சீமை கருவேல மரத்துக்கு வருகிறது முடிவு!


சீமை கருவேல மரத்துக்கு வருகிறது முடிவு!
x
தினத்தந்தி 31 Aug 2021 7:18 PM GMT (Updated: 31 Aug 2021 7:18 PM GMT)

தமிழக சட்டசபையில் இப்போது விவாதங்கள் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருக்கிறது.

தமிழக சட்டசபையில் இப்போது விவாதங்கள் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருக்கிறது. கடந்த வாரம் சனிக்கிழமை திருவாடனை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் இராம.கருமாணிக்கம் பேசும்போது, ஆர்.எஸ்.மங்கலம் ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்த, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கருவேல மரங்களை ஆரம்பத்தில் இருந்தே நான் எதிர்த்தேன். பசுமைக்காடுகள் அமைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு காலத்தில் ஏரிகளில் கருவேல மரங்களை நட்டுவிட்டார்கள். அப்போதே நான் அதை எதிர்த்தேன். ஆனால் அதற்குள் வேறுவழியில்லாமல் மரங்களை நட்டு பணிகள் முடிவுபெற்றன.

தற்போது அதன் விளைவு என்னவென்றால் கருவேல மரங்கள் பசுமையாக இருப்பது மட்டுமல்ல, பயிர்கள் சேதமடைந்துவிடுகின்றன. அது மட்டுமல்ல, கருவேல மரங்களில் நீள நீளமான முள்கள் உள்ளன. அது வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு, விவசாயி சேற்றில் உழுகின்றபோது அவரது ஊறிய கால்களில் அந்த முள்கள் ஏறிக்கொள்கின்றன. மூன்றாவதாக முன்பெல்லாம் ஏரியில் குளித்துவிட்டு வந்தேன், ஏரியில் தண்ணீர் மொண்டு வந்தேன், ஏரியில் துணி துவைத்து வந்தேன் என்றெல்லாம் சொல்வார்கள்.

தற்போது எந்த ஏரியும் கால்வைக்கமுடியாத அளவுக்கு கெட்டுபோய்விட்டது. என்னுடைய இலாகாவை பொறுத்தவரையில் நான் அதில் மிகவும் திடமாக இருக்கிறேன். இருக்கின்ற கருவேல மரங்களை சிறிது, சிறிதாக அகற்றியாகவேண்டும். அதை ஒரு திட்டமாகவே எடுத்து செய்யலாம் என்று கருதிக்கொண்டிருக்கிறேன். எனவே அந்தந்த பஞ்சாயத்துகள் அம்மரங்களை வெட்டி எடுத்துக்கொண்டு, அந்த வருவாயை அவர்கள் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை. இடத்தை காலி செய்து கொடுத்தால் பரவாயில்லை என்று நினைக்கிறேன் என்று பதில் அளித்தார்.

ஆக சீமை கருவேல மரத்தை அகற்றுவதை தமிழக அரசு ஒரு கொள்கையாகவே எடுத்திருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அமைச்சர் கூறிய உறுதிமொழியை விரைவில் நிறைவேற்றத்தொடங்கவேண்டும். கருவேல மரங்களை தமிழ்நாடு முழுவதும் அகற்றவேண்டும் என்ற கோரிக்கைக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில், சீமை கருவேல மரங்களை தமிழகம் முழுவதும் அகற்றவேண்டும் என்று 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பு 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய 13 மாவட்டங்களில் சீமை கருவேலமரம் அகற்றப்படவேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. நடிகர் சூர்யா கூட, சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி இளைஞர்கள் இயக்கமாக மாறவேண்டும் என்று அப்போது கோரிக்கை விடுத்திருந்தார்.

சீமை கருவேல மரம் ஒரு நச்சு மரம். நிலத்தடி நீரை வீணாக உறிஞ்சுவதோடு மட்டுமல்லாமல், அமைச்சர் துரைமுருகன் கூறுவதுபோல பல பாதகங்கள் இந்த மரங்களினால் உண்டு. இந்த மரங்களால் மண்ணில் மக்கும் தன்மை பாதிக்கப்படுகிறது. இந்த மரங்கள் அதிக வெப்பமாக இருப்பதால் இதில் பறவைகளாலும், பூச்சிகளாலும், தேனீக்களாலும் கூடு கட்டவோ, வாழவோ முடியாது. இதனால் பல்லுயிர் பாதிக்கப்படுகிறது என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

தமிழ்நாடு முழுவதும் சீமை கருவேல மரத்தை அகற்றுவதற்கு ஒரு விரிவான திட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட்டு, முயற்சிகள் தொடங்கப்படவேண்டும். சீமை கருவேல மரங்கள் வெட்டப்படும் இடங்களில் நீர் நிலைகளுக்குள் தவிர, மற்ற இடங்களில் பயன் உள்ள மற்ற மரங்களையும் ஏராளமாக நடவேண்டும். அமைச்சர் துரைமுருகனின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. சீமை கருவேல மரத்தை அகற்றுவதில் முனைப்போடு இருக்கும் அமைச்சர் துரைமுருகன், நீர்நிலைகளை பாழ்படுத்தி வரும் ஆகாய தாமரையை அகற்றுவதற்கும் திட்டம் வகுக்கவேண்டும் என்பதே அவர்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Next Story