மலைவாழ் மக்களை தேடிச்செல்லும் கலெக்டர், தபால்காரர் !


மலைவாழ் மக்களை தேடிச்செல்லும் கலெக்டர், தபால்காரர் !
x
தினத்தந்தி 30 Aug 2021 8:55 AM GMT (Updated: 2021-08-30T14:25:44+05:30)

சீன தத்துவமேதையான லாவோ சூ கூறிய தத்துவங்களில் ஒன்று, “மக்களிடம் செல், அவர்களோடு வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்கு தெரிந்ததிலிருந்து தொடங்கு” என்பதாகும்.

சீன தத்துவமேதையான லாவோ சூ கூறிய தத்துவங்களில் ஒன்று, “மக்களிடம் செல், அவர்களோடு வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்கு தெரிந்ததிலிருந்து தொடங்கு” என்பதாகும். இதைத்தான் மறைந்த அறிஞர் அண்ணா, தன் தம்பிகளுக்கு வழங்கிய அறிவுரையாக, “மக்களிடம் செல், மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ், மக்களுக்கு பணியாற்று” என்று எப்போதும் கூறுவார். அதை அடிப்படையாக வைத்துத்தான், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “மக்களைத்தேடி மருத்துவம்” என்ற திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு மற்றும் பாபநாசம் ‘அப்பர் டேம்’ தபால் அதிகாரி கிறிஸ்துராஜா ஆகியோர், மலைவாழ் மக்களை தேடிச்சென்று மகத்தான சேவையை புரிந்து வருகிறார்கள். 5 மாதங்களுக்கு முன்பு கலெக்டர் விஷ்ணு, பாபநாசம் மலைப்பகுதியிலுள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில், அடர்ந்த காடுகளில் வசிக்கும் காணி இன மக்களை பல கிலோ மீட்டர் தூரம் நடந்துசென்று சந்தித்தார். அங்குள்ள இஞ்சிக்குழி என்ற குடியிருப்பில் வாழும் 9 குடும்பங்களை சேர்ந்த மலைவாழ் மக்களை சந்தித்து, “உங்களுக்கு என்ன தேவை?” என்று கேட்டார். அவர்கள், “மின்விளக்கு வேண்டும்” என்று கேட்டவுடன், ஒவ்வொரு வீட்டிற்கும் சூரிய வெப்பம் மூலம் மின்விளக்கு வசதியை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார். அங்கு வாழும் 110 வயது மூதாட்டி குட்டியம்மாளுக்கு, உடனடியாக முதியோர் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டார். அந்தப்பகுதி மலைவாழ் மக்கள், மாவட்ட கலெக்டருக்கு மனதார நன்றி தெரிவித்தார்கள்.

இதுமட்டுமல்லாமல், மலைப்பகுதியில் வங்கி சேவை கிடையாது என்பதால், மணியார்டர் மூலம் முதியோர் உதவித்தொகையான 1,000 ரூபாயை மாதாமாதம் அனுப்பவும் அவர் ஏற்பாடு செய்தார். இந்தத்தொகை பாபநாசம் அப்பர் டேம் தபால் அலுவலகம் மூலமாகத்தான் வழங்கப்படவேண்டும். அங்கு ஒரே ஆளாக பணிபுரியும் தபால் அதிகாரியான கிறிஸ்துராஜா, மாதம் ஒருமுறை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில், தனக்கு காலை உணவு, மதிய உணவு, முதியோர் உதவித்தொகை மற்றும் அலுவல் நோட்டுகளை எடுத்துக்கொண்டு, பாபநாசம் அணையை படகு மூலம் கடந்து, 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து அடுத்தப்பகுதிக்கு செல்கிறார். இஞ்சிக்குழியில் மூதாட்டி குட்டியம்மாளை சந்தித்து ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு, அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு பாபநாசம் அணையின் மறுகரைக்கு மாலை 5 மணிக்குள் படகு மூலம் வந்து வீடு திரும்புகிறார்.

55 வயதான தபால் அதிகாரி கிறிஸ்து ராஜாவும் காணி இனத்தை சேர்ந்தவர்தான். மாவட்ட கலெக்டர் மற்றும் பாபநாசம் அப்பர் டேம் தபால் அதிகாரி ஆற்றிய, ஆற்றிக்கொண்டிருக்கும் சேவை நிச்சயமாக அளப்பரியது. அரசு அதிகாரிகள் பற்றி அந்தப்பகுதி ஏழை மலைவாழ் மக்களுக்கு ஒரு உயர்ந்த எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோல, சென்னை திருவான்மியூர் தபால் அலுவலகத்தில் தபால்காரராக பணிபுரியும் எம்.மூர்த்தி, தான் தபால் கொடுக்கும் வீடுகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி வருகிறார். அங்குள்ள முதியோர்களுக்கு மருந்து-மாத்திரை வாங்கிக் கொடுப்பது, அவர்களுக்காக, தபால் அலுவலகம் மற்றும் வங்கிச்சேவைகளை செய்துகொடுப்பது போன்ற உதவிகளை ஆற்றிவருகிறார். அதுமட்டுமல்லாமல், ஆங்காங்கு வீடுகளில் கிடைக்கும் பழைய துணிகளை சேகரித்து, சாலையோர ஆதரவற்ற மக்களுக்கு வழங்குகிறார். வயதானவர்களை அவ்வப்போது குளிப்பாட்டி விடுகிறார். பாலிதீன் ஷீட்டுகளை வாங்கி தைத்து அவர்களுக்கு மழை நேரத்தில் மூடிக்கொள்ள ஆடையாக வழங்குகிறார்.

இவருடைய சேவையை கேள்விப்பட்ட தலைமை செயலாளர் இறையன்பு, அவரை தன் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டி கவுரவித்துள்ளார். மக்கள் சேவையாற்றும் இதுபோன்றவர்களை ‘ரோல் மாடல்’களாக கொண்ட அனைத்து அரசு ஊழியர்களும் அண்ணா சொன்னபடி, மக்களிடம் சென்று அவர்களுக்காக பணியாற்றும் சேவையை தொடங்கினால், மக்களின் மனம் மகிழும், அவர்களின் சேவையும் என்றென்றும் நினைவில் கொண்டு பாராட்டப்படும், போற்றப்படும்.

Next Story