விவசாயிகளுக்கு ஏற்றம் தரும் வேளாண்மை பட்ஜெட் !


விவசாயிகளுக்கு ஏற்றம் தரும் வேளாண்மை பட்ஜெட் !
x
தினத்தந்தி 15 Aug 2021 10:30 PM GMT (Updated: 2021-08-16T04:00:06+05:30)

ஒவ்வொரு மதத்துக்கும் அந்த மதத்தின் புனித நூலே வழிகாட்டும். அதுபோல மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்கு, தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே, வழிகாட்டும் ஒளி விளக்காக திகழ்கிறது.

அந்தவகையில், தேர்தல் அறிக்கையில், வேளாண் உற்பத்தியை பெருக்கிடும் வகையிலும், விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையிலும் வேளாண்மைக்கென தனி நிதிநிலை தாக்கல் செய்யப்பட்டு, வேளாண் பணிகள் மேம்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதற்கு முன்னோடியாக வேளாண்மை துறையை வேளாண்மை-உழவர் நலத்துறை என்று மு.க.ஸ்டாலின் பெயர் மாற்றம் செய்தார்.

தி.மு.க. ஆட்சி அமைந்து, 100-வது நாள் ஆன நாளில் வேளாண்மைக்கான முதல் தனி நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையில், பெரும்பாலான அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலேயே அமைந்துள்ளது. மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 7-ந்தேதி திருச்சியில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் நிகர பயிரிடும் பரப்பு இப்போது 60 சதவீதமாக இருக்கிறது. இதனை 75 சதவீதமாக உயர்த்தும் இலக்கை 10 ஆண்டுகளுக்குள் எட்ட இருக்கிறோம் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் சாகுபடி செய்து, அதை நிறைவேற்றும் அறிவிப்புதான் முதல் அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தற்போதுள்ள 12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்துக்களிலும் ஆண்டுக்கு 5-ல் ஒரு பங்கு என்ற விகிதத்தில் பல்வேறு முன்னேற்ற திட்டங்களை நிறைவேற்றி, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் பட்டதாரிகளை தொழில்முனைவோராக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மிகவும் பாராட்டுக்குரியது. ஒரு லட்சத்து 10 ஆயிரம் விவசாயிகளை ஒருங்கிணைத்து, 1,120 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைத்து வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்ய ஒரு குழுவுக்கு ரூ.5 லட்சம் வீதம் மூலதனநிதி வழங்கப்படுவது வரவேற்புக்குரியது. இவ்வளவு நாளும் தமிழ்நாட்டில் பனை மரத்தின் சிறப்பை எல்லோரும் கூறிக்கொண்டிருந்தநிலையில், பனை மர பரப்பை அதிகரிக்க 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளையும், 1 லட்சம் பனங்கன்றுகளையும் முழு மானியத்தோடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பனை வெல்லத்தை நியாயவிலை கடைகள் மூலம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரகடனப்படுத்தியிருப்பது பனை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க நிச்சயம் உதவும். பனை மரத்தை வெட்டுவதற்கு தடை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல் விவசாயிகளின் கொள்முதல் விலையை, சன்ன ரக நெல்லுக்கு ரூ.2,060 ஆகவும், சாதாரண ரக நெல்லுக்கு ரூ.2,015 ஆகவும் உயர்த்தும் வகையில் ஊக்கத்தொகை அதிகரிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோல துவரை, உளுந்து, பச்சைப்பயிறு போன்ற பயிறு வகைகளை குறைந்தபட்ச ஆதார விலையுடன் 61 ஆயிரம் டன் அளவுக்கு கொள்முதல் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதுபோல படிப்படியாக அனைத்து விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்யவேண்டும் என்பதும் விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது. தென்னை சாகுபடி பரப்பை அதிகரிக்க 17 லட்சம் தரமான தென்னங்கன்றுகள் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் சிறப்பு ஊக்கத்தொகையாக ஒரு டன்னுக்கு ரூ.150 வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுபோல காய்கறி சாகுபடியை உயர்த்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வேளாண்மையில் மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. விவசாயிகளை பொறுத்தமட்டில் தங்களுடைய வருமானம் உயரவேண்டும் என்பதே பெரும் நோக்கமாக இருக்கிறது. அந்தவகையில், இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகளையெல்லாம் நிறைவேற்றினால் விவசாயிகளின் வருமானம் பெருகும், வாழ்க்கை தரம் உயரும், வாழ்வு ஏற்றம் பெறும். கிராமப்புற இளைஞர்கள் வேலைதேடி நகரங்களுக்கு செல்லாத நிலையை உருவாக்கும்.

Next Story