ராஜேந்திர சோழனை இனி தமிழ்ச்சமுதாயம் மறக்காது!


ராஜேந்திர சோழனை இனி தமிழ்ச்சமுதாயம் மறக்காது!
x
தினத்தந்தி 16 Aug 2021 10:58 PM GMT (Updated: 2021-08-17T04:28:20+05:30)

வரலாறுகள் மறைக்கப்படவோ, மறுக்கப்படவோ கூடாது. தமிழ்நாட்டுக்கு, தமிழ் மொழிக்கு, தமிழர்களுக்கு தொண்டாற்றியவர்களை, புகழ் சேர்த்தவர்களை காலம் என்றென்றும் மறக்க முடியாது, மறக்கவும் கூடாது. தமிழர்கள் நன்றி மறவாதவர்கள். அதனால்தான் சரித்திர காலத்தில் தமிழ்ச் சமுதாயத்துக்கு பங்காற்றியவர்களையும் இப்போதும் சரி, எப்போதும் சரி தமிழ் கூறும் நல்லுலகம் நினைவில் வைத்துப் போற்றுகிறது.

அண்ணா ஆட்சியில் நடந்த உலக தமிழ் மாநாட்டின்போது திருவள்ளுவர், அவ்வையார், கம்பர், டாக்டர் ஜி.யு.போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், வ.உ.சி., வீரமாமுனிவர், கண்ணகி ஆகியோருக்கு மெரினா கடற்கரையில் சிலையெடுக்கப்பட்டுள்ளது. கல்லணை கட்டிய கரிகால் சோழனையும், முல்லைபெரியாறு அணை கட்டிய ஆங்கிலேயர் பென்னி குயிக்கையும் இன்றும் அப்பகுதி விவசாயிகள் மறக்காமல் நன்றியோடு வழிபடுகிறார்கள்.

பண்டைய காலத்தில் சேர-சோழ-பாண்டிய மன்னர்கள் எவ்வளவோ வீரதீர செயல்களில் கோலோச்சியிருந்தாலும், தமிழ் மொழிக்கு அவர்கள் ஆற்றிய தொண்டும், தமிழ்ச் சமுதாயத்துக்கு ஆற்றிய சேவையையும், இறை தொண்டையும் இன்று மட்டுமல்ல, இனிவரும் காலங்களிலும் போற்றி மகிழவேண்டும்.

இதுபோல அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய பிரகதீசுவரர் கோவில் இருக்கிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ராஜேந்திர சோழன் பிறந்தநாளான ஆடி மாதம் திருவாதிரையன்று விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் கொண்டாடப்படும் இவ்விழாவை அரசு விழாவாக கொண்டாடவேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் மட்டுமல்லாமல் வரலாற்று ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை பரிசீலித்து, கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீசுவரர் கோவிலில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை விழாவை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள்துறை சார்பில் அரசு விழாவாக கொண்டாட உத்தரவிட்டுள்ளார். இது தமிழக மக்களின் மனதில் மகிழ்ச்சி பெருக்கெடுத்தோட செய்துள்ளது.

தமிழகத்தில் சோழ மன்னர் பரம்பரைக்கு பார்போற்றும் புகழை ஈட்டி கொடுத்த மன்னர் ராஜராஜ சோழன் (கி.பி.947-1014), காலத்தால் அழிக்க முடியாத தஞ்சை பெரிய கோவிலை கட்டி சாதனை படைத்தார். பிரமாண்டமான அந்த கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டி, 2010-ம் ஆண்டு செப்டம்பர் 26-ந்தேதி தஞ்சையில் நடந்த விழாவில், தஞ்சை கோவில் கோபுர வடிவத்துடன் கூடிய சிறப்பு தபால் தலையையும், 5 ரூபாய் நாணயத்தையும் மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டார்.

மன்னர் ராஜராஜனின் மகனான மன்னர் ராஜேந்திரன், மிகப்பெரிய கப்பல் படையுடன் சென்று கீழ்த்திசை நாடுகளை வென்று ‘கடாரம் கொண்டான்’ என்ற சிறப்பு பெயரையும், இந்தியாவின் வடமாநிலங்களை வெற்றி வாகை சூடி ‘கங்கைகொண்டான்’ என்ற பட்டப்பெயரையும் பெற்றார். அவர் உருவாக்கிய தலைநகரான அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டான், 250 ஆண்டுகள் சோழர்களின் தலைநகராக விளங்கியது. தந்தையைப் போலவே அவர் கங்கைகொண்டானில் கட்டிய மிகப்பெரிய கோவில், உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது.

மன்னர் ராஜேந்திரன் ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திர நாளில் பிறந்தவர். அவரது பிறந்தநாள் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போது அறிவித்திருப்பது, சோழர் பரம்பரைக்கு புகழ் மகுடம் சூட்டுவதாக அமைந்திருக்கிறது. ராஜராஜனுக்கு விழா எடுத்தவர் கருணாநிதி. ராஜராஜனின் மகன் ராஜேந்திரனுக்கு விழா எடுப்பவர் கருணாநிதியின் மகன். தந்தை வழியில் தனயன் என்பது ராஜராஜன், அவரது மகன் ராஜேந்திரன் என்ற வரலாற்றிலும், கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரது வாழ்விலும் மெய்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் கருணாநிதி வழியில் மு.க.ஸ்டாலின் செல்கிறார் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

Next Story