அரசு சொத்துகளை பணமாக்கும் திட்டம்!


அரசு சொத்துகளை பணமாக்கும் திட்டம்!
x
தினத்தந்தி 27 Aug 2021 9:00 PM GMT (Updated: 27 Aug 2021 9:00 PM GMT)

இங்கிலாந்து நாட்டில் பல்வேறு துறைகளில் 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை நடத்தும் பெரிய தொழிலதிபர் ரிச்சர்டு பிரான்சன் கூறிய ஒரு கருத்து மிகவும் சிந்திக்கத்தக்க வகையில் உள்ளது.

இங்கிலாந்து நாட்டில் பல்வேறு துறைகளில் 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை நடத்தும் பெரிய தொழிலதிபர் ரிச்சர்டு பிரான்சன் கூறிய ஒரு கருத்து மிகவும் சிந்திக்கத்தக்க வகையில் உள்ளது. ‘எல்லோருக்கும் பயனளிக்கும் வகையில் அரசும், தொழிலும் ஒன்றிணைந்து செயல்படுவதுதான் இப்போது நமக்கு தேவை’ என்று கூறியிருக்கிறார். கொரோனாவால் பொருளாதாரமே சரிந்து, அரசின் வருவாய் பெரிதும் குறைந்துள்ளநிலையில், அதை சரிகட்டுவதற்காக அதாவது, தேசிய அரசு சொத்துகளை பணமாக்கும் திட்டத்தை இப்போது நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

அரசுக்கு வருவாயை பெருக்க வேண்டுமென்றால், வரிவருவாய் மூலம் பெருக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம். ஆனால் நிச்சயமாக இப்போது இருக்கும் வரிவிகிதத்தை கூட்டவேண்டும், அல்லது புதியவரி விதிப்புகளை அறிவிக்க வேண்டும். மக்களால் நிச்சயம் அதை தாங்கிக்கொள்ள முடியாது. மூலதன செலவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றால், வரி விதிக்காமல் மாற்று வழிக்கான சிறந்த வழி, பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அரசின் பங்குகளை விற்பது ஒன்று. ஆனால் அப்படி விற்றால் அது அரசின் கையைவிட்டு பங்குகள் போய்விடும் என்றநிலையில், இப்போது அறிவித்திருக்கும் திட்டம் அரசின் சொத்துகளை விற்பது அல்ல.

அந்த சொத்துகளின் உரிமை அரசு கையிலேயே இருக்கும். ஏறத்தாழ ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு குத்தகைக்கு விடுவது போலத்தான் இந்த புதிய திட்டம். இதன்கீழ் அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான அரசு சொத்துகளை குத்தகைக்கு விடும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட்டார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன். இதன்படி, இந்த நிதி ஆண்டில் அதாவது 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ரூ.88 ஆயிரம் கோடி அளவுக்கு அரசின் சொத்துகள் குத்தகைக்கு விடப்பட இருக்கிறது.

குத்தகை காலம் முடிந்த உடன் சொத்துகளை அரசிடம் திரும்ப ஒப்படைத்து விட வேண்டும். இது புதிய திட்டம் அல்ல. ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவித்த திட்டம்தான். சாலைகள், ரெயில்வே, மின்சார உற்பத்தி-பகிர்மானம், தொலைதொடர்பு, கிட்டங்கிகள், சுரங்கங்கள், இயற்கை எரிவாயு குழாய்கள், விமான போக்குவரத்து, நகர்ப்புற ரியல் எஸ்டேட், துறைமுகங்கள் போன்றவை இவ்வாறு குத்தகைக்கு விடப்பட இருக்கிறது. 25 விமான நிலையங்கள், 31 பெரிய துறைமுகங்கள், 900 நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் இதில் முக்கியமானதாகும்.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, திருச்சி உள்பட 6 விமான நிலையங்கள், 491 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள், நீலகிரி மலை ரெயில் போன்றவை இந்த திட்டத்தில் வர வாய்ப்பு இருக்கிறது. இந்த திட்டங்கள் 12 அமைச்சகங்களுக்கு உட்பட்ட 20 பிரிவுகளில் வரும். இந்த ஆண்டு ரூ.88 ஆயிரம் கோடி அளவிலான சொத்துகள் குத்தகைக்கு விடப்படும் என்றால், எந்தெந்த சொத்துக்கள் என்று அடையாளம் காண்பதிலும், அதற்கு எவ்வளவு மதிப்பு என்று நிர்ணயிப்பதிலும் அரசு மிகதீவிரமாக நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலையில் இருக்கிறது.

அந்தந்த துறையில் உள்ள சொத்துகளை குத்தகைக்கு எடுக்கும் நிறுவனங்கள் நிபுணத்துவம் பெற்றவையாக இருக்கும் என்பதால். அந்த சொத்துக்களை திறம்பட பயன்படுத்தி, நிர்வாகத்தை மேற்கொள்ளும். “இவ்வாறு புதிய வழிகளில் நிதி திரட்டுவதன் மூலமாக அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கும்நிலையில், மக்களுக்காக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும், சமூக நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று குறிப்பிட்ட நிதி மந்திரி, அரசு-தனியார் பங்களிப்பு மூலமாக சமூக பொருளாதார வளர்ச்சி ஏற்படும், மக்களின் வாழ்க்கைத்தரமும் உயரும்” என்று நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருக்கும் இந்த நிலையில் இதைவிட வேறு ஒரு நல்ல வழியை நிச்சயமாக மத்திய அரசாங்கம் காணமுடியாது என்ற வகையில், இந்த திட்டம் வரவேற்புக்குரியது என்றாலும் பணியாளர்களுக்கு வேலை இழப்பு, வருமான இழப்பு இல்லாத நிலையையும் மக்களுக்கு பாதிப்பும் கூடுதல்செலவும் பணச்சுமை இல்லாத வழிகளையும் மத்தியஅரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

Next Story