சுப்ரீம் கோர்ட்டின் சூப்பர் சாதனைகள்!


சுப்ரீம் கோர்ட்டின் சூப்பர் சாதனைகள்!
x
தினத்தந்தி 1 Sep 2021 7:54 PM GMT (Updated: 2021-09-02T01:24:19+05:30)

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 4 தூண்களில், மிக முக்கியமான தூண் நீதிமன்றம்தான்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 4 தூண்களில், மிக முக்கியமான தூண் நீதிமன்றம்தான். நீதிமன்றத்தை நீதியின் கோவிலாகவும், அங்கு பணியாற்றும் நீதிபதிகளை நீதி தேவதையாகவும் தான் சமுதாயம் கருதுகிறது. அப்படிப்பட்ட நீதிமன்றத்தின் உச்சம் என்பது உச்சநீதிமன்றம் என்று கூறப்படும் சுப்ரீம் கோர்ட்டுதான். அத்தகைய சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் பல சூப்பர் சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. 9 நீதிபதிகள் அதாவது நீதிபதி அபய் சீனிவாஸ் ஓகா, விக்ரம்நாத், ஜிஜேந்திரகுமார் மகேஸ்வரி, ஹிமா கோலி, பி.வி.நாகரத்தினா, சி.டி.ரவிக்குமார், எம்.எம்.சுந்தரேஷ், பேலா எம்.திரிவேதி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் நீதிபதிகளாக பதவியேற்றனர்.

ஒரே நேரத்தில் 9 நீதிபதிகள் பதவியேற்றது இதுதான் முதல் முறை. சுப்ரீம் கோர்ட்டின் மொத்த நீதிபதிகள் பணியிடம் 34. இந்த 9 நீதிபதிகள் நியமனத்தையும், சேர்த்து இப்போது சுப்ரீம் கோர்ட்டில் 33 நீதிபதிகள் பணியாற்றுகிறார்கள். ஒரு காலி இடம் தான் இருக்கிறது. இந்த 9 பேர்களில் 3 பேர் பெண் நீதிபதிகள். அதில் ஒருவரான பி.வி. நாகரத்தினா 2027-ல் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார். அவர்தான் முதல் பெண் தலைமை நீதிபதியாக முத்திரை ஏற்பார். தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி இந்திரா பானர்ஜி மட்டுமே பெண் நீதிபதியாக இருக்கிறார். இந்த 3 பேரையும் சேர்த்தால் இதுவரை இல்லாத அளவு 4 பெண் நீதிபதிகள் இருப்பார்கள்.

நீதிபதிகள் பதவியேற்பு டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பானது இதுவே முதல் முறையாகும். கர்நாடகா ஐகோர்ட்டில் இருந்து தலைமை நீதிபதி அபய் சீனிவாஸ் ஓகா, நீதிபதி நாகரத்தினா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். நீதிபதி பேலா எம். திரிவேதி குஜராத் ஐகோர்ட்டில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவியேற்ற முதல் பெண் நீதிபதியாவார். பி.எஸ்.நரசிம்மா சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீலாக பணியாற்றியவர். சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி நீதிபதியாக நியமனம் பெறும் 9-வது நீதிபதி இவர் தான்.

இதுமட்டுமல்லாமல் இந்த 9 நீதிபதிகளில் 3 பேர் தலைமை நீதிபதியாக பதவியேற்கும் வாய்ப்பை பெறுவார்கள். நீதிபதி விக்ரம்நாத், நீதிபதி நாகரத்தினா, நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் தங்கள் பதவிக்காலத்தின் இறுதியில் தலைமை நீதிபதி பொறுப்பு ஏற்க இருக்கிறார்கள். நீதிபதி விக்ரம்நாத் 7 மாதம் 21 நாட்களும், நீதிபதி நாகரத்தினா 36 நாட்களும், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா 6 மாதம் 4 நாட்களும் பணி நிறைவு பெறும் முன்பு தலைமை நீதிபதிகளாக பொறுப்பு ஏற்க இருக்கிறார்கள்.

சுப்ரீம் கோர்ட்டில் இப்போது 3 பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டாலும் முதல் பெண் நீதிபதி சுப்ரீம் கோர்ட்டு அமைக்கப்பட்டப்பிறகு, 39 ஆண்டுகள் கழித்துதான் நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் கவர்னராக இருந்த எம்.பாத்திமா பீவி முதல் பெண் நீதிபதியாக சுப்ரீம் கோர்ட்டில் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு 7 பேர் பெண் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அப்படி கணக்கு பார்த்தால் சுப்ரீம் கோர்ட்டின் 77 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை 11 பெண் நீதிபதிகள் தான் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று பதவியேற்ற பெண் நீதிபதி நாகரத்தினாவிடம் பத்திரிகையாளர்கள் பேட்டி கண்டபோது, “ஒரு நீதிபதி என்ற முறையில் நான் தன்னடக்கத்தோடும், நேர்மையோடும் இருக்கவேண்டும். நீதிபதிகள் அவர்கள் வழங்கும் தீர்ப்புகளால் மட்டுமே அறியப்படவேண்டும் என்பதே தவிர, ஊடகங்களிடம் பேசுவதால் அல்ல” என்று கூறியதிலிருந்து, இவர் தனக்கென ஒரு பாணியை வகுத்துக்கொள்வார் என்று தெரிகிறது. இந்தியா முழுவதிலும் உள்ள ஐகோர்ட்டுகளிலும் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்றாலும், சென்னை ஐகோர்ட்டில் இப்போது உள்ள 56 நீதிபதிகளில் 13 நீதிபதிகள் பெண் நீதிபதிகள் என்பது தமிழ்நாட்டுக்கு மிகவும் பெருமையளிக்கத்தக்கவகையில் இருக்கிறது.

Next Story