மோடிக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் கிடைத்த பெருமை !


மோடிக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் கிடைத்த பெருமை !
x
தினத்தந்தி 19 Aug 2021 1:18 AM GMT (Updated: 2021-08-19T06:48:20+05:30)

“பாரத பூமி பழம்பெரும் பூமி. நீரதன் புதல்வர், இந் நினைவகற்றாதீர். பாரதநாடு பார்க்கெல்லாம் திலகம். நீரதன் புதல்வர், இந் நினைவகற்றாதீர்” என்று மகாகவி பாரதியார் பெருமைப்பட பாடிய புகழ்மிகு நாடு இந்தியா. சரித்திர காலந்தொட்டு தன்னிகரற்று விளங்கிய இந்தியாவை 190 ஆண்டுகள் ஆங்கிலேயர் ஆட்சி செய்து வந்தனர்.

வாரன் ஹேஸ்டிங்க்ஸ் தொடங்கி 42 கவர்னர் ஜெனரல்கள், வைஸ்ராய்கள் நாட்டை ஆண்டுக்கொண்டிருந்தனர். இந்த 190 ஆண்டுகளாக எண்ணற்ற சுதந்திர போராட்ட தியாகிகள் ரத்தம், வியர்வை சிந்தி, ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளை சந்தித்து, சிறைச்சாலைகளில் கொடுமை அனுபவித்து போராடியதின் விளைவாகத்தான் சுதந்திரம் கிடைத்தது. சும்மா கிடைத்ததல்ல இந்த சுதந்திரம்.

1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி உலகமே உறங்கிக்கொண்டிருந்த நள்ளிரவில் இந்தியா மிக மகிழ்ச்சியோடு சுதந்திரத்தை பெற்றது. நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகின்றன. 75-வது ஆண்டு விழா மகிழ்ச்சியோடு கொண்டாடப்பட்டது. இந்தியாவில் ஜனநாயக காற்று குளுமையாக வீசிக்கொண்டிருக்கிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த நன்னாளில் தேசிய கொடியை ஏற்றும் பெருமையை பெற்றார். முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு சுதந்திரம் பெற்ற நாளின் நள்ளிரவில் பேசியதை குறிப்பிட்டு, புகழ்மிக்க நூற்றாண்டு கொண்டாடும் வகையில் எல்லோரும் உழைக்கவேண்டும் என்று மோடி பேசியிருக்கிறார். ‘அனைவரும் ஒன்றாக இணைவோம். அனைவரும் உயர்வோம். அனைவரும் வளர்ச்சி அடைவோம். அனைவரும் முயற்சி செய்வோம்’ என்று கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்திருக்கிறார். சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை முதல்-அமைச்சர்கள் ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்தது மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதிதான். ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர நாளில் முதல்-அமைச்சரும், ஜனவரி 26-ந்தேதி குடியரசு தினத்தன்று கவர்னரும் கொடி ஏற்றலாம் என்ற கோரிக்கையை அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியிடம் வலியுறுத்தி, அவரையும் ஏற்றுக்கொள்ளச்செய்து, 1974-ம் ஆண்டு சுதந்திர தினம் முதல் தமிழகத்தில் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் சுதந்திர தினத்தன்று முதல்-அமைச்சர்கள் கொடி ஏற்றும் வாய்ப்பை பெற்றுத்தந்தவர் கருணாநிதிதான் என்பது சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படத்தக்க ஒன்றாகும்.

இந்தியா சுதந்திரம் பெற்று 25-ம் ஆண்டு வெள்ளி விழாவையும், 50-ம் ஆண்டு பொன் விழாவையும் முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி கொண்டாடினார். தற்போது 75-வது ஆண்டு பவளவிழா அவரது மகன் மு.க.ஸ்டாலினால் கொண்டாடப்பட்டது. இந்த 75-ம் ஆண்டு சுதந்திர தினம் என்பது பல சிறப்புகளை பெற்றது. மதுரைக்கு மகாத்மா காந்தி வந்த நேரத்தில், அங்குள்ள ஏழை தமிழர்களை பார்த்து, அவர்கள் அணிந்திருந்த உடையை கண்டு மனம் வருந்தி, தனது உயர்ரக ஆடையை களைந்து, அரை ஆடையை அணியத்தொடங்கிய 100-ம் ஆண்டு, இந்த ஆண்டு தான். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் கொண்டாடப்படுவது இந்த ஆண்டுதான். மகாகவி பாரதியார் மரணம் அடைந்து, 100 ஆண்டுகள் ஆவதும் இந்த ஆண்டுதான். அந்தவகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக சிறப்பான பெருமையை பெற்றிருக்கிறார். ஏதோ விழா கொண்டாடினோம், கொடி ஏற்றினோம் என்று விட்டுவிடாமல், 75-வது சுதந்திர தினத்தை காலம் என்றென்றைக்கும் நினைவுகூரும் வகையில் ஒரு நினைவு தூணையும் அமைத்து, திறந்து வைத்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மற்றொரு அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. இந்திய விடுதலை போராட்டத்துக்கு தமிழக தியாகிகள் அளித்த பங்களிப்பு குறித்த முழுமையான ஆவணம் ஒன்றை தமிழக அரசு தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிடும் என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் இப்போதைய சந்ததிகள் மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததிகளும் அது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்தியா முழுவதும் இந்திய நாட்டின் சுதந்திரத்துக்கு தமிழகத்தின் பங்களிப்பை மனதில்கொள்வதற்கு பெரிதும் உதவும்.

Next Story