கோவில்கள் தோறும் தலவிருட்சங்கள்!


கோவில்கள் தோறும் தலவிருட்சங்கள்!
x
தினத்தந்தி 30 Aug 2021 8:04 PM GMT (Updated: 30 Aug 2021 8:04 PM GMT)

இந்து மதம் ஒரு புனிதமான மதம். இயற்கையை கடவுளாக வணங்கியவர்கள் இந்துக்கள்.

இந்து மதம் ஒரு புனிதமான மதம். இயற்கையை கடவுளாக வணங்கியவர்கள் இந்துக்கள். ஆதிகாலத்திலேயே அறிவியலை ஆன்மிகமாக்கி, பலனடைய செய்த பெருமை இந்து மதத்தையே சாரும். நமது முன்னோர்கள், “கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று சொல்லி, ஒவ்வொரு ஊரிலும் விநாயகர் கோவில்கள், அம்மன் கோவில்கள், சிவன் கோவில்கள், வைணவ கோவில்கள் என்று தொடங்கி, ஒவ்வொரு ஊருக்கும் உள்ளூர் தெய்வங்கள் என்ற வகையில், சில கோவில்களையும் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு கோவிலும் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற 3 விஷயங்களால் சிறப்பு பெருகிறது. மூர்த்தி என்பது மூல ஸ்தானத்தில் வீற்றிருக்கும் தெய்வத்தையும், தலம் என்பது தல விருட்சத்தையும் (மரம்), தீர்த்தம் என்பது கோவில் தெப்பக்குளத்தையும் குறிக்கும். தலவிருட்சம் என்பது கோவில் கட்டுவதற்கு முன்பு இறைவன் எழுந்தருளியிருந்த இடம் என்பதும், அதனால் தெய்வத்துக்கு ஒப்பான சக்தி அதற்கும் உண்டு என்பதும், நோய்களை தீர்க்கும் சக்தி அதற்கு உண்டு என்பதும் ஒரு ஐதீகம். கோவில் கருவறையிலுள்ள மூலவர் அருகில் செல்ல முடியாது என்பதால், தலவிருட்சம் அருகில் சென்று சுற்றிவருவதன் மூலம் மூலவரை அருகில் தரிசித்த பாக்கியத்தை பெறமுடியும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

கோவில்கள் தோறும் ஏதேனும் ஒரு தலவிருட்சத்தை வைத்து இந்துக்கள் வழிபாடு செய்து வந்தார்கள். அதனால்தான், மாரியம்மனை வேப்பிலைக்காரி என்று பூஜித்து வந்தார்கள். சிவ சொரூபத்தை குறிப்பது அரசமரம். சக்தி சொரூபத்தை குறிப்பது வேம்பு மரம். இவை இரண்டும் இணைந்திருக்கும் இடங்கள் சிவசக்தி உறையும் இடங்களாக கருதப்பட்டு வழிபடுகிறார்கள். அரச மரத்தடியில் விநாயகரை வழிபடுகிறார்கள். கொன்றை, வில்வம், வன்னி, மகிழ், ஆல் போன்றவை சிவனுக்குரிய தலவிருட்சங்களாகவும், சந்தனமரம், அத்திமரம், விஷ்ணு பகவானுக்குரிய தல விருட்சமாகவும் விளங்குகிறது. இதுதவிர கடம்ப மரம், நெல்லிமரம், பலாமரம், மாமரம், பனை மரம், இலந்தை மரம், வேப்பமரம் போன்ற 121 மரங்கள் திருக்கோவில்களில் தல விருட்சங்களாக கருதப்படுகின்றன.

இந்தநிலையில், பல கோவில்களில் தலவிருட்சங்கள் இல்லாதநிலை பக்தர்களின் மனங்களை வெகுவாக காயப்படுத்தியது. இத்தகைய சூழ்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு, இந்து சமய அறநிலையத்துறை வளாகத்தில் ஒரு லட்சம் தலவிருட்ச மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தொடங்கிவைத்தார். திருக்கோவில்களில், அந்தந்த கோவிலுக்குரிய தல விருட்சமரம் நட்டு பராமரிக்கப்படும், தேவை ஏற்படின் கூடுதல் மரக்கன்றுகள் வழங்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். நிச்சயமாக இது பக்தர்களின் மனம் மகிழும் திட்டம். இந்த ஒரு லட்சம் மரக்கன்றுகளை வனத்துறையிடம் இருந்து இந்து சமய அறநிலையத்துறை பெற்று, ஒவ்வொரு கோவில் பிரகாரத்திலும் என்னென்ன தல விருட்ச மரங்கள் நடப்பட வேண்டுமோ, அந்தந்த தல விருட்ச மரக்கன்றுகளை நடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்து 612 கோவில்கள் இருக்கிறது. இந்த கோவில்களில் மட்டுமல்லாமல், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத லட்சக்கணக்கான கோவில்களில் தலவிருட்ச மரக்கன்றுகளை நடுவதற்குரிய ஏற்பாடுகளை அறநிலையத்துறையே மேற்கொள்ள முடியுமா?, அல்லது பக்தர்களின் துணையோடு உள்ளாட்சி அமைப்புகளே ஏற்றுக்கொள்ள முடியுமா? என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும். மரக்கன்றுகளை நடுவதோடு மட்டும் பணி முடிந்துவிடவில்லை. அந்த மரக்கன்றுகள் தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்படவேண்டும். கோவில்களில் பக்தர்கள் தன்னார்வ அடிப்படையில் குழுக்களாக இணைந்து உழவாரப்பணியில் ஈடுபடுவதில் ஆர்வம்காட்டி வருகின்றனர். ஒவ்வொரு கோவில்களிலும் உழவாரப்பணிகளுக்கான குழு அமைக்கப்பட்டு, அந்த பக்தர்கள் தலவிருட்ச மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி, உரமிட்டு பராமரிக்கும் பணிகளையும் மேற்கொள்ள செய்யவேண்டும் என்பது அரசின் முயற்சிக்கு துணைபோவதாக அமையும். அனைத்து கோவில்களிலும் தலவிருட்ச மரங்கள் தழைத்து வளர்ந்து பக்தர்களின் வாழ்வையும், மனதையும் மகிழச் செய்யட்டும், செழிக்கச்செய்யட்டும்.

Next Story