இந்தியா - அமெரிக்கா உறவுக்கு இவர்தான் பாலம்!


இந்தியா - அமெரிக்கா உறவுக்கு இவர்தான் பாலம்!
x
தினத்தந்தி 20 Aug 2021 7:55 PM GMT (Updated: 2021-08-21T01:25:58+05:30)

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே இன்று நேற்றல்ல, காலம் காலமாக நல்லுறவு நிலவிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே இன்று நேற்றல்ல, காலம் காலமாக நல்லுறவு நிலவிக் கொண்டிருக்கிறது. வர்த்தக உறவு மட்டுமல்லாமல், கல்வி, சுற்றுலா, தொழில் முதலீடுகள், வேலைவாய்ப்பு என்பது உள்பட ராஜ்ய உறவுகளிலும் இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பர உறவு நிலவிவருகிறது. கொரோனா பாதித்துள்ள இந்த நேரத்திலும், கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரையில் இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படவில்லை.

அமெரிக்காவின் 9-வது பெரிய வர்த்தக பங்குதாரராக இந்தியா விளங்குகிறது. கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் ரூ.10 லட்சத்து 95 ஆயிரம் கோடி அளவுக்கு அமெரிக்கா இந்தியாவுடன் பொருட்கள் மற்றும் சேவை வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளது. இதில், ரூ.6 லட்சத்து 55 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில், அமெரிக்காவிலிருந்து ரூ.4 லட்சத்து 39 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக அதிகாரப்பூர்வ அறிவிப்பே தெரிவிக்கிறது. ஆக, இந்தியா, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் மதிப்பைவிட ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்பே அதிகம்.

அமெரிக்காவில் 42 லட்சம் இந்தியர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருசில இடங்களில் இந்தியர்களின் வாக்குகள்தான் செனட்டுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கிறது. ஆண்டுதோறும் ஏறத்தாழ 2 லட்சத்துக்கு மேல் மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் படித்து வருகிறார்கள். அமெரிக்க நிறுவனங்களின் தொழில் முதலீடுகள் இந்தியாவில் இருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையே சுற்றுலா பயணிகளும் போய் வந்து கொண்டிருக்கிறார்கள்.

குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த நேரத்திலும் சரி, 46-வது ஜனாதிபதியாக இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோபைடன் என்றாலும் சரி, இந்திய பிரதமர் நரேந்திரமோடியுடன் நட்புறவுடனேயே இருந்து வருகிறார்கள். அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். ஜோபைடன் பதவியேற்றவுடன் 55 இந்தியர்களை முக்கிய பொறுப்பில் நியமித்திருக்கிறார். இப்படி நீண்ட நெடுங்காலமாக நட்புணர்ச்சிகளும், இரு நாடுகளின் உறவு மேம்படுவதற்கு அமெரிக்காவில் நியமிக்கப்பட்டிருக்கும் இந்திய தூதர் மற்றும் இந்தியாவில் நியமிக்கப்படும் அமெரிக்க தூதரின் பங்கு அளப்பரியது.

இந்த நிலையில், இதுவரை டிரம்ப் ஆட்சி காலத்தில், இந்தியாவில் அமெரிக்க தூதராக இருந்த கென்னத் ஜஸ்டர், டிரம்ப் தேர்தலில் தோல்வியடைந்தவுடன் தன் பதவியை துறந்து அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். இப்போது, 26-வது இந்திய தூதராக, 2013-ம் ஆண்டு முதல் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரின் மேயராக உள்ள எரிக் கர்செட்டியை ஜனாதிபதி ஜோபைடன் நியமித்துள்ளார். இவருடைய நியமனம் சம்பிரதாயப்படி, செனட் உறுதி செய்யப்பட்ட பிறகுதான் அவர் இந்தியாவுக்கு வந்து பதவியேற்க முடியும்.

எரிக் கர்செட்டி, ஜோபைடனுக்கும், கமலா ஹாரிசுக்கும் மிகவும் நெருக்கமானவர். அமெரிக்காவின் 2-வது பெரிய நகரமான லாஸ்ஏஞ்சல்சில்தான் ஹாலிவுட் இருக்கிறது. மிகவும் புகழ்பெற்ற மேயராக அவர் விளங்குகிறார். ஜோபைடனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைத்ததில் இவருக்கு முக்கிய பங்குண்டு. அவருக்கான பிரசார பீரங்கியாக திகழ்ந்தார். துணை ஜனாதிபதிக்கான 4 பேர் கொண்ட தேர்வுக்குழுவில் எரிக் கர்செட்டியும் ஒருவர். பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். 12 ஆண்டுகள் உளவுப்பிரிவு அதிகாரியாகவும் இருந்திருக்கிறார். ஜனாதிபதி ஜோபைடனுடனும், துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுடனும் எந்த நேரத்திலும் டெலிபோனில் தொடர்பு கொள்ளும் உரிமை படைத்தவர். எரிக் கர்செட்டி அமெரிக்காவில் வாழும் புலம் பெயர்ந்த மக்களுக்கான ஆதரவாளர்.

இத்தகைய சூழ்நிலையில், எரிக் கர்செட்டி அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நியமனம் பெற்றபிறகு, இருநாடுகளின் உறவுகள் உச்சம் பெறும். நல்லெண்ணம் இன்னும் மேம்படும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாக மட்டுமல்லாமல், முழு நம்பிக்கையாகவும் இருக்கிறது.

Next Story