27 சதவீத இடஒதுக்கீடு தேவைதான்; ஆனால் 50 சதவீதம் வேண்டும்!


27 சதவீத இடஒதுக்கீடு தேவைதான்; ஆனால் 50 சதவீதம் வேண்டும்!
x
தினத்தந்தி 19 Aug 2021 7:37 PM GMT (Updated: 2021-08-20T01:07:58+05:30)

இடஒதுக்கீடு முறையின் பிதாமகன் தந்தை பெரியார்தான் என்பதை தமிழ் சமுதாயம் என்றைக்கும் மறக்காது.

இடஒதுக்கீடு முறையின் பிதாமகன் தந்தை பெரியார்தான் என்பதை தமிழ் சமுதாயம் என்றைக்கும் மறக்காது. 13-12-1925 அன்று அவர், “எப்போது ஒருவனுக்கு என்று, தனி மதம், தனி சாதி, தனி வகுப்பு என பிரிக்கப்பட்ட பின்பு, அவன் தனது மதம், தனது சாதி, தனது வகுப்புக்கு என்று உரிமைகேட்பதில் என்ன தவறு இருக்கமுடியும்?” என்று எழுதியிருந்தார். சமூகம், பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு ரீதியாக பள்ளத்தில் விழுந்துகிடக்கும் சமுதாயங்களை கைதூக்கி மேலே கொண்டுவருவது இடஒதுக்கீடுதான். இடஒதுக்கீடுக்கு என்று ஒரு நீண்டநெடிய வரலாறு இருக்கிறது.

நீதிக்கட்சியின் சார்பாக பனகல் அரசர் முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டவுடன் 21-9-1921-ல் இடஒதுக்கீடு திட்டம் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது. அது நிறைவேறாத நிலையில், நீதிக்கட்சியின் அமைச்சரவையில், இடம்பெற்றிருந்த எஸ்.முத்தையா முதலியார்தான் 16-3-1928-ல் இடஒதுக்கீடு தொடர்பாக அரசாணையை வெளியிட்டு அமல்படுத்தினார். தொடர்ந்து ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சற்று கூடுதலாக அமல்படுத்தினார்.

இந்தநிலையில், 1951-ம்ஆண்டு சுப்ரீம்கோர்ட்டில், “சென்னை மாநில அரசு கடைப்பிடித்துவரும் வகுப்புவாரி இடஒதுக்கீடுமுறை செல்லுபடி ஆகாது” என்றுவந்த தீர்ப்பை எதிர்த்து, பெரியார், அண்ணா ஆகியோர் போராட்டங்களை நடத்தினர். அந்தநேரம் பெருந்தலைவர் காமராஜர், பிரதமர் நேருவிடம் இடஒதுக்கீடு பற்றிய தேவையை அழுத்தமாக சொல்லி, அரசியலமைப்பு சட்டத்தில் முதல் திருத்தத்தை கொண்டுவரச்செய்தார்.

அதன்பிறகு, 1971-ல் தி.மு.க. ஆட்சிக்காலத்தில், பிற்படுத்தப்பட்டோருக்கு 31 சதவீதம், தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவீதம் என்று கருணாநிதி சமூகநீதி அடிப்படையில் இடஒதுக்கீட்டு முறையை கொண்டுவந்தார். எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதம், தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவீதம் என்று இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஐகோர்ட்டு வழங்கிய ஒரு தீர்ப்பின் அடிப்படையில் இந்த இடஒதுக்கீட்டோடு பழங்குடியினருக்கும் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கூடுதலாக ஒரு சதவீதம் ஒதுக்கப்பட்டது. 1989-ல் பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீதத்தை இரண்டாக பிரித்து, பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் என்று ஒதுக்கப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 சதவீதத்தில்தான் இப்போது வன்னியர்களுக்கு 10.5 சதவீதமும், சீர்மரபினருக்கு 7 சதவீதமும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசாங்கத்தால் 27 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது.

அதுவும் மருத்துவக்கல்லூரிகளில், அகிலஇந்திய ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாமல் இருந்தது. இதை எதிர்த்து தமிழ்நாட்டிலிருந்து போர்க்குரல் கிளம்பியது. சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பல வழக்குகளுக்கு, 27-7-2020 அன்று அகில இந்திய தொகுப்புக்கு அளிக்கப்படும் மருத்துவக்கல்லூரி இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு இடஒதுக்கீடு உரிமை இருக்கிறது என்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது.

மு.க.ஸ்டாலினும், தி.மு.க.வும், எடப்பாடி பழனிசாமியும், அ.தி.மு.க.வும், திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணியும் எடுத்த கடுமையான முயற்சிகளாலும், தி.மு.க. தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பாலும் கிடைத்த பலனால், “இந்த ஆண்டு முதல் மருத்துவப்படிப்புக்காக அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதமும் வழங்கும்முறை அமல்படுத்தப்படும்” என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் இளநிலை மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்ட 1,500 மாணவர்களும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்களில் 550 மாணவர்களும், முதுநிலை மருத்துவப்படிப்பில் 2,500 இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களும், 1,000 பொருளாதாரத்தில் நலிந்தபிரிவு மாணவர்களும் என 5,550 மாணவர்கள் பலனடைவார்கள்.

27 சதவீத இடஒதுக்கீடு கிடைத்தது நிச்சயமாக மகிழ்ச்சிக்குரியது. என்றாலும், தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாததால், பிற்படுத்தப்பட்டோர் மக்கள் எவ்வளவு சதவீதம்? என்பது தெரியாவிட்டாலும், தொடக்கப்பள்ளி மாணவர்கள் சேர்க்கையில் 71 சதவீதம் பிற்படுத்தப்பட்டோர் என்பதையும் கருத்தில்கொண்டு, தமிழக அரசு வழங்கும் 50 சதவீத இடத்தையாவது மத்திய அரசாங்கம் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கவேண்டும் என்பதுதான் பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.

Next Story