, தர்மபுரி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ‘சிப்காட்’ தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். இதுபோன்ற மேலும் பல மாவட்டங்களுக்கான தொழில் பூங்காக்கள் தொழில் வளர்ச்சிக்கு நிச்சயம் வித்திடுவதாக இருக்கும். சுற்றுச்சூழலுக்கு பெருமளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.92,529.43 கோடி நிதிப்பற்றாக்குறையிலும் மேலும் பல ஆக்கப்பூர்வமான அறிவிப்புகள் அனைத்து தரப்பையும் தொடும்வகையில் அறிவிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தகுந்ததாகும்.

Next Story